Friday, July 28, 2017

நீலகிரி எக்ஸ்பிரஸ்

ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் இந்தப் படம். இது 14 ஏப்ரல்1968யில் தமிழில் வெளியானது. சோ திரைக்கதை - வசனம் எழுதியுள்ளார். காமெடி கலாட்டாவுக்குக் கேட்கவா வேண்டும்? படம் முழுக்க சோ .கலக்கியுள்ளார். பெயருக்குத் தான் ஜெய்சங்கர் ஹீரோ; திருமலை மகாலிங்கம் டைரக்டர். மற்றபடி இது முழுக்க முழுக்க சோவுடைய சாம்ராஜ்யம்.

சோ பயணம் செய்யும் ரயிலில் சக பயணியான வி.எஸ். ராகவன் கொலை செய்யப்படுவார். அவரிடம் நிறைய நகைகள் இருக்கும். இன்னொரு சக பயணியான விஜயநிர்மலா சோவை மயக்கி ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கும் போது கேன்டீனில் கூட சாப்பிட அழைத்துக் கொண்டு போவார். வேண்டுமென சோ வண்டியைத் தவற விடச் செய்வார். அந்த நேரத்தில்தான் ராகவன் கொலையாவார்.

ராகவனை யார் கொலை செய்தார்கள் என்பதை சி..டி. சங்கர் கேரக்டரில் வரும் ஜெய்சங்கர் சோவுடன் சேர்ந்து கண்டுபிடிப்பது தான் மீதி கதை. சஸ்பென்ஸ் படம் என்றாலும் இது கிட்டத்தட்ட முழு நீள நகைச்சுவைப் படம்தான். போர் அடிக்காமல் கதை நகரும். மொட்டைத் தலை அசோகன் தான் கொலை செய்திருப்பார் என ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. அதனால் படத்தில் சஸ்பென்ஸ் இல்லை. கடைசியில் விடுதி மேனேஜர் தான் அனைத்துக்கும் பாஸ் எனப் படம் முடிகிறது. அதுவும் முன்பே யூகிக்க முடிந்து விடுகிறது.

ஜெய்யின் காதலி விஜயலலிதா ஜெய் மற்றும் சோ தங்கும் ஓட்டலில் வேலை செய்கிறார். அவர்தான் முகமூடி அணிந்து கொண்டு விஜய நிர்மலாவாக மாறி கொள்ளைக்கு உடந்தை என்பது சரியான காதில் பூ சுற்றும் வேலை. கதை லாஜிக் நிறைய இடங்களில் தடுமாறுகிறது. ஆனால் ராவணன் என்ற கேரக்டரில் அப்பாவித்தனமாக நடித்து மற்றவர்களை மடக்கும்படி சோ பேசும் வசனங்களுக்காக இப்படத்தைப் பார்க்கலாம்.


ஓர் உபரி தகவல் - எல்லா வார்த்தைகளும் 'சோ சோ' என முடியும்படி சோவைக் கிண்டல் செய்து ஒரு பாடல் வருகிறது.

No comments:

Post a Comment