Monday, July 31, 2017

பொம்மலாட்டம்

ஜாம் பஜார் ஜக்கு என்ற புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் சோ கலக்கிய நகைச்சுவைப் படம். இப்படத்தில் சோ பேசும் மெட்ராஸ் பாஷையைக் கேட்பவர்கள் கண்டிப்பாக இவரை விட எந்த நடிகரும் இந்த வட்டார மொழியைப் பேச முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள். பிற்காலத்தில் அவருடைய சில அரசியல் விமர்சனத் தொடர்களில் இந்த கேரக்டர் பெயரைச் சோ பயன்படுத்தியுள்ளார்.

இந்த முழு நீள நகைச்சுவைப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் சோ. 1968 மே மாதத்தில் இப்படம் வெளியாகியது. முக்தா சீனிவாசன் இயக்கம். பெயருக்கு ஜெய்சங்கர் - ஜெயலலிதா நாயக நாயகியர். மற்றபடி இப்படம் முழுக்க முழுக்க நாகேஷ் - சோ கூட்டணியின் படம். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். இவர்கள் போதாதற்கு, மனோரமாவும் சோவுடைய ஜோடியாக வந்து கலக்குகிறார். அவர் சொந்தக் குரலில் பாடியுள்ள 'ஜாம் பஜார் ஜக்கு' இன்று கூட தமிழகக் கிராமங்களில் ஹிட்.

டாக்டர் வி.எஸ்.ராகவனுக்கு இரண்டு பெண்கள் - ஜெயலலிதா, சச்சு. சச்சுவைக் காதலிக்கிறார் முறைப் பையனான நாகேஷ். அக்காள் திருமணம் செய்தால் தான் தான் திருமணத்துக்குச் சம்மதிப்பதாக சச்சு சொல்கிறார்.  நாகேஷ் சோ உதவியுடன் ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் காதலிக்க வைக்கிறார். சோ லோக்கல் ரௌடி. உண்மையில் பயங்கொள்ளி. உதார் விட்டு கொண்டு எல்லாரையும் தாம் பெரிய ரௌடி என நம்ப வைக்கும் கேரக்டர். சோ - நாகேஷ் நாயக நாயகியைக் காதலிக்கச் செய்யும் முயற்சி நல்ல நகைச்சுவை.

பின் மேஜர் சுந்தர்ராஜன் பார்வையற்றவராக வேடமிட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் பணத்துக்காக ராகவனைக் கடத்துகிறார். நாகேஷும் சோவும் ஜெய்சங்கர் உதவியுடன் எப்படி அவரைக் காப்பாற்றுகின்றனர் என்பது மீதி கதை.


மொத்தத்தில் சோ- நாகேஷ் கூட்டணிக்குத் தான் இப்படத்தில் முக்கியத்துவம். இந்த காம்பினேஷனில் பல படங்கள் அக்காலத்தில் வந்தன.  

Saturday, July 29, 2017

கண்ணன் என் காதலன்

1968 ஆண்டு, 25 ஏப்ரலில் வெளியான படம் 'கண்ணன் என் காதலன்'. .நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படம். இதுதான் எம்.ஜி.ஆருடன் இணைந்து சோ நடித்த முதல் படம். 

ஒரு பணக்கார மேஜர் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் வளர்க்கிறார். தம்முடைய மகனான முத்துராமனுக்கு  ஜெயலலிதாவைத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவருக்கு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ எம்.ஜி.ஆர். மீது காதல்.

எம்.ஜி.ஆரும் வாணிஸ்ரீயும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். காந்திமதி பணக்காரப் பெண்மணி. அவருடைய பாதுகாப்பில் வாணிஸ்ரீ வளர்கிறார். அவர் பெயரில் தமது சொத்துக்களை காந்திமதி உயில் எழுதி வைத்து விடுகிறார்.

எம்.ஜி.ஆரும் வாணிஸ்ரீயும் திருமணம் செய்யவிருந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு விபத்து ஏற்பட்டு கால் ஊனம் ஆகி விடுகிறது. பின்பு, ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் இருப்பதை அறிந்து வாணிஸ்ரீ விட்டு கொடுக்கிறார். இறந்து போன வளர்ப்புத் தந்தைக்காக எம்.ஜி.ஆரும் திருமணத்துக்குச் சம்மதிக்கிறார்.

