Wednesday, January 25, 2017

கலைஞர் வசனத்தில் சோ

மறக்க முடியுமா? - கலைஞர் வசனத்தில் சோ நடித்த படம் இது. இது சோ நடித்த மூன்றாவது படமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். முரசொலி மாறன் இயக்கம். டி.கே.ராமமூர்த்தி இசை. 1966 ஆகஸ்டில் வெளியான படம். கலைஞரின் அறிமுக உரையுடன்  படம் ஆரம்பிக்கிறது.

இப்படத்தைப் பற்றி அறியாதவர்கள் கூட இதில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடலான "காகித ஓடம் கடலலை மேலே " என்ற பாடலைக் கண்டிப்பாகக் கேட்டு ரசித்திருப்பர்.

முதல் அரை மணி நேரமும் கடைசி அரை மணி நேரமும், சோக மாயம் - ஓவர் டோஸ். நடுவிலே சுமார் இரண்டு மணி நேரப் படம் ஓரளவுக்குப் பரவாயில்லை.

சகஸ்ரநாமம் பரம ஏழை; மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள், சிறிய மகன் மற்றும் ஓர் ஆண் கைக்குழந்தை. அவர்கள் ஏழ்மையில் படும் துயரம் மட்டுமே அரை மணி நேரத்துக்குப் போகிறது. ஒரு விபத்தில் கண்களை இழந்து விடுகிறார் சகஸ்ரநாமம். தாம் இல்லையெனில் தம்முடைய குழந்தைகளை யாராவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுவார்கள் என நினைத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

பல துன்பங்களுக்கு இடையே மூன்று சிறுவர்களும் பிரிந்து விடுகின்றனர். வளர்ந்த பிறகு அந்தப் பாத்திரங்களை தேவிகா, எஸ்.எஸ்.ஆர். மற்றும் சோ ஏற்று நடித்துள்ளனர்.

தேவிகா பணக்கார மேஜர் சுந்தர்ராஜன் வீட்டில் வளர்கிறார். அவருடைய மகனான முத்துராமனைக் காதலிக்கிறார்.

எஸ்.எஸ்.ஆர். கடவுள் வேடங்களில் நடிக்காததால் லட்சிய நடிகர் எனப் பெயர் வாங்கியவர். இப்படத்தில் அவர் நாடக நடிகராக வருகிறார். பகவான் கிருஷ்ணனாக வேடம் புனைகிறார். இதைப் பற்றி இதற்கு முன்பு யாராவது குறிப்பிட்டுள்ளார்களா எனத் தெரியவில்லை.

உணர்ச்சிகரமாக மட்டுமே நடித்து நாம் பார்த்துப் பழகிய எஸ்.எஸ்.ஆர். இப்படத்தில் கலகல பேர்வழி. நன்றாகவே நடித்துள்ளார்  - அலட்டல் இல்லாத நடிப்பு. நாடகக் கம்பெனியின் முதலாளி மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் பிடிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஒரு பணக்காரர் வீட்டில் சரணடைகிறார். அங்கே அவருடைய மகளான காஞ்சனாவைக் காதலித்து அங்கேயே செட்டிலாகி விடுகிறார்.

சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது. வலுவான வசனங்கள் இல்லை. சிறிய வேடம்தான். தேவையற்ற ஒரு சண்டைக்காட்சி மற்றும் பாடல் காட்சி. இப்படத்தில் அவர் நகைச்சுவை நடிகரில்லை; ஆனால் சோ பேசும் சீரியஸ் வசனங்கள் அவ்வளவாக மனத்தில் பதியவில்லை. மொத்தத்தில் ரத்னம் என்ற அரைகுறை கேரக்டர் சோவுக்கு.

தேவிகாவைத் திருமணம் செய்து கொள்ளும் முத்துராமன் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். தம்முடைய பச்சைக் குழந்தைக்கு வைத்தியம் செய்ய பணமின்றி தவிக்கிறார் தேவிகா.

திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட எஸ்.எஸ்.ஆர். சோவுடன் சேர்ந்து குடி, சூது எனத் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்.

