Wednesday, August 9, 2017

அடிமைப் பெண்

1969 மே மாதம் வெளியான படம். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப் படம். கே. சங்கர் இயக்கம். கே.வி.மகாதேவன் இசை. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இரு வேடங்களில் நடித்த படம்.

நகைச்சுவைக்குச் சோவும் சந்திரபாபுவும். சோ கதாபாத்திரத்துக்குப் பெயர் கிடையாது. மந்திரவாதி என்றே படம் முழுக்க அழைக்கப்படுகிறார். சோவுக்கு இது ஒரு தேவையற்ற படம். அதிக முக்கியத்துவம் இல்லை. அவருடைய நகைச்சுவையும் அவ்வளவாக எடுபடவில்லை.

சோ என்று இல்லை. இப்படத்தில் யாருடைய நடிப்பும் சொல்லும்படியாக இல்லை என்பதே உண்மை. வரலாறு காணாத வெற்றிப் படம். விருதுகள் வென்ற படம். என்னுடைய கருத்தை யாரும் சரி என ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது.

எம்.ஜி.ஆர். ஓர் ஊர்த்தலைவர். அவருடைய மனைவியான பண்டரிபாயிடம் தவறாக நடக்க முயன்று தமது காலை இழக்கிறார் அடுத்த ஊர்த்தலைவரான அசோகன். பின் அவர் சூழ்ச்சியால் எம்.ஜி.ஆரைக் கொலை செய்கிறார். அவருடைய ஊர்ப் பெண்கள் அனைவருக்கும் விலங்குகள் மாட்டி அடிமைகளாக வேலை வாங்குகிறார் அசோகன்.

பண்டரிபாயுடைய மகன் எம்.ஜி.ஆர். சிறையிலேயே வளர்கிறார். பெரியவராகி தப்பிக்கும் அவருக்கு ஜெயலலிதா அடைக்கலம் கொடுக்கிறார். பேச, எழுத கற்றுக் கொடுக்கிறார். அவர் யார் என்ற உண்மையையும் சொல்கிறார். எம்.ஜி.ஆர். அசோகன் ஆட்களுடன் போராடி பெண்கள் விலங்குளை உடைக்கிறார்.

இதற்கிடையே அசோகனைக் காண மனோகர் வருகிறார். அவர் ஜெயலலிதாவைக் கடத்திச் செல்கிறார். அவரைத் தேடி எம்.ஜி.ஆரும் மனோகர் நாட்டுக்குப் போகிறார்.

மனோகர் ஒரு நாட்டின் தளபதி. அந்நாட்டு அரசி இன்னொரு ஜெயலலிதா. இரண்டு ஜெயலலிதாக்களும் சகோதரிகள். அரசியைக் கொன்று அந்த இடத்தில் போலி ஜெயலலிதாவை இருத்தி அவர் மூலம் நாட்டைக் கைப்பற்றுவதே மனோகர் திட்டம்.

அரசி ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மீது காதல் வயப்படுகிறார். இதற்கிடையே மனோகருடன் போராடி அவரைக் கொல்கிறார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா அசோகனுடன் சேர்ந்து கொண்டு எம்.ஜி.ஆரையும் நாயகி ஜெயலலிதாவையும் வீழ்த்தப் பார்க்கிறார். அந்தச் சதி திட்டங்களில் இருந்து மீண்டு எம்.ஜி.ஆர் எப்படி அசோகனைக் கொன்று தாயைக் காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை. நாயகி ஜெயலலிதா எம்.ஜி.ஆரைக் கரம் பிடிக்க, எதிர் நாயகி ஜெயலலிதா மரணமடைகிறார்.


எம்.ஜி.ஆருக்கு உதவி செய்யும் வைத்தியர் வேடத்தில் சந்திரபாபு. மனோகர் கூட்டத்தில் இருந்தாலும் எம்.ஜி.ஆருக்கு உதவும் போலி மந்திரவாதி வேடத்தில் சோ. இருவரும் அவ்வப்போது எம்.ஜி.ஆருடன் தோன்றுகிறார்கள்.

No comments:

Post a Comment