Sunday, February 26, 2017

1950களில் சோ

1950களில் தான் சோவுடைய நாடகப் பிரவேசம் நடந்தது. ஆனால் அவருடைய சினிமா பிரவேசம் 1960களில்.

சோ முதலில் நடித்தது, சோவுக்காக ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது, சோ முதலில் கதை எழுதியது எல்லாமே 1950களில் தான்.

1953/57 -கோரக் கொலை - சோ எழுதி மேடையேறிய முதல் நாடகம்
1956 - டாக்டர் வேஷதாரி - விவேகா பைன் ஆர்ட்ஸுக்காக சோ எழுதிய முதல் நாடகம் 
1956 - கல்யாணி - சோ நடித்த முதல் நாடகம்
1957 - தேன்மொழியாள் - சோவுக்காக நிரந்தரமாக ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டது
1957 - If I get it? - சோ எழுதி மேடையேறிய முதல் நாடகம்
1958 - Don't Tell Anybody
1959 - Why Not?

1950களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 5
நடித்த நாடகங்கள் - 7க்கு மேல்; எண்ணிக்கை தெரியவில்லை
இயக்கிய நாடகங்கள் - 0

Saturday, February 25, 2017

சந்திரபாபு டைரக்ஷனில் சோ

சோவுடைய ஐந்தாவது படம் 'தட்டுங்கள் திறக்கப்படும்'. சிறிய வேடம் - மூன்று காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார். இன்சூரன்ஸ் ஏஜெண்டாக ராகவன் என்ற கதாபாத்திரம். டைரக்ஷன் சந்திரபாபு. 17 ஜூன் 1966யில் இப்படம் வெளியானது.

சாவித்திரி, கே. ஆர். விஜயா, மனோகர், சந்திரபாபு  போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் தான் நடிகை ஷோபா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

.வி.எம்ராஜன், வி.கே.ராமசாமி, ரங்காராவ், தங்கவேலு, எம்.ஆர். ராதா, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு எனப் பலரும் ஓரிரு காட்சிகளில் தலை காட்டுகின்றனர்.

சந்திரபாபு மிகவும் எதிர்பார்த்த படம் - துரதிர்ஷ்ட வசமாக ஓடவில்லை. படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என எதுவும் ரசிக்கும்படி இல்லை. மிகையான நடிப்பு. சோ தோன்றும் காட்சிகளில் மட்டுமே சிறிதளவு கலகலப்பு காணப்படுகிறது.


படத்தின் கதை...வாய் பேச முடியாத அனாதையான சந்திரபாபு ஏழையான சாவித்ரிக்கும் அவருடைய பெண் குழந்தைக்கும் அடைக்கலம் தருகிறார். அவரைக் கைவிட்டவர் தம்முடைய முதலாளியான மனோகர் என்பதை அறிகிறார். இதற்கிடையே பணத்துக்காக தம்முடைய மனைவியான கே.ஆர். விஜயாவை மனோகர் கொலை செய்து பழியைச் சந்திரபாபு மீது சுமத்துகிறார். சந்திரபாபு சிறை செல்கிறார். ஆசை வார்த்தை காட்டி சாவித்ரியுடன் மீண்டும் இணையும் மனோகர் இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்து விட்டதாக நாடகம் ஆட, சில திருப்பங்களுக்குப் பின் அவருடைய குழந்தையால் கொல்லப்படுகிறார். 

Wednesday, February 22, 2017

கதை திரைக்கதை - சோ

திரைப்படத்துக்கு சோ கதை திரைக்கதை முதலில் எழுதியது 'தேன் மழை' என்ற படத்துக்கு. பெயருக்குத் தான் ஜெமினி கணேசன் ஹீரோ. முக்கால்வாசி படத்துக்கு மேல் சோ-நாகேஷ் ஆக்ரமிப்பு, முழு நீள நகைச்சுவைப் படம் என்றே கூறும் அளவுக்கு.

முக்தா சீனிவாசன் டைரக்ஷன். ஜெமினி ஹீரோ; கே.ஆர். விஜயா ஹீரோயின். சோவுக்கு ஜோடி சச்சு. நாகேசுக்கு ஜோடி மனோரமா. மேஜர் சுந்தர்ராஜன் வில்லன். வெண்ணிறாடை மூர்த்தி போன்றோரும் நடித்துள்ளனர்.
இப்படம் சோ எழுதிய முதல் படம் மட்டுமில்லை. அவர் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படமும் ஆகும்.

தற்கொலை செய்து கொள்ள முயலும் ஜெமினி கணேசனை கே.ஆர். விஜயா காப்பாற்றுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. ரகசியமாகத் திருமணமும் ஆகி விடுகிறது.

ஜெமினி தற்கொலைக்கு முயலும் காரணம் பின்பே தெரிகிறது. அவருடைய அப்பா என எல்லோரும் நம்பும் மேஜர் அவருடைய அப்பா இல்லை. ஜெமினி செய்த கொலையை மறைக்க அவரை பிளாக் மெயில் செய்து வருகிறார் மேஜர்.