இத்தனை நாட்கள் சர்தார்ஜி டாக்டராக வலம் வந்த அசோகன் வேடம் போட்டு வந்த வில்லன் எனத் தெரிகிறது. சொத்துக்காக அவர் வாணிஸ்ரீயைக் கடத்த, எம்.ஜி.ஆர் மாறுவேடத்தில் போய் அவரைக் காப்பாற்றுகிறார். கடைசியில் ஜெயலலிதா அசோகன் தூண்டுதலால் ஊனமாக நடித்தார் என்பதும் அவர் அசோகன் தங்கை என்பதும் தெரிகிறது. வாணிஸ்ரீயை அசோகன் சுட, நடுவில் விழுந்து குண்டைத் தாங்கி உயிரை விடுகிறார் ஜெயலலிதா.

தனி காமெடி டிராக். மெயின் காமெடியன் சோ தான். தனி டிராக் மட்டுமின்றி எம்.ஜி.ஆருடன் சேர்ந்தும் சோ வருகிறார். சோ கேரக்டர் பெயர் பட்டாபி. ஒரு பெண் மீது கொண்ட காதலால், என்னத்த கண்ணையாவுடைய இறந்து போன பையனுடைய மறு பிறவியாக நடிக்கிறார். அதுதான் தனி காமெடி டிராக்கின் கதை. சோ தோன்றும் இடங்கள் எல்லாம் சூப்பர்.

இரு காட்சிகளில் சந்திரபாபு ரௌடியாகத் தோன்றுகிறார். சோவுடைய நகைச்சுவை அளவுக்கு ஏனோ சந்திரபாபுவை இப்படத்தில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. கண்ணையா காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.

முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் முத்துராமனும் தேங்காய் சீனிவாசனும் வருகிறார்கள்.

கதை மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் மட்டும் காதில் பூ சுற்றுகிறார்கள்.

எம்.எஸ். விஸ்வநாதன் இசை வழக்கம் போல காதுக்கு இனிமை. 'பாடுவோர் பாடினால் ' அருமையான பாடல்; மற்ற பாடல்களும் ஹிட்.

Friday, July 28, 2017

நீலகிரி எக்ஸ்பிரஸ்

ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் இந்தப் படம். இது 14 ஏப்ரல்1968யில் தமிழில் வெளியானது. சோ திரைக்கதை - வசனம் எழுதியுள்ளார். காமெடி கலாட்டாவுக்குக் கேட்கவா வேண்டும்? படம் முழுக்க சோ .கலக்கியுள்ளார். பெயருக்குத் தான் ஜெய்சங்கர் ஹீரோ; திருமலை மகாலிங்கம் டைரக்டர். மற்றபடி இது முழுக்க முழுக்க சோவுடைய சாம்ராஜ்யம்.

சோ பயணம் செய்யும் ரயிலில் சக பயணியான வி.எஸ். ராகவன் கொலை செய்யப்படுவார். அவரிடம் நிறைய நகைகள் இருக்கும். இன்னொரு சக பயணியான விஜயநிர்மலா சோவை மயக்கி ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கும் போது கேன்டீனில் கூட சாப்பிட அழைத்துக் கொண்டு போவார். வேண்டுமென சோ வண்டியைத் தவற விடச் செய்வார். அந்த நேரத்தில்தான் ராகவன் கொலையாவார்.

ராகவனை யார் கொலை செய்தார்கள் என்பதை சி..டி. சங்கர் கேரக்டரில் வரும் ஜெய்சங்கர் சோவுடன் சேர்ந்து கண்டுபிடிப்பது தான் மீதி கதை. சஸ்பென்ஸ் படம் என்றாலும் இது கிட்டத்தட்ட முழு நீள நகைச்சுவைப் படம்தான். போர் அடிக்காமல் கதை நகரும். மொட்டைத் தலை அசோகன் தான் கொலை செய்திருப்பார் என ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. அதனால் படத்தில் சஸ்பென்ஸ் இல்லை. கடைசியில் விடுதி மேனேஜர் தான் அனைத்துக்கும் பாஸ் எனப் படம் முடிகிறது. அதுவும் முன்பே யூகிக்க முடிந்து விடுகிறது.

