Monday, July 31, 2017

பொம்மலாட்டம்

ஜாம் பஜார் ஜக்கு என்ற புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் சோ கலக்கிய நகைச்சுவைப் படம். இப்படத்தில் சோ பேசும் மெட்ராஸ் பாஷையைக் கேட்பவர்கள் கண்டிப்பாக இவரை விட எந்த நடிகரும் இந்த வட்டார மொழியைப் பேச முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள். பிற்காலத்தில் அவருடைய சில அரசியல் விமர்சனத் தொடர்களில் இந்த கேரக்டர் பெயரைச் சோ பயன்படுத்தியுள்ளார்.

இந்த முழு நீள நகைச்சுவைப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் சோ. 1968 மே மாதத்தில் இப்படம் வெளியாகியது. முக்தா சீனிவாசன் இயக்கம். பெயருக்கு ஜெய்சங்கர் - ஜெயலலிதா நாயக நாயகியர். மற்றபடி இப்படம் முழுக்க முழுக்க நாகேஷ் - சோ கூட்டணியின் படம். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். இவர்கள் போதாதற்கு, மனோரமாவும் சோவுடைய ஜோடியாக வந்து கலக்குகிறார். அவர் சொந்தக் குரலில் பாடியுள்ள 'ஜாம் பஜார் ஜக்கு' இன்று கூட தமிழகக் கிராமங்களில் ஹிட்.

டாக்டர் வி.எஸ்.ராகவனுக்கு இரண்டு பெண்கள் - ஜெயலலிதா, சச்சு. சச்சுவைக் காதலிக்கிறார் முறைப் பையனான நாகேஷ். அக்காள் திருமணம் செய்தால் தான் தான் திருமணத்துக்குச் சம்மதிப்பதாக சச்சு சொல்கிறார்.  நாகேஷ் சோ உதவியுடன் ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் காதலிக்க வைக்கிறார். சோ லோக்கல் ரௌடி. உண்மையில் பயங்கொள்ளி. உதார் விட்டு கொண்டு எல்லாரையும் தாம் பெரிய ரௌடி என நம்ப வைக்கும் கேரக்டர். சோ - நாகேஷ் நாயக நாயகியைக் காதலிக்கச் செய்யும் முயற்சி நல்ல நகைச்சுவை.

பின் மேஜர் சுந்தர்ராஜன் பார்வையற்றவராக வேடமிட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் பணத்துக்காக ராகவனைக் கடத்துகிறார். நாகேஷும் சோவும் ஜெய்சங்கர் உதவியுடன் எப்படி அவரைக் காப்பாற்றுகின்றனர் என்பது மீதி கதை.


மொத்தத்தில் சோ- நாகேஷ் கூட்டணிக்குத் தான் இப்படத்தில் முக்கியத்துவம். இந்த காம்பினேஷனில் பல படங்கள் அக்காலத்தில் வந்தன.  

No comments:

Post a Comment