Tuesday, November 22, 2016

சோ எழுதிய முதல் நாடகம்

கூத்தபிரான் மனஸ்தாபம் கொண்டு  நாடகம் எழுத மறுத்து விட, விவேகா ஃபைன்  ஆர்ட்ஸுக்கு கதை எழுத ஆளில்லை.

முன்பொரு சமயம் ஒய்.ஜி.பி.யின் நாடகத்தைப் பார்த்து ஒரே நாளில் ஒரு நாடகத்தை எழுதி ஒய்.ஜி.பி.யிடமே சோ கொடுத்திருந்தார்ஒய்.ஜி.பி. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த காகிதங்களும் தொலைந்து விட்டன. அந்த பழைய கதையை அடிப்படையாக வைத்து சோ ஒரு புது நாடகம் எழுதினார். தலைப்பு ஆங்கிலத்தில் – “If I get it”. இது நடந்த வருடம் 1957.

முதல் வருடத்திலேயே 50 முறை மேடை ஏறிச் சக்கை போடு போட்ட நாடகம். இந்த நாடகத்தின் கதை என்னவென தெரியவில்லை. ஆனால் ஒரு சுவையான சம்பவம். இந்த நாடகத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது. ஒரு முறை நாடகத்துக்கு தலைமை ஏற்ற வந்திருந்த ஒரு போலீஸ் மேலதிகாரி இதைப் பற்றி விமர்சிக்க, மேடையிலேயே சோ அவருக்கு பதிலடி கொடுத்தார்.


இளமையில் தாம் அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொண்டதாக பிற்காலத்தில் சோவே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு முன்பாகவே சோ எழுத ஆரம்பித்து விட்டார்.

அம்பி, நீலு, நானி, விஆர். சீனிவாசன், முத்து, ராதாகிருஷ்ணன் எல்லோரும் சேர்ந்து யங்மேன்ஸ் ஃபைன் ஆர்ட்ஸ் என்கிற குழுவை ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுக்காக சோ எழுதிக் கொடுத்த முதல் நாடகத்தின் பெயர் - கோரக் கொலை-  20 நிமிட நாடகம். எந்த வருடம் எனச் சரியாகத் தெரியவில்லை.

டாக்டர் வேஷதாரி என்கிற ஒரு மணி நேர நாடகத்தை சோ எழுதிக் கொடுக்க (1956), அதற்குப்  பல கல்லூரிகளுக்கிடையில் நடந்த போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

அதற்குப் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த நண்பர்கள், தாங்கள் படித்த விவேகானந்தா கல்லூரியின் நினைவாக "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்' என்று குழுவின் பெயரை மாற்றிவிட்டார்கள்.

இந்த இரு நாடகங்களுக்குப் பிறகு சோ கல்லூரிப் போட்டிக்கென்று இல்லமால் முழு நீள நாடகமாக எழுதிய முதல் நாடகம் தான் If I get it.

Friday, November 18, 2016

முதல் நாடகம்

1950 களின் ஆரம்ப வருடங்கள். தமிழகம் எங்கும் ஏராளமான நாடகக் குழுக்கள். டி.கே.எஸ்., மனோகர், சகஸ்ரநாமம், எம். ஆர். ராதா போன்றோர் நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த காலம். போதாததற்கு திரைப்படங்களில் 'பிஸி 'யாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களும் நாடகத்தில் ஆர்வம் காட்டி அவ்வப்போது நடித்து வந்தனர். இதைத் தவிர ஒய்.ஜி.பி., வி.எஸ்.ராகவன், சாம்பு நடராஜன், ராமகிருஷ்ண கிருபா, கே. பாலசந்தர், மேஜர் சுந்தர்ராஜன், சேஷாத்ரி என்று பலர் அமெச்சூர் நாடகக் குழுக்கள் மூலம் பல புதுப்புது நாடகங்கள் அரங்கேற்றிய காலக்கட்டம். அந்தக் காலக்கட்டத்தில்சோ அவர்களின் தம்பி ராஜகோபால் 'அம்பிஎன்ற பெயரில் பிரபலம்அவரும் நீலுநாணிவி.ஆர்.எஸ்போன்ற சில நண்பர்களும் சேர்ந்து 'விவேகா பைன் ஆர்ட்ஸ் க்ளப் ' என்ற குழுவை ஆரம்பித்தனர்இது நடந்த வருடம் 1957.

விவேகா பைன் ஆர்ட்ஸ் மூலம் தான் சோவின் நாடகப் பிரவேசம் ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர் பகீரதன் கல்கியில் எழுதிய 'தேன்மொழியாள் ' என்ற கதையைக்  கூத்தபிரான் 1957 யில்  நாடகமாக்கினார்.  கூத்தபிரான் பின்னாட்களில் பல நாடகங்களை வானொலியில் ஒலி பரப்பி பிரபலமானவர். 80களில் மாணவர்களாக இருந்தவர்கள் இவரை அறியாமல் இருக்க முடியாது. 'வானொலி அண்ணா' என்ற பெயரில் மாணவர்களிடையே அக்காலத்தில் இவர் ஒரு ரேடியோ சூப்பர் ஸ்டார்.

விவேகா பைன் ஆர்ட்ஸில் ஆர்வம் காரணமாக சோவும் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்கு முன் ஒய். ஜி. பி. நாடகக் குழுவில் மேடை நிர்வாகத்திற்கு உதவியதைத் தவிர, சோவுக்கு பெரிதாக நேரடி நாடக அனுபவம் கிடையாது.  'தேன்மொழியாள்' நாடகத்தில் சோவுக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாக்கப்பட்டது. சிறு வயதில் தம்மை பெரியவர்கள் அழைத்த பெயரான 'சோ' என்ற பெயரை தாமே சூட்டிக் கொண்டார். இப்படித்தான் ராமசாமிசோஆனார்.