ஜெய்யின் காதலி விஜயலலிதா ஜெய் மற்றும் சோ தங்கும் ஓட்டலில் வேலை செய்கிறார். அவர்தான் முகமூடி அணிந்து கொண்டு விஜய நிர்மலாவாக மாறி கொள்ளைக்கு உடந்தை என்பது சரியான காதில் பூ சுற்றும் வேலை. கதை லாஜிக் நிறைய இடங்களில் தடுமாறுகிறது. ஆனால் ராவணன் என்ற கேரக்டரில் அப்பாவித்தனமாக நடித்து மற்றவர்களை மடக்கும்படி சோ பேசும் வசனங்களுக்காக இப்படத்தைப் பார்க்கலாம்.


ஓர் உபரி தகவல் - எல்லா வார்த்தைகளும் 'சோ சோ' என முடியும்படி சோவைக் கிண்டல் செய்து ஒரு பாடல் வருகிறது.

கலாட்டா கல்யாணம்

முழு நீள ஜாலியான நகைச்சுவைப் படம். 'காதலிக்க நேரமில்லை ' படத்தைப் போல கொஞ்சம் கூட சென்டிமென்ட், சோகம் இல்லாமல் ஜாலியாக படம் போகிறது. சண்டைக்காட்சிகள் கூட சீரியஸ் கிடையாது.

சிவாஜி வித்தியாசமான முழு நேர நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். நாகேஷும் அவரும் தோன்றும் காட்சிகள் செம ரகளை. சித்ராலயா கோபுவின் நாடகத்தை சிவாஜியே விரும்பி தயாரித்த திரைப்படம். சி.வி.ராஜேந்திரன் இயக்கம். 1968, 12 ஏப்ரலில் வெளியான படம்.

சிவாஜி ஜெயலலிதா காதலர்கள். பெண் கேட்க ஜெயலலிதா தந்தையிடம் சிவாஜி போவார். தம்முடைய நான்கு பெண்களுக்கும் ஒன்றாகத் திருமணம் செய்வதாக தங்கவேலுவுக்கு வேண்டுதல். எல்லாப் பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடும் பொறுப்பை சிவாஜி ஏற்றுக் கொள்வார். அவர் எப்படி எல்லாருக்கும் மாப்பிள்ளை தேடுகிறார் என்பதே கதை.

முதல் பெண் மனோரமா ஆண்களை வெறுப்பவர். அவரை மயக்க தம்முடைய நண்பரான நாகேஷைத் தயார் செய்கிறார் சிவாஜி. அதற்காக இருவரும் படாத பாடு படுகிறார்கள் - பயில்வானிடம் அடி வாங்குகிறார்கள்; குழந்தையைக் கடத்துகிறார்கள்; போலீசிடம் மாட்டுகிறார்கள். கடைசியில் மனோரமாவுக்கு நாகேஷைப் பிடிக்கிறது.

மூன்றாவது பெண் .வி.எம்.ராஜனைக் காதலிக்கிறார். அவர் வேறு ஒரு பெண்ணிடம் மயக்கத்தில் இருக்க, அந்த மயக்கத்தைக் கலைக்கிறார் சிவாஜி.

கடைசிப் பெண் சச்சுவுக்கு ஏற்ற வரனாக அவருடைய அசட்டுத்தனமான கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்ளும் சினிமா பைத்தியமான வி.கோபாலகிருஷ்ணன் கிடைக்கிறார்.

சிவாஜியுடைய தந்தையாக வி.எஸ்.ராகவன்.

சோவுக்கு  விட்டல் என்ற கதாபாத்திரம். தங்கவேலுவுடைய மனைவி தம்பி. சச்சுவை மயக்க பல முயற்சிகள் செய்தும் பலிக்காததால் வேறு பெண்ணைத் திருமணத்துக்குப் பிடிக்கிறார். சோவுக்கு இது ஜெயலலிதாவுடன் முதல் படம். 


முக்கிய நகைச்சுவை வேடம் சிவாஜிக்கும் நாகேஷுக்கும் தான். இருந்தாலும் சோ வரும் இடங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை.

நினைவில் நின்றவள்

1967 செப்டம்பரில் வெளியான படம். முக்தா சீனிவாசன் டைரக்டர். திரைக்கதை வசனம் - சோ.

இந்தப் படத்துக்குப் பெயருக்குத் தான் ரவிசந்திரன் நாயகன். இது முழுக்க முழுக்க நாகேஷ் சோவுடன் சேர்ந்து கொட்டமடிக்கும் நகைச்சுவை கலாட்டா. முழு நீள காமெடி படம்.

