Friday, August 11, 2017

அன்னையும் பிதாவும்

சோ நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் நடித்த படம்சோ வில்லனாக நடித்த முதல் படமிது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். 1969 செப்டம்பரில் வெளியானது.

.வி.எம். ராஜன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எக்கச்சக்க நட்சத்திரங்கள். நாகையா - எஸ்.என்.லட்சுமி தம்பதியுடைய மக்கள் வி.கோபாலகிருஷ்ணன், .வி.எம். ராஜன் மற்றும் கால் ஊனமுற்ற லட்சுமி. ஒரு விபத்தில் நாகையாவுக்குக் கண் பார்வை போய் விடுகிறது. வில்லத்தனமான வேலைகளில் இறங்குகிறார் வி.கோபாலகிருஷ்ணனுடைய மனைவியான ஜி.சகுந்தலா. லட்சுமி மீது திருட்டுப் பழி சுமத்துகிறார். மறைமுகமாக மாமனார் மாமியாரைக் கொடுமைப்படுத்துகிறார். அவருடைய பல தவறான வேலைகளுக்கு தூண்டுகோலாக அவருடைய தம்பி சோ இருக்கிறார்.

மார்க்கண்டேயன் என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை வசனத்தாலும் நடிப்பாலும் நம்மை சோ கவர்கிறார். அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவர்தான் ராஜா.

.வி.எம். ராஜன் பணக்கார வி.கே.ராமசாமியுடைய மகளான வாணிஸ்ரீயை பல சந்தர்ப்பங்களில் சந்திக்கிறார். இருவரும் காதல் வசப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் தம்முடைய தந்தையிடமே அவருக்கு வேலை வாங்கி தருகிறார் வாணிஸ்ரீ.

இதற்கிடையே வெளிநாட்டில் வாழ்ந்தவர் எனப் பொய் சொல்லி, வியாபாரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி வி.கே. ராமசாமி மனத்தை மயக்கி அவரிடம் வேலை செய்கிறார் சோ. அவரைத் தம்முடைய இஷ்டப்படி ஆட்டி வைக்கிறார்.

ஏழை டிரைவரும் பழைய நண்பருமான டி.ஆர். ராமசந்திரன் வீட்டில் வந்து நாகையா தம்பதிகள் தங்குகிறார்கள்அவருடைய மகனான சிவகுமாருக்கும் லட்சுமிக்கும் திருமணம் நடக்கும் சந்தர்ப்பத்தில் சோவின் தூண்டுதலால் கடன் கொடுத்த வி.கே.ஆர். அதற்குத் தடை விதிக்கிறார்.

நாகையா துக்கத்தில் இறக்கிறார். .வி.எம். ராஜன்  மீது ஜி.சகுந்தலா காரணமாக திருட்டுப் பழி விழுகிறது. சிவகுமாருடைய தங்கையான எம். பானுமதியை சோ ஏமாற்றி விட, அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.

சோவால் நடிகையாக்கப்படுவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட மனோரமா உதவியுடன் வாணிஸ்ரீ சோவுடைய குட்டையெல்லாம் உடைக்கிறார். அவர் வாணிஸ்ரீயைத் திருமணம் செய்யும் முயற்சியும் தோல்வி அடைகிறது.

கடைசியில் ஒரு அனாவசியமான பைக் ரேஸ். அதில் சோ தோற்கிறார். கதாநாயகன் வென்று பரிசுப் பணத்தால் வி.கே.ஆர். கடனை அடைக்கிறார். மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் நடக்க சுபமாகப் படம் முடிகிறது.


சுமாரான படம். சுமாரான பாடல்கள். எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர். சோவின் நகைச்சுவை படத்துக்கு மிகவும் உதவுகிறது.

No comments:

Post a Comment