ஒரே ஒரு சீனில் மட்டும் தலை காட்ட விருப்பம் இல்லாத சோ, தமக்கு 4-5 சீன்களிலாவது வரும்படி நாடகத்தை மாற்றாவிட்டால், நடுநடுவே உள்ளே புகுந்து குழப்பம் விளைவிப்பதாகக் கூத்தபிரானைப் பயமுறுத்தினார். அப்பாவியான கூத்தபிரானும் அதற்கு ஒப்புக் கொள்ள, சோவின் முதல் நாடகப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்தேறியது. சோ என்ற பாத்திரம் மெட்ராஸ் ரசிகர்களிடையே பிரபலமும் ஆனது.

அம்பி வைரம் என்ற கதாபாத்திரத்திலும், நீலு மிஸ்டர் ப்ளான் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

'தேன்மொழியாள்' நாடகத்தில் சோவுக்கு என்று ஒரு பாத்திரம் உருவானதால் அதை அவருடைய முதல் நாடகம் என்கிறோம். ஆனால் அதற்கு முன்பாகவே (1956) தேவனின் 'கல்யாணி' என்ற நாடகத்தில் போலீஸ் ஸ்டேஷனில் குறுக்கு விசாரணை செய்யும் சி.ஐ.டி. சந்துரு என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஒரு நாள் வராததால், சோ அப்பாத்திரத்தை ஒரு நாளைக்கு மட்டும் ஏற்று நடித்துப் பிளந்து கட்டினாராம்.


Tuesday, November 15, 2016

சோவின் நாடகங்களும் திரைப்படங்களும்

யாருக்குமே தெரியாத ஓர் உண்மையை இப்போது ஊர் அறிய சொல்கிறேன். திரு. சோ அவர்களின் துக்ளக் பத்திரிகை இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது என்றால் அதற்கு நான் ஒரு முக்கியமான காரணம். அந்த ரகசியத்தை முடிவில் தெரிவிக்கிறேன். அதற்கு முன்பாக சோவின் தாக்கம் என் மீது எப்படி விழுந்தது என்பதையும், இந்தத் தொடரின் நோக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

1995 வருடம் - கல்லூரியில் முதல் வருட மாணவனான நான் மயிலாப்பூர் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது , துக்ளக் ஆண்டு விழா மயிலையில் ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் அன்று மாலை நடைபெறப் போவதை அறிந்தேன். ஆர்வ மிகுதியால் அந்த விழாவுக்குச் சென்றேன். சோவின் பேச்சைக் கண்டு பிரமித்தேன். அவருடைய தைரியம், நேர்மை, அறிவாற்றல் , நகைச்சுவை என அனைத்துப், பரிமாணங்களையும் வெளிப்படுத்திய அவருடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.

அதன் பிறகு, தவறாமல் துக்ளக் வாசித்து வருகிறேன் - 20 வருடங்களுக்கும் மேலாக. சென்னையில் இருந்தால் கண்டிப்பாக ஆண்டு விழாவுக்கும் போகிறேன். துக்ளக் வாங்குவதற்காக டெல்லியில் 10 கி.மீட்டர்  தூரம் அலைந்து தேடிய அனுபவம் எல்லாம் உண்டு.  

பிறகு சோவின் நாடங்களை, அவர் 90களின் இறுதியில் கடைசியாக அரங்கேற்றிய போது காணும் பாக்கியம் பெற்றேன். அதன் பிறகு, அவர் எழுதிய புத்தகங்களையும் படித்தேன். மொத்தத்தில், பன்முகம் கொண்ட சோவின் அனைத்து முகங்களுக்கும் ரசிகன் நான்.

இன்றைய காலகட்டத்தில், சோவின் நாடகங்களைப் பற்றி பேசுபவர்கள் 'முகமது பின் துக்ளக்கைத் ' தவிர மற்ற நாடகங்களைப் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. அவருடைய திரைப்படங்களைப் பற்றியும் அவ்வளவாக இக்காலத்தில் யாரும் அறிந்து வைப்பதில்லை. அவருடைய பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், ஆன்மீக எழுத்தாளர் போன்ற திறன்களே சமீப வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. அவருடைய திரைப்படங்களையும் நாடங்களையும் பற்றி யாரும் எழுதியதாகவும் தெரியவில்லை. அதனால், அந்த முயற்சியில் நானே இறங்க தீர்மானித்தேன்.

நீங்கள் மேலே படிப்பதற்கு முன்பாக எச்சரிக்கிறேன். இது சோவைப் பற்றிய தொடர் என்பதால் மிகவும் சுவையாக இருக்கும் என யாரும் கற்பனை செய்ய வேண்டாம். நான் எழுதுகிறேன் என்பதால் சுமாராகத் தான் இருக்கும். :-)

முதல் பத்தியில் குறிப்பிட்ட ரகசியம் இது தான். கல்லூரி படித்து முடித்து நான் வேலை செய்ய ஆசைப்பட்ட இடம் துக்ளக் பத்திரிகை. ஏதோ சோவின் நல்ல நேரம். அவ்வாறு நடக்கவில்லை. அப்படி எதுவும் நடக்காமல், துக்ளக் நன்றாக நடைபெற விட்ட பெருமை என்னைச் சேரும் என நான் சொல்வதில் தவறு காண முடியுமா? :-)

சந்திப்போம்...