Monday, June 27, 2022

உன்னை சுற்றும் உலகம்

ஏப்ரல் 29, 1977யில் வெளிவந்த இப்படத்தை ஜி.சுப்பிரமணிய ரெட்டி இயக்கியுள்ளார்.

ஹீரோயின் சப்ஜெக்ட். ஜெயலலிதாதான் படத்தில் எல்லாமே. அவர் எப்படி தம்முடைய தம்பி தங்கைகளைப் படிக்க வைத்து பெரிய மனிதர்கள் ஆக்குகிறார், அவர்கள் எப்படி துரோகிகள் ஆகி பின் திருந்துகிறார்கள் என்பதே கதை. கமல் ஜெயாவுடைய தம்பியாக வருகிறார். தங்கையாக குட்டிப் பெண் ஸ்ரீ தேவி. 

சாவித்திரி, விதுபாலா, பிரமிளா, விஜயகுமார், சண்முக சுந்தரம், ஏ.வி.எம். ராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, சண்முக சுந்தரம், அசோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயாவுக்கு உதவும் வேடத்தில் சோ. கௌரவ நடிகர். சச்சு ஜோடி.

சோவுடைய வசனம் ஒன்று கவனிக்கத்தகுந்தது. 

"தங்கச்சிதான் சினிமால நடிச்சுடுச்சே. இனிமே எலக்சன்ல நின்னா ஓட்டு போடுவீங்க இல்ல?" 


Monday, December 9, 2019

சர்க்கார் புகுந்த வீடு

சோவுடைய அரசியல் நகைச்சுவை நாவலிது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வீட்டில் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருக்கும் ஐந்து குடும்பங்களின் பொறுப்புகளை அரசு ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குளறுபடிகளைப் பற்றிய கதை. சோவுடைய "சட்டையர்" அபாரம். அனைத்து அரசியல்வாதிகளையும் ரசிக்கும்படி கிண்டலடிக்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் நமக்கு இது சோவுடைய கற்பனையா அல்லது உண்மையில் நடந்ததா எனச் சந்தேகம் வருமளவுக்கு அரசியல்வாதிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் சோ இதை எழுதியுள்ளார்.

அக்கால அரசியல் புரிந்தவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டிய அளவு சரக்குள்ள புத்தகம். ஆனால் சற்றே நீண்ட நாவல்.  

Wednesday, October 16, 2019

அடுத்த ஆட்சி நமதே

தமிழக முதல்வராக விரும்பும் ஒன்பது அரசியல்வாதிகளுக்கும் வாயுதாசன் என்ற பெயரில் தாயத்து அனுப்பி சில வழிமுறைகளைப் பின்பற்றும்படி எழுதுகிறார்கள் ஜக்கு, கந்தசாமி, மற்றும் ஆர்.என்.ஆர். அரசியல்வாதிகள் அதை உண்மை என நம்பி அடிக்கும் கூத்தே முழுக்கதை.

ஜக்கு மூலம் மெட்ராஸ் பாஷையில் புகுந்து விளையாடுகிறார் சோ. தைரியமாக எல்லா அரசியல்வாதிகளையும் அவர்களுடைய உண்மையான குணாதிசயங்களையும் விமர்சிக்கிறார். இக்கதையைப் படிக்கும் நாம் அந்த அரசியல்வாதிகள் அனைவரும் சோ சொல்லியபடியே உண்மையில் நடக்கக் கூடியவர்கள் என்பதை மிகவும் சுலபமாக உணர முடிகிறது.

சோவைத் தவிர யாருக்கும் இந்த அளவு அரசியல்வாதிகளை நேரிடையாக நையாண்டி செய்யும் தைரியம் கிடையாது. வயிறு குலுங்கச் சிரிக்கும் நாம் நம்முடைய மற்ற வேலைகளை மறந்து இக்கதையை முழுவதுமாகப் படித்து முடிப்பதிலேயே ஈடுபடுவோம்.