தேவிகா குடியிருக்கும் வீட்டம்மாள் குழந்தையைக் காப்பாற்ற பணத்துக்காக தேவிகாவை ஓரிரவு முறை தவறி நடக்க வற்புறுத்துகிறார். போதையில் எஸ்.எஸ்.ஆர். பணம் கொடுத்து உள்ளே வர, காகித ஓடம் பாடல் மூலம் தேவிகா எஸ்.எஸ்.ஆர். தம்முடைய தம்பி என்பதை அறிந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

தேவிகா சாவதற்கு முன்பாக அவர்தான் தம்முடைய தமக்கை என்பதை அறியும் சோ, குழந்தையைக் காப்பாற்ற ஒரு குருட்டுப் பிச்சைக்காரனிடம் திருடி போலீசில் மாட்டிக் கொள்கிறார். அந்தப் பிச்சைக்காரன்தான் தம்முடைய தந்தை என்பதை அறிந்து கொண்டு அவரைக் கூட்டிக் கொண்டு வருவதற்கு முன்பாகவே, தேவிகா இறந்து விடுகிறார்.


மாறன் இயக்கிய, கருணாநிதி எழுதிய கதையில் இத்தனை சென்டிமென்டுகளா? முத்துராமன் இறப்பதற்கு முன்பு அவர் இறப்பதை உணர்த்த எத்தனை செண்டிமெண்ட் வசனங்கள்? மூட நம்பிக்கை எனப் பேச்சுக்கு இப்படத்தில் இடமில்லையா?

Sunday, January 22, 2017

சோ நடித்த திரில்லர் படம்

ஒரே படத்துடன் நடிப்பதை நிறுத்தி விடுவது சோவின் திட்டம். ஆனால், வீணை எஸ். பாலசந்தர் வற்புறுத்தலால் ஒரு படத்தில் நடித்தார். படத்தின் பெயர் "நடு இரவில்". பைனான்ஸ் பிரச்சினையால் படம் ஐந்து வருடங்கள் கழித்து 1970யில் தான் வெளிவந்தது.

சில லாஜிக் பிரச்சினைகள் இருந்தாலும், மொத்தத்தில் இந்தப் படம் ரசிக்கத்தகுந்த திரில்லர். இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் போதும் நன்றாக உள்ளது.

பணக்கார மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் அவருடைய மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பண்டரி பாய் ஒரு தீவுக்குள் பெரிய மாளிகையில் வாழ்கின்றனர். நிறைய வேலையாட்கள் உண்டு. அவர்களுடைய குடும்ப டாக்டர் வீணை பாலசந்தர் சுந்தர்ராஜன் சில நாட்களில் இறந்து விடுவார் என அவரிடமே சொல்லி விடுகிறார். தமக்குப் பிறகு தமது மனைவியை யார் பார்த்துக் கொள்ளப் போகிறார் என மனம் உடைந்து விடுவார் மேஜர்.
பண்டரி பாயைக் காதல் திருமணம் செய்து கொண்டவர் மேஜர். அதைப் பிடிக்காத அவருடைய சொந்தக்காரர்கள் தாக்கியதால்தான் பண்டரி பாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர்களைத் தம்மிடம் நெருங்க விடாமல் இத்தனை ஆண்டுகள் கழித்திருப்பார் மேஜர். நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு அந்தச் சொந்தக்காரர்களை எல்லாம் இந்தத் தீவுக்கு வரவழைத்து விடுவார் வீணை பாலசந்தர். இது மேஜருக்குப் பிடிக்காது.

வி. கோபால கிருஷ்ணன், வி. எஸ். ராகவன், அவருடைய மகள் சௌகார் ஜானகி உட்பட பலர் அந்த மாளிகையில் தங்கியிருப்பார்கள். எல்லாரையும் வெறுக்கும் பண்டரி பாய் ஜானகியிடம் மட்டும் அன்பு செலுத்துவார்.

