Wednesday, December 7, 2016

டைரக்டரானார் சோ

விவேகா ஃபைன்  ஆர்ட்ஸின் நாடகங்களை என். எஸ். நடராஜன் என்பவரும், திரு. எஸ். வீ. வெங்கட்ராமன் அவர்களும் டைரக்ட் செய்து வந்தனர். பிறகு, கே. பாலசந்தர் Why Not?, Wait and See மற்றும் What for? நாடகங்களை இயக்கினார். அவருடைய பாணிக்கும், சோவின் குழுவிலிருந்த நடிகர்களின் பாணிக்கும் ஒத்து வராததால், அவர் ஒதுங்கிக் கொண்டார். பிறகு, சோ அவர்களே நாடகங்களை எழுதுவதோடு மட்டுமின்றி இயக்கவும் செய்தார்.

சோ எழுதிய நாடகங்கள் மொத்தம் 24. அதில் அவர் இயக்கிய நாடகங்களின் எண்ணிக்கை 18.

அவர் எழுதி இயக்கிய முதல் நாடகம் "சம்பவாமி யுகே யுகே". மேடையேறிய ஆண்டு 1964. கவனித்துப் பார்த்தால் இதுவும் தமிழ்த் தலைப்பு இல்லை.

மஹா விஷ்ணு ஊழலை ஒழிக்க மனிதனாக அவதரிக்கிறார். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர் அவதாரம் என்பதை அவருக்கு நாரதர் உணர்த்துகிறார். அப்போதிருந்து கடவுளும் ஊழலை ஒழிக்கப் படாத பாடு படுகிறார். ஆனால் கடைசி வரை அவரால் அதை ஒழிக்க முடியவில்லை; மாறாக அவருக்குப் பைத்தியக்காரப் பட்டம்தான் கிடைக்கிறது.

பீதாம்பரம் என்ற கேரக்டரில் சென்னை தமிழ் பேசி சோ கலக்குவார். கான்ட்ராக்டரின் செகரக்டரி - ஊழலின் மொத்த உருவம். நடுவில் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பழி கடவுள் மீது விழுவது தான் கதையின் கடைசிப் பகுதிகள்.

எப்போதுமே பகவத் கீதை பேசும் கேரக்டர் தாம் செய்யும் தவறுகளுக்கு ஏதாவது காரணங்கள் கண்டு பிடிப்பது அல்லது எல்லாவற்றையும் கடவுளைக் காரணம் காட்டுவது, ஒரு கட்டத்தில் கடவுளே ஊழலுக்கு எதிராக வெல்ல முடியாமல் நடந்த தவறுக்கு ஏதோ காரணம் கண்டுபிடித்து சமாதானம் அடைவது, அலுவலக  அதிகாரி, வேலை செய்யாத அரசு அலுவலர்கள், ஆபிஸ் பைல்களை விற்று காசாக்கும் பியூன், ஊழல் வாதிகளிடமே தம் சாமர்த்தியத்தால் உள் குத்து மூலம் சம்பாதிக்கும் சோ கேரக்டர் எனப் பல சுவாரசியமான பாத்திரங்களும் சம்பவங்களும் இந்நாடகத்தில் உண்டு.


பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது மேடை ஏற்றப்பட்ட நாடகம். முதலில் லைசன்ஸ் கொடுக்க அரசு மறுத்து அதன் பின் சோ கோர்ட் போய் நியாயம் நிலை நாட்டி எந்த வசனத்தையும் கட் செய்யாமல் மேடை ஏற்றினார்.

Thursday, December 1, 2016

சோவின் அடுத்தடுத்த நாடகங்கள்

If I get it? என்ற முதல் நாடகத்துக்குப் பிறகு சோ எழுதிய அடுத்த நான்கு நாடகங்களுக்கும் ஆங்கிலத் தலைப்பே வைக்கப்பட்டது. அந்த நாடகங்கள் - Don't Tell Anybody, Why Not?, Wait and See மற்றும் What for?.

Why Not?, What for? மற்றும்  Wait and See ஆகிய நாடகங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர். Why Not? நாடகத்தில் பாலசந்தர் ரிகர்சலில் நீக்கிய சில காட்சிகளை மேடையில் சோ புகுத்திவிட்டார். Wait and See நாடகத்தில் சில நகைச்சுவை காட்சிகளைப் புகுத்தும்படி பாலசந்தர் வற்புறுத்தப்பட்டார். இதனாலெல்லாம் அவருக்குச் சங்கடங்கள் உருவானது. அவர் விவேகா ஃபைன் ஆர்ட்ஸிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டார்.


Why Not? கூடு விட்டு கூடு பாய்வதைப் பற்றிய கதை. இந்நாடகத்தில் ஒரு புதுமை. கூடு விட்டு கூடு பாய முடியுமா என நாடகப் பாத்திரம் ஒன்று வினவ, ஏன் முடியாது என்று ஆடியன்ஸுக்கு மத்தியில் இருந்து இன்னொரு பாத்திரம் தோன்றுவதைப் போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 

டி. கே. சண்முகம் அவர்கள் ஒரு மேடையில் சோ ஆங்கிலத் தலைப்பு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார். இள வயது சோ அப்போது ஏட்டிக்குப் போட்டி என்ற மனோபாவத்தில் இருந்தார். அதனால் அந்த மேடையிலேயே இனி ஆங்கிலத் தலைப்பு வைப்பதில்லை என்று கூறி, தம்முடைய அடுத்த நாடகத்தின் தலைப்பையும் அங்கேயே அறிவித்தார். அது 'கோ வாடிஸ்' என்ற லத்தீன் மொழித் தலைப்பு. அதன் பொருள் 'எங்கே போகிறாய்?'.


இதற்கிடையே சோ ஒய். ஜி. பி. யின் நாடகங்களிலும் நடித்து வந்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி  வித்யாவதியும் அந்த நாடகக் குழுவில் நடித்து வந்தனர். அப்போது அவர்களுடன் சிறுமியான ஜெயலலிதாவும் வருவார். அப்போதிலிருந்தே சோவுக்கு ஜெயலலிதாவுடன் நட்பு உருவாகியது.

இந்த நாடகங்கள் முதலில் மேடையேறிய வருடங்கள்:

If I get it? - 1958
Don't Tell Anybody - 1960
Why Not? - 1960
Wait and See - 1961
What for? - 1962
கோ வாடிஸ் (Quo Vadis?) - 1963