சோ நடித்த ஆகச் சிறந்த நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று. வயதான கேரக்டர். அப்பாவித்தனமும் அசட்டுத்தனமும் நிறைந்த கலகலப்பு கேரக்டர். மனோதத்துவ டாக்டர் சம்பந்தம் எனப் பெயர். மனோரமா ஜோடி. கணவனுக்கு ஏற்ற அசடு.

வி.எஸ். ராகவனுக்கு இரண்டு பெண்கள் - கே.ஆர்.விஜயா மற்றும் சச்சு. விஜயா சோவிடம் வளர்வார். சிறிய விபத்தில் விஜயாவுக்கு அம்னீசியா தாக்கி பழைய சம்பவங்கள் மறந்து விடும். ஊரை விட்டு ஓடி விடுவார். ரவிச்சந்திரனைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார். ரவிச்சந்திரனின் நண்பன் நாகேஷ்.

பிறகு இன்னொரு விபத்தின் காரணமாக தனது திருமணத்தை மறந்து விடுவார். ராகவன் விஜயாவுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வார். நாகேஷ் மற்றும் ரவிசந்திரன் ராகவனிடமே வேலைக்குச் சேர்வார்கள்.

விஜயாவுக்குப் பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்பதால் (அவர் தான் வில்லன்) சோ நாகேஷ் உதவியுடன் அந்த திருமணத்தைத் தடுப்பது தான் கடைசி அரை மணி நேரப் படம்.


நாகேஷ், மனோரமா, சோ ஆகியோர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதில் மற்ற நடிகர்களின் நடிப்பு எடுபடாமல் போய் விடுகிறது. பாடல்கள் எல்லாம் சுமார்தான். வீட்டுக்குச் சொந்தக்காரனைப் போல வேஷமிட்டு பலரிடம் வாடகை அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சோவை நாகேஷ் மாட்டி விடும் காட்சி க்ளாஸ்.

Thursday, July 27, 2017

முகமது பின் துக்ளக்

1968யில் முதலில் மேடையேறிய இந்த அரசியல் நாடகத்துக்கு ஈடாக இதற்கு முன்பும் பின்பும் எந்த நாடகமும் கிடையாது. அந்தக் கால கட்டத்தில் மேடையேறிய பல நாடகங்களைப் பற்றி யாருமே அறியாதவாறு இந்த ஒரு நாடகம் பெரும் வெற்றி பெற்றது. சோ எழுதி இயக்கிய the best play இது தான். அவர் எழுதிய ஏனைய பல நல்ல நாடகங்களை  ரசிகர்கள் மறந்துவிட்டு, சோ என்றாலே துக்ளக் நினைவுக்கு வரும் அளவுக்கு இது பிரபலமடைந்தது. சோ பிற்காலத்தில் ஆரம்பித்த பத்திரிகைக்கு துக்ளக் எனப் பெயரிட காரணம் இந்நாடகமே.

சஃபையர்  தியேட்டரில் காலை காட்சிகளில் இந்த நாடகம் மேடையேறும் அளவுக்கும், ஒரே நாளில் மூன்று வெவ்வேறு சபாக்களில் நான்கு காட்சிகளில் மேடையேறிய அளவுக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற நாடகம் இது.

1969யில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதற்குப் பின் எந்த மாற்றமும் செய்யப்படாத இந்த நாடகத்தை 50 வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும் போதும் நம்மால் இதை ரசிக்க முடிகிறதென்றால், இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என நமது மனத்துக்குப் படுகிறதென்றால் அதற்குக் காரணம் நமது நாட்டில் அரசியல் நடக்கும் லட்சணமே.

இது முழுக்க முழுக்க அரசியல் சார்பு நாடகம். இதில் இடம்பெறும் ஒவ்வொரு வசனத்தையும் திரும்பத் திரும்பக் கேட்டு நமது நாட்டில் அரசியல்வாதிகள் இன்னும் திருந்தவில்லையே என நாம் வேதனைப்படவோ, அந்த வசனங்களில் உள்ள நகைச்சுவையை ரசிக்கவோ செய்யலாம்.