இதன் மத்தியில் ஒவ்வொருவராக அந்த மாளிகையில் மரணம் அடைவர். போலீஸை வரவழைக்க மேஜர் விடமாட்டார். கடைசியில் பண்டரி பாயும் கொல்லப்படுவார். மனம் வெறுத்துப் போகும் மேஜர் தம்முடைய சொத்து எந்த சொந்தக்காரர்களுக்கும் போகக் கூடாது என்பதில் மிகவும் குறியாக இருப்பார். அதனால் ஜானகி பெயரில் தமது சொத்து அனைத்தையும் எழுதி வைக்கத் தீர்மானித்திருப்பார்.

வீல் சேரில் இருக்கும் ஊனமானவரான ராகவனையும் ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஜானகியையும் யாரோ கொலை செய்ய முயல்வார்கள். வீணை பாலச்சந்தர்தான் கொலைகாரன் என எல்லோரும் நம்பும்படி கொலைகாரனின் நடை உடை இருக்கும். மேஜர் சரியான நேரத்தில் துப்பாக்கியால் கொலைகாரனைச் சுட்டுவிடுவார். அவன் ராகவன் என்ற உண்மை அப்போது தான் எல்லாருக்கும் தெரியும். சொத்துக்கு ஆசைப்பட்டு எல்லாக் கொலைகளையும் அவர்தான் செய்து இருப்பார். ஜானகி ஒரு நர்ஸ் - அவர் மகள் இல்லை என்ற உண்மையும் கடைசியில்தான் தெரியும்.

இப்படத்தில் சோவுக்கு மிகச் சிறிய பாத்திரம். சர்வர் மௌஸ் என்ற பெயரில் சில காட்சிகளில் நகைச் சுவையை வெளிப்படுத்துவார்.


இப்படத்தில் எல்லோரும் நன்றாக நடித்து இருப்பார்கள். வீணை பாலசந்தர் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

Sunday, January 1, 2017

சோவின் முதல் திரைப்படம்

விவேகா ஃபைன் ஆர்ட்ஸில் பிசியாக இருந்து கொண்டே சோ ஒய்.ஜி.பி.யின் நாடகங்களிலும் நடித்து வந்தார். "The Whole Truth" என்ற நாடகம் அநேகமாக ஜெயலலிதாவின் முதல் நாடகமாக இருக்க வேண்டும். அதில் சோவுக்கு வில்லன் வேடம். இது திருமதி ஒய்.ஜி.பி.யின் ஆங்கில நாடகம். "Under Secretary" என்ற நாடகத்தில் சந்தியா,  ஜெயலலிதா ஆகியோருடன் சோ நடித்தார். அடாவடியான நகைச்சுவைப் பாத்திரம் சோவுக்கு. அது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

பட்டு எழுதிய ஒய்.ஜி.பி.யின் "பெற்றால் தான் பிள்ளையா" என்ற நாடகத்தில் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ புகுந்து விளையாடினார். அந்த நாடகத்தின் வெற்றி டைரக்டர் பீம்சிங்கையும் நடிகர் திலகம் சிவாஜியையும் அதைத் திரைப்படமாக எடுக்க வைத்தது. மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை நடத்தியும் காட்டினார் சிவாஜி. இப்படித்தான் சோவுடைய சினிமா பிரவேசம் நடந்தது.

"பார் மகளே பார்" படத்தைப் பற்றி சிறிது பார்ப்போமா?

சிவாஜி கணேசன் ஹீரோ. பெரிய பணக்காரர் - தொழிலதிபர். பணத்திமிரில் யாரையும் மதிக்காத கேரக்டர். சிவாஜி தம்முடைய பார்வை, நடை, உடை, பாவனை அனைத்திலும் திமிர்த்தனத்தையும் அலட்சியத்தையும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

சௌகார் ஜானகி சிவாஜிக்கு ஜோடி. கணவனுக்குப் பயந்த பெண்மணி வேடம். நிறைவான நடிப்பு.

பிரசவ ஆஸ்பத்திரியில் சௌகார் ஜானகிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதே நேரத்தில் ஒரு டான்ஸருக்கும்  அந்த ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குழந்தை பிறக்கும். குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அந்த டான்ஸர்  எங்கோ ஓடி விடுவார். எதிர்பாரா விபத்தில் நர்ஸ் இறந்து விட, யார் சௌகார் ஜானகியின் குழந்தை என யாருக்கும் தெரியாது. சிவாஜியின் கோபத்துக்குப் பயந்து இரண்டுமே ஜானகியுடைய குழந்தைகள்தான் என சிவாஜியிடம் பொய் சொல்வார்கள்.

