Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1971யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.

Monday, August 14, 2017

சிநேகிதி

1970யில் வெளியான இப்படம் ஜி.ராமகிருஷ்ணன் இயக்கியது. ஜெமினி கணேசன், ரவிசந்திரன், சரோஜாதேவி, லட்சுமி ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.


இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. படத்தின் கதையோ சோவின் பாத்திரத்தைப் பற்றிய விபரங்களோ தெரியவில்லை.

எங்கள் தங்கம்

சில எம்.ஜி.ஆர். படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில எம்.ஜி.ஆர். படங்கள் அவருடைய ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்இப்படம் அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்திருக்காது என நினைத்தேன். ஆனால் இப்படம் ஒரு சூப்பர் ஹிட் படம் என்பதை அறிந்து அதிசயப்பட்டேன். ஒன்று இரண்டு பாடல்களைத் தவிர படத்தில் ரசிப்பதற்கு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க தி.மு.. அரசு கொள்கை பிரசார படம். அண்ணாவின் மேடைப் பேச்சு, கலைஞரின் காட்சிகள், போதாததற்கு எம்.ஜி.ஆர். நடிகர் எம்.ஜி.ஆராகவே இன்னொரு வேடத்தில் தோன்றி தி.மு.. கொள்கைகளைப் பரப்புகிறார்.

1970 அக்டோபரில் வெளிவந்த இப்படத்தை முரசொலி மாறன் எழுதியுள்ளார். தயாரிப்பும் அவரே. இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு. கலைஞர் ஆட்சிக் கொள்கையை விளக்க மாறன் தயாரித்த இப்படத்தில், பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோ ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். லாரி டிரைவர். ஆனால் பெரிய வீட்டில் நல்ல வசதியுடன் வாழ்கிறார். சென்னை சூட்டிலும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு அலைகிறார். என்ன லாஜிக்கோ?

எம்.ஜி.ஆருடைய கண் பார்வையற்ற தங்கையான புஷ்பலதாவை மானபங்க படுத்தும் .வி.எம்.ராஜன் மனம் திருந்தி அவரையே மணந்து கொள்கிறார். கொள்ளைக் கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு அவர் அவதிப்பட, திருட்டுப் பட்டத்தைத் தாம் சுமந்து கொண்டு உண்மையான குற்றவாளிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் கதையின் சுருக்கம்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். கதா காலட்சேபம் செய்வதாக வரும் காட்சி இந்தியர்களை எதற்கும் லாயக்கற்றவர்கள் என பறைசாற்றுகிறது. சென்சார் இதை எப்படி அனுமதித்தனர்?

லாறி என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரின் நண்பராகவும், லாரி க்ளீனராகவும் சோ வருகிறார். தேங்காய் சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, மனோரமாவை ஜோடியாக வைத்துக் கொண்டு நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.


அசோகன், மனோகர், வீ.எஸ். ராகவன் போன்ற நடிகர்களும் இப்படத்தில் உண்டு.  

தேடி வந்த மாப்பிள்ளை

1970 ஆகஸ்டில் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் முற்பகுதி நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. வழக்கமான மசாலா கதை.

எம்.ஜி.ஆருடைய தந்தையை யாரோ கொலை செய்து விட, அதைச் செய்தவர் மேஜர் சுந்தரராஜன் என எம்.ஜி.ஆர். அம்மா எம்.வி.ராஜம்மா நம்புகிறார். அவரைத் தேடி பட்டணம் வரும் எம்.ஜி.ஆர். அவருடைய மகளான ஜெயலலிதாவைக் காதலிக்கிறார். அவர் குற்றவாளி இல்லை எனத் தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே ஜெயலலிதாவுக்குத் தொலைந்து போன ஜோதி லட்சுமி அக்காவும், அவருடைய காதலரான சோவும். நடுவிலே அசோகன் புகுந்து குட்டையைக் கிளப்ப வழக்கம் போல கடைசியில் அவர் சிறை செல்ல, முடிவு சுபம்.