சோ - நாகேஷ் காம்பினேஷனில் நகைச்சுவை தூள். கே. ஆர். விஜயா வேலைக்கு ஆள் வேண்டும் எனப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருப்பார். அதே தெருவில் ஒரு பைத்தியக்காரனைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என இன்னொரு விளம்பரம் வந்திருக்கும். ஆனால் இரண்டு விலாசங்களும் மாற்றி பிரசுரம் ஆகி இருக்கும். நாகேஷ் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருவார். அப்போது சோ மட்டும் தான் வீட்டில் இருப்பார். வேலைக்கு விண்ணப்பிக்க வந்திருக்கும் நபர் என்ற நினைப்பில் சோவும் சோவைப் பைத்தியம் என்ற நினைப்பில் நாகேஷும் பேசும் வசனங்களும் பாடி லாங்குவேஜும் க்ளாஸிக்.

கே. ஆர். விஜயாவுக்கு தாய் தந்தை கிடையாது. அவர் சித்தப்பாவால் மதுரையில் வளர்கிறார். சச்சுவும் நாகேஷும் விஜயாவுக்கு கசின்ஸ். வேலை இல்லாத நாகேஷ் விஜயா வேலை நிமித்தமாக தங்கியிருக்கும் சென்னை வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணியுடைய வேலையில்லா மகனான சோ அவருக்கு நண்பராகிறார்.

சோவுடைய பாத்திரம் வாசு. வாசுவுடைய அப்பா சிதம்பரமாகவும் சோவே நடித்திருப்பார். ஆனால் சிதம்பரம் ஒரே காட்சியில் தோன்றி உயிரை விட்டுவிடுவார்.

மஞ்சள் பத்திரிகை ஆசிரியர் சோ. பார்ட்னர் மேஜர். சோ ஜெமினியைப் பற்றி தவறாக எழுதிவிட கோபத்தில் சோவை மிரட்டுகிறார் ஜெமினி. இதற்கிடையே ஒரு நாள் மேஜர் பணம் சம்பந்தப்பட்ட தகராறில் சோவைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகிறார். தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்ட ஜெமினி அங்கே வந்து இறந்து போன சோ கழுத்தை நெரிக்கிறார். ஜெமினிதான் கொலை செய்ததாக மேஜர் சொல்ல, ஜெமினியும் அதை நம்பி விடுகிறார். தான்தான் கொலை செய்ததாக ஜெமினியிடமிருந்து ஒரு கடிதத்தை எழுதி வாங்கிக் கொள்கிறார் மேஜர். அதை வைத்து ஜெமினியை மிரட்டி பணம் சம்பாதிக்க முயல்கிறார் மேஜர்.

நடு நடுவே காமெடி டிராக் பாரலலாக ஓடுகிறது. மனோரமா பணக்காரப் பெண். கால்களில் உணர்ச்சி இழந்தவராக நடித்து நாகேஷ் மனோரமாவிடம் பணம் பறிக்க முயல்கிறார். சோ டாக்டராக வேடமிட்டு வந்து நாகேஷ் அப்படி சம்பாதிக்க முடியாமல் தடுத்து, தான் சம்பாதிக்க முயல்கிறார். அந்தக் காட்சிகள் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் உள்ள மிகச் சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் சில

ஜெமினிக்குத் திருமணம் செய்து வரதட்சிணை வாங்க திட்டமிடும் மேஜர் விஜயாவை ஜெமினியிடமிருந்து பிரித்து, மதுரையில் ஒரு பெண்ணை நிச்சயிக்கிறார். அது விஜயா குடும்பத்தைச் சேர்ந்த சச்சு. ஜெமினிக்கு ஆபத்து வரும் என பயந்து விஜயா எதையும் வெளியே சொல்லவில்லை. அதை அவர் மூலமாகவே அறிந்து கொள்ளும் நாகேஷ் சோவின் உதவியுடன் உண்மைக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டுபிடித்து படத்தைச் சுபமாக முடிக்கிறார்.

மேஜரிடமிருந்து ஜெமினி எழுதிய கடிதத்தைப் பிடுங்க சோவும் நாகேஷும் போடும் திட்டங்களும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவதும் நல்ல கலகலப்பான காட்சிகள். அதில் ஒரு காட்சி - ஒரே நாடகத்தில் கர்ணன், கஜினி முகமது, நாரதர் எல்லோரும் தோன்றினால் எப்படி இருக்கும்? படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் லாஜிக் பல இடங்களில் தடுமாறித் திணறுகிறது. ஆனால் அருமையான நகைச்சுவைக் காட்சிகளால் இப்படத்தை யாரும் சீரியஸ் படமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் லாஜிக்கை  யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் எனலாம்.


ஜெமினியத் தவிர எல்லாரும் நன்றாகவே நடித்துள்ளனர். மேஜர் சுந்தர்ராஜன் வில்லன் வேடத்துக்குப் பொருத்தமாக இல்லை. இவரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பறிக்க ஏன் சோவும் நாகேஷும் இவ்வளவு போராட வேண்டும்? ஒரே அடியாக அடித்திருக்கலாமே என தோன்றுகிறது. நம்பியார் அல்லது பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இந்த வேடத்துக்குப் போட்டிருக்க வேண்டும்.