இந்த உண்மை டாக்டர், ஜானகி, சிவாஜியின் நண்பர் வி.கே. ராமசாமி ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

சில காலத்துக்குப் பிறகு, தமது தங்கை குழந்தையைத் தேடி வரும் எம்.ஆர். ராதாவும் ஜானகியின் வேண்டுகோளுக்கிணங்க  உண்மையை வெளிப்படுத்தாமல் அங்கேயே தங்கி இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வார். யதார்த்தமான நடிப்பு ராதாவுக்கு. கேலி, கிண்டல், எதுவுமின்றி இப்படத்தில் அடக்கி வாசித்து இருப்பார்.

இரு பெண்களும் வளர்வார்கள் - அவர்கள் பாத்திரத்தை விஜய குமாரியும் புஷ்பலதாவும் ஏற்றிருப்பார்கள். விஜய குமாரி முத்துராமனைக் காதலிப்பார். விசாரித்துப் பார்த்து, முத்துராமன் பெரிய பணக்காரர் என்ற ஒரே காரணத்தால் திருமணத்துக்குச் சம்மதிப்பார் சிவாஜி.

தொழிலில் நொடிந்த ராமசாமிக்கு சிவாஜி உதவி புரிய மாட்டார். பல வருடங்களுக்கு முன்பு தங்கள் பெண்களில் ஒருத்தியை ராமசாமியுடைய மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க தாம் கொடுத்த வாக்குறுதியை ஜானகி நினைவு படுத்துவார். அதை சிவாஜி உதாசீனப்படுத்துவார்.

விஜயகுமாரியின் நிச்சயதார்த்த விழாவில் ஒரு கோபத்தில் எல்லோர் முன்பாக இரண்டு பெண்களில் ஒருத்தி சிவாஜியுடைய மகள் இல்லை என்ற உண்மையை ராமசாமி சொல்லி விடுவார். அதன் பின் பல குழப்பங்கள் - திருப்பங்கள். விஜயகுமாரி திருமணம் நின்று விடும். அவர் புஷ்பலதாவுக்கு நன்மை செய்ய தாம்தான் நாட்டியக்காரியுடைய மகள் என உண்மையை அறிந்து கொண்டதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார்.

இதற்கிடையே ராமசாமியுடைய மகனான ஏ.வி.எம். ராஜனைத் தான் தான் மணப்பேன் என புஷ்பலதா அடம் பிடிப்பார். அது சிவாஜிக்குப் பிடிக்காது.
சிவாஜி ஜானகியுடன் பேசுவதை நிறுத்தி விடுவார். யார் தம் மகள் என்பதை அறிய முடியாமல் தவிப்பார். நடக்கின்ற சம்பவங்களுக்கு ஏற்ப சில சமயம் விஜயகுமாரியையும் மற்ற சில சமயத்தில் புஷ்பலதாவையும் தமது மகள் என நம்புவார். பல சம்பவங்களுக்குப் பிறகு, விபத்தில் அடிபட்ட அவருக்கு இரு பெண்களுமே ரத்தம் கொடுப்பர். பணம் பெரியதில்லை - உறவே பெரியது என மனம் திருந்தும் சிவாஜி இருவரையுமே தமது மகள்களாக ஏற்றுக் கொள்வார்.

சிவாஜியிடம் வேலை செய்பவர் கருணாநிதி. அவருடைய மைத்துனன் வேடம் சோவுக்கு. மெக்கானிக் மற்றும் டிரைவர். ஜோடி கருணாநிதியடைய மகளாக வரும் மனோரமா. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சோ தோன்றும் போதெல்லாம் கலகலப்பாக இருக்கும். அவர் பேசும் சென்னைத் தமிழ் கலக்கல்.


பீம்சிங் இயக்கிய இந்தப் படம் 1963யில் வெளியானது.