சோவுக்கு வாய்ப்பு படத்தில் குறைவு. அவர் தோன்றும் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், ஹை லைட்டாக எதுவுமில்லை. அவருடைய கேரக்டர் பெயர் கர்ப்பதன். பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஜோதி லட்சுமி அவருக்கு ஜோடி. படத்தின் முடிவில் சோ ஒரு சி..டி. இன்ஸ்பெக்டர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

என் அண்ணன்

1970 மே-யில் வெளியான திரைப்படம். . நீலகண்டன் இயக்கம். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

பூச்சி என்ற முழு அசட்டு கேரக்டரில் சோ. நகைச்சுவையோ வசனங்களோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சோ நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.

வழக்கமான மசாலா கதை. ஏழை எம்.ஜி.ஆர். தம்முடைய தங்கை விஜய நிர்மலாவைப் படிக்க வைக்கிறார். அவர் பணக்கார டாக்டர் முத்துராமனைக் காதலித்து மணந்து கொள்கிறார். அவர் மீது ஆசை வைத்திருந்த தேங்காய் சீனிவாசன் மூலம் எம்.ஜி.ஆர் தந்தை தான் தன்னுடைய கணவனைக் கொன்றவர் என்பதை அறிந்தவுடன், முத்துராமனுடைய தாயான எஸ்.என்.லட்சுமி மருமகளை விரட்டி விடுகிறார்.

தேங்காயைத் தாக்கி சிறை செல்லும் எம்.ஜி.ஆர். அங்கே தந்தையான டி.கே.பகவதியைச் சந்திக்கிறார். அவர் கொலை செய்யவில்லை என்பதை அறிகிறார்.

சிறையிலிருந்து வெளியே வரும் எம்.ஜி.ஆர். தம்முடைய காதலியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொலையாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து தந்தையை விடுதலையடைய வைக்கிறார். தங்கையும் அவர் கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளப் படுகிறார்.

நம்பியார் மற்றும் அசோகன் வில்லன்கள். சோ நம்பியாருடைய மகன். அவருக்கு ஜோடி கீதாஞ்சலி. பேபி ஸ்ரீதேவியும் படத்தில் உண்டு.


கே.வி.மகாதேவன் இசையில் பெரும்பாலான பாடல்கள் அருமை. அதிலும் "கடவுள் ஏன் கல்லானான் ", "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ", "நீல நிறம் " ஆகிய பாடல்கள் குறிப்பிட தக்கவை.

Sunday, August 13, 2017

சிவாஜி நாயகன் - சோ வில்லன்

விளையாட்டுப் பிள்ளை - சிவாஜி நாயகனாக நடித்த படத்தில் சோ வில்லனாக நடித்த படம் இது. அடிதடி வில்லன் இல்லையென்றாலும் வில்லன்தான், நகைச்சுவை வில்லன்.

பிப்ரவரி 1970யில் வெளிவந்த இப்படம் கொத்தமங்கலம் சுப்பு எழுத்தில், எஸ்.எஸ்.வாசன் திரைக்கதையில், .பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான அருமையான படம். கே.வி.மஹாதேவன் இசையில் "ஏரு பெருசா" உட்பட சில நல்ல பாடல்கள் படத்தில் உண்டு. சிவாஜி, பத்மினி, சோ, வி.எஸ்.ராகவன், ராகவனுடைய மனைவியாக நடிப்பவர் (பெயர் தெரியவில்லை), டி.எஸ்.பாலையா, மனோரமா, காஞ்சனா, சிவகுமார் என எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து மிகையின்றி நடித்துள்ளனர்.