ஜனாதிபதியின் லட்சணம், அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம், அவர்கள் பிரச்னை தீர்க்கும் லட்சணம், பதவிக்காக அலையும் கேவலம், எல்லா அநீதிகளையும் மறந்து விடும் மக்கள், வம்பு பேசும் பெண்கள், நாட்டு நடப்பைப் பற்றிப்  பொழுது போக்காக மட்டும் பேசும் வேலையில்லாதவர்கள், சினிமா பைத்தியம் பிடித்து அலையும் மாணவர்கள், எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக் செய்யும் கல்லூரி மாணவர்கள் என மானாவாரியாக எல்லா அவலங்களையும் இலகுவாகவும் நகைச்சுவையுடன் சாடும் சோவின் மிகச் சிறந்த நாடகமிது.


பிரதம மந்திரி துக்ளக் ஹிந்தி பிரச்னையைத் தீர்ப்பது, மாதத்திற்கு ஒரு மொழியைத் தேசிய மொழியாக்க யோசனை சொல்வது, பாரசீக மொழியைத் தேசிய மொழியாக்குவது, எல்லாரையும் உதவிப் பிரதம மந்திரிகள் ஆக்குவது, எல்லா இலாக்காக்களையும் தம்மிடமே வைத்துக் கொள்வது, திருப்பதியைத் தமிழ் நாட்டுக்கும், தஞ்சாவூரை ஆந்திராவுக்கும் கொடுப்பதாகச் சொல்வது, உணவுப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா பயணிப்பது என வரிசையாக நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சோவின் வசனங்கள்

Tuesday, July 25, 2017

மனம் ஒரு குரங்கு

1967யில் வெளியான படம். .டி.கிருஷ்ணஸ்வாமி டைரக்ஷன். செல்லப்பா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சோ. கே.ஆர்.விஜயா கதாநாயகி; நாயகன் .வி.எம்.ராஜன்.

திரைக்கதை - சோ. சோவுடைய எழுத்தில் ஏற்கனவே சக்கை போடு போட்ட நாடகம்தான் படமாக எடுக்கப்பட்டது. 

டி.எஸ்.பாலையா பணக்காரர்; அவருடைய ஒரே மகன் சோ. இருவரும் திரையில் தோன்றும் காட்சிகள் நமது வயிற்றைக் குலுக்க வைக்கின்றன.
.வி.எம்.ராஜன் நாடகம் போடுகிறார்; காய்கறிக்காரியாக நடிக்கும் நடிகை கோபித்துக் கொண்டு போய் விட, அவள் இல்லாமலே நாடகத்தை நடத்துவதாகச் சவால் விடுகிறார் ராஜன். உண்மையான காய்கறிக்காரியான  கே.ஆர்.விஜயாவை நாடகத்தில் நடிக்க வைக்கிறார்.

விஜயா நடிப்பைப் பார்க்கும் ராஜனின் நண்பனான சோ விஜயாவைக் காதலிக்கிறார். பாலையா பார்த்து வைக்கும் அவருடைய பணக்கார நண்பருடைய மகளை நிராகரிக்கிறார். விஜயா காய்கறி விற்பவர் எனது தெரிந்த பிறகு, அந்தப் பணக்காரப் பெண்ணையே மணக்க சம்மதிக்கிறார்.

விஜயாவின் நடை உடை பாவனையை மாற்றி, அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நவநாகரீக நங்கை போல காட்டுகிறார் ராஜன். அவர் திட்டப்படியே சோ மீண்டும் விஜயாவை மணக்க விரும்ப, விஜயா அவரை நிராகரிக்கிறார்.

இன்னும் சில மன மாற்றங்களும் நிராகரிப்புகளும் படத்தில் உண்டு. கடைசியில், விஜயா மனம் மாறி படங்களில் நடிக்கத் தொடங்குகிறார். அவர் மீது உயிரையே வைத்த முத்து ராமன் இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். ராஜன் மனம் சபலப்பட்டு விஜயாவை மணக்க விரும்புகிறார்; ஆனால் அவரை விஜயா நிராகரிக்கிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் பிரமாதம். ராஜன் விஜயாவுக்கு நாகரீகமாக இருக்க கற்றுக் கொடுக்கும் காட்சிகள் மட்டும் சிறிதே நீளம். 'மனம் ஒரு குரங்கு' என்ற பாடலைத் தவிர மற்றவை மனத்தில் நிற்கவில்லை.


சோ படம் முழுவதும் அவ்வப்போது வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அவருடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயம் இல்லை.