Saturday, July 29, 2017

கண்ணன் என் காதலன்

1968 ஆண்டு, 25 ஏப்ரலில் வெளியான படம் 'கண்ணன் என் காதலன்'. .நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படம். இதுதான் எம்.ஜி.ஆருடன் இணைந்து சோ நடித்த முதல் படம். 

ஒரு பணக்கார மேஜர் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் வளர்க்கிறார். தம்முடைய மகனான முத்துராமனுக்கு  ஜெயலலிதாவைத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவருக்கு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ எம்.ஜி.ஆர். மீது காதல்.

எம்.ஜி.ஆரும் வாணிஸ்ரீயும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். காந்திமதி பணக்காரப் பெண்மணி. அவருடைய பாதுகாப்பில் வாணிஸ்ரீ வளர்கிறார். அவர் பெயரில் தமது சொத்துக்களை காந்திமதி உயில் எழுதி வைத்து விடுகிறார்.

எம்.ஜி.ஆரும் வாணிஸ்ரீயும் திருமணம் செய்யவிருந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு விபத்து ஏற்பட்டு கால் ஊனம் ஆகி விடுகிறது. பின்பு, ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் இருப்பதை அறிந்து வாணிஸ்ரீ விட்டு கொடுக்கிறார். இறந்து போன வளர்ப்புத் தந்தைக்காக எம்.ஜி.ஆரும் திருமணத்துக்குச் சம்மதிக்கிறார்.

இத்தனை நாட்கள் சர்தார்ஜி டாக்டராக வலம் வந்த அசோகன் வேடம் போட்டு வந்த வில்லன் எனத் தெரிகிறது. சொத்துக்காக அவர் வாணிஸ்ரீயைக் கடத்த, எம்.ஜி.ஆர் மாறுவேடத்தில் போய் அவரைக் காப்பாற்றுகிறார். கடைசியில் ஜெயலலிதா அசோகன் தூண்டுதலால் ஊனமாக நடித்தார் என்பதும் அவர் அசோகன் தங்கை என்பதும் தெரிகிறது. வாணிஸ்ரீயை அசோகன் சுட, நடுவில் விழுந்து குண்டைத் தாங்கி உயிரை விடுகிறார் ஜெயலலிதா.

தனி காமெடி டிராக். மெயின் காமெடியன் சோ தான். தனி டிராக் மட்டுமின்றி எம்.ஜி.ஆருடன் சேர்ந்தும் சோ வருகிறார். சோ கேரக்டர் பெயர் பட்டாபி. ஒரு பெண் மீது கொண்ட காதலால், என்னத்த கண்ணையாவுடைய இறந்து போன பையனுடைய மறு பிறவியாக நடிக்கிறார். அதுதான் தனி காமெடி டிராக்கின் கதை. சோ தோன்றும் இடங்கள் எல்லாம் சூப்பர்.

இரு காட்சிகளில் சந்திரபாபு ரௌடியாகத் தோன்றுகிறார். சோவுடைய நகைச்சுவை அளவுக்கு ஏனோ சந்திரபாபுவை இப்படத்தில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. கண்ணையா காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.

முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் முத்துராமனும் தேங்காய் சீனிவாசனும் வருகிறார்கள்.

கதை மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் மட்டும் காதில் பூ சுற்றுகிறார்கள்.

எம்.எஸ். விஸ்வநாதன் இசை வழக்கம் போல காதுக்கு இனிமை. 'பாடுவோர் பாடினால் ' அருமையான பாடல்; மற்ற பாடல்களும் ஹிட்.

No comments:

Post a Comment