Friday, July 28, 2017

கலாட்டா கல்யாணம்

முழு நீள ஜாலியான நகைச்சுவைப் படம். 'காதலிக்க நேரமில்லை ' படத்தைப் போல கொஞ்சம் கூட சென்டிமென்ட், சோகம் இல்லாமல் ஜாலியாக படம் போகிறது. சண்டைக்காட்சிகள் கூட சீரியஸ் கிடையாது.

சிவாஜி வித்தியாசமான முழு நேர நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். நாகேஷும் அவரும் தோன்றும் காட்சிகள் செம ரகளை. சித்ராலயா கோபுவின் நாடகத்தை சிவாஜியே விரும்பி தயாரித்த திரைப்படம். சி.வி.ராஜேந்திரன் இயக்கம். 1968, 12 ஏப்ரலில் வெளியான படம்.

சிவாஜி ஜெயலலிதா காதலர்கள். பெண் கேட்க ஜெயலலிதா தந்தையிடம் சிவாஜி போவார். தம்முடைய நான்கு பெண்களுக்கும் ஒன்றாகத் திருமணம் செய்வதாக தங்கவேலுவுக்கு வேண்டுதல். எல்லாப் பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடும் பொறுப்பை சிவாஜி ஏற்றுக் கொள்வார். அவர் எப்படி எல்லாருக்கும் மாப்பிள்ளை தேடுகிறார் என்பதே கதை.

முதல் பெண் மனோரமா ஆண்களை வெறுப்பவர். அவரை மயக்க தம்முடைய நண்பரான நாகேஷைத் தயார் செய்கிறார் சிவாஜி. அதற்காக இருவரும் படாத பாடு படுகிறார்கள் - பயில்வானிடம் அடி வாங்குகிறார்கள்; குழந்தையைக் கடத்துகிறார்கள்; போலீசிடம் மாட்டுகிறார்கள். கடைசியில் மனோரமாவுக்கு நாகேஷைப் பிடிக்கிறது.

மூன்றாவது பெண் .வி.எம்.ராஜனைக் காதலிக்கிறார். அவர் வேறு ஒரு பெண்ணிடம் மயக்கத்தில் இருக்க, அந்த மயக்கத்தைக் கலைக்கிறார் சிவாஜி.

கடைசிப் பெண் சச்சுவுக்கு ஏற்ற வரனாக அவருடைய அசட்டுத்தனமான கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்ளும் சினிமா பைத்தியமான வி.கோபாலகிருஷ்ணன் கிடைக்கிறார்.

சிவாஜியுடைய தந்தையாக வி.எஸ்.ராகவன்.

சோவுக்கு  விட்டல் என்ற கதாபாத்திரம். தங்கவேலுவுடைய மனைவி தம்பி. சச்சுவை மயக்க பல முயற்சிகள் செய்தும் பலிக்காததால் வேறு பெண்ணைத் திருமணத்துக்குப் பிடிக்கிறார். சோவுக்கு இது ஜெயலலிதாவுடன் முதல் படம். 


முக்கிய நகைச்சுவை வேடம் சிவாஜிக்கும் நாகேஷுக்கும் தான். இருந்தாலும் சோ வரும் இடங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை.

No comments:

Post a Comment