படிக்காத சிவாஜியும்அந்த கிராமத்து பண்ணையார் வி.எஸ்.ராகவனுடைய மகளான பத்மினியும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். சிவாஜியுடைய பெரியப்பாவான டி.எஸ்.பாலையா நடுவில் புகுந்து சில குழப்பங்கள் ஏற்படுத்த, சிவாஜியும் பத்மினியும் ராகவன் சம்மதமின்றி கல்யாணம் செய்து கொள்கின்றனர். பாலையா சூழ்ச்சியால் அவர்களை ஊரும் குடும்பமும் ஒதுக்கி வைக்கின்றனர். இருந்த வீடும் பறிபோகிறது.

சில வருடங்கள் கழித்து, பண்ணையார் மனம் மாறி பேரன் பெயரில் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போகிறார். இன்னும் சில வருடங்கள் கழித்து, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்தான அரசன் ராமதாஸ் உயிரை மதம் பிடித்த யானையிடம் இருந்து காப்பாற்றுகிறார் சிவாஜி. அதனால் இளவரசி காஞ்சனா நட்பு கிடைக்கிறது. அதை பாலையாவுடைய மகனான சோ தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கிறார். அதை பத்மினியும், அவருடைய மகனாக வரும் சிவகுமாரும் நம்புவதால், சிவாஜி குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. கடைசியில் சிவாஜி உயிரைப் பறிக்க சோ செய்யும் முயற்சியும் தோல்வியில் முடிய, படம் சுபமாக முடிகிறது.

கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை; அழுகை கிடையாது. அழகான பத்மினி; வீரமான சிவாஜி; இளமையான காஞ்சனா; சிரிப்புக்கு பாலையாவும் சோவும் - இப்படி எல்லா விஷயங்களும் ஒருங்கே அமைந்த சூப்பர் படம் இது.


வேலு என்பது சோவுடைய கதாபாத்திர பெயர். மனோரமா ஜோடி. நாடக நடிகராக வருகிறார். பிற்பாதியில் சிவாஜிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் வில்லனாக மாறுகிறார். கூர்மையான வசனங்கள் இல்லை என்றாலும், சிரிப்பைத் தூண்ட கூடிய வசனங்கள் மற்றும் நடிப்பு.

எங்க மாமா

14 ஜனவரி 1970ல் வெளியான ''எங்க மாமா" படம், முழுக்க முழுக்க சிவாஜியுடைய படம். படம் முழுக்க அவர் அல்லது அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் சிவாஜிக்கு முன்பு யாரும் எடுபடவில்லை.

.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளி வந்த படம். எம்.எஸ்.வி.யின் இசையில் எல்லாப் பாடல்களும் படத்தில் சூப்பர்.

ஞானம் என்ற கதாபாத்திரத்தில் சோ. போக்கிரியாக வருகிறார். நகைச்சுவை இப்படத்தில் சுமார் தான். பெண் வேடத்திலும் சாமியார் வேடத்திலும் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க சோ செய்யும் முயற்சிகள் கை கூடவில்லை.

முறை மாமனான பாலாஜியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தாய் தந்தை இல்லாத ஜெயலலிதா பட்டணம் வருகிறார். ஆனால் மைனரான பாலாஜி அவரை நிராகரித்து விடுகிறார். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவை சிவாஜி தமது வீட்டுக்கு கூட்டி வருகிறார். அநாதை இல்லம் நடத்த தேவைப்படும் பணத்தை பாலாஜியிடமிருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயாவை நவநாகரீகப் பெண்ணாக மாற்றும் சிவாஜி, பாலாஜியை  அவர் மீது மையல் கொள்ள வைக்கிறார்ஜெயாவுக்கு பாலாஜி மீது வெறுப்பும் சிவாஜி மீது காதலும் ஏற்படுகிறது. இதற்கிடையே பாலாஜி செய்யும் சில சூழ்ச்சிகள், அவற்றிலிருந்து மீண்டு எப்படி சிவாஜி ஜெயாவை மணந்தார் என்பதே கதை.


வெண்ணிறாடை நிர்மலா, தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, எஸ்.என்.லட்சுமி, சி.கே.சரஸ்வதி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிஜா சோவுடைய காதலியாக வருகிறார்