Tuesday, November 15, 2016

சோவின் நாடகங்களும் திரைப்படங்களும்

யாருக்குமே தெரியாத ஓர் உண்மையை இப்போது ஊர் அறிய சொல்கிறேன். திரு. சோ அவர்களின் துக்ளக் பத்திரிகை இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது என்றால் அதற்கு நான் ஒரு முக்கியமான காரணம். அந்த ரகசியத்தை முடிவில் தெரிவிக்கிறேன். அதற்கு முன்பாக சோவின் தாக்கம் என் மீது எப்படி விழுந்தது என்பதையும், இந்தத் தொடரின் நோக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

1995 வருடம் - கல்லூரியில் முதல் வருட மாணவனான நான் மயிலாப்பூர் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது , துக்ளக் ஆண்டு விழா மயிலையில் ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் அன்று மாலை நடைபெறப் போவதை அறிந்தேன். ஆர்வ மிகுதியால் அந்த விழாவுக்குச் சென்றேன். சோவின் பேச்சைக் கண்டு பிரமித்தேன். அவருடைய தைரியம், நேர்மை, அறிவாற்றல் , நகைச்சுவை என அனைத்துப், பரிமாணங்களையும் வெளிப்படுத்திய அவருடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.

அதன் பிறகு, தவறாமல் துக்ளக் வாசித்து வருகிறேன் - 20 வருடங்களுக்கும் மேலாக. சென்னையில் இருந்தால் கண்டிப்பாக ஆண்டு விழாவுக்கும் போகிறேன். துக்ளக் வாங்குவதற்காக டெல்லியில் 10 கி.மீட்டர்  தூரம் அலைந்து தேடிய அனுபவம் எல்லாம் உண்டு.  

பிறகு சோவின் நாடங்களை, அவர் 90களின் இறுதியில் கடைசியாக அரங்கேற்றிய போது காணும் பாக்கியம் பெற்றேன். அதன் பிறகு, அவர் எழுதிய புத்தகங்களையும் படித்தேன். மொத்தத்தில், பன்முகம் கொண்ட சோவின் அனைத்து முகங்களுக்கும் ரசிகன் நான்.

இன்றைய காலகட்டத்தில், சோவின் நாடகங்களைப் பற்றி பேசுபவர்கள் 'முகமது பின் துக்ளக்கைத் ' தவிர மற்ற நாடகங்களைப் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. அவருடைய திரைப்படங்களைப் பற்றியும் அவ்வளவாக இக்காலத்தில் யாரும் அறிந்து வைப்பதில்லை. அவருடைய பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், ஆன்மீக எழுத்தாளர் போன்ற திறன்களே சமீப வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. அவருடைய திரைப்படங்களையும் நாடங்களையும் பற்றி யாரும் எழுதியதாகவும் தெரியவில்லை. அதனால், அந்த முயற்சியில் நானே இறங்க தீர்மானித்தேன்.

நீங்கள் மேலே படிப்பதற்கு முன்பாக எச்சரிக்கிறேன். இது சோவைப் பற்றிய தொடர் என்பதால் மிகவும் சுவையாக இருக்கும் என யாரும் கற்பனை செய்ய வேண்டாம். நான் எழுதுகிறேன் என்பதால் சுமாராகத் தான் இருக்கும். :-)

முதல் பத்தியில் குறிப்பிட்ட ரகசியம் இது தான். கல்லூரி படித்து முடித்து நான் வேலை செய்ய ஆசைப்பட்ட இடம் துக்ளக் பத்திரிகை. ஏதோ சோவின் நல்ல நேரம். அவ்வாறு நடக்கவில்லை. அப்படி எதுவும் நடக்காமல், துக்ளக் நன்றாக நடைபெற விட்ட பெருமை என்னைச் சேரும் என நான் சொல்வதில் தவறு காண முடியுமா? :-)

சந்திப்போம்... 

6 comments:

  1. Nice humour befitting for a Tuqlak fan. cheers. Vazhga Vazhamudan.

    ReplyDelete
  2. சோ குழு சில வருடங்களுக்கு முன் ஐம்பதாம் ஆண்டுவிழா நடத்தினர். அப்பொழுது அவர்களது பல நாடகங்களை மீண்டும் நடத்தினர். “முகமது பின் துக்ளக்”, “மெட்ராஸ் பை நைட்”, “யாருக்கும் வெட்கமில்லை” உட்பட
    எட்டு நாடகங்கள் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்போதுதான் அவருடைய நாடகங்களை நேரில் பார்த்தேன்.

      Delete