Monday, August 28, 2017

அருணோதயம்

முகத்தை மறைத்தபடி துக்ளக் பத்திரிகை. உடனே ஒரு வசனம் - "இதுலே எல்லாரையும் திட்டி எழுதியிருக்காங்களே. நாம இதைப் படிச்சா நம்மளையும் எல்லாரும் திட்டுவாங்க. " பத்திரிகை தூக்கி எறியப்படுகிறது. இப்படித் தான் சோவின் கேரக்டர் படத்தில் அறிமுகமாகிறது. 5 மார்ச் 1971யில் வெளியான இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். டாக்டர் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார்.

சிவாஜி படத்தின் நாயகன். அவருடைய அம்மா அஞ்சலி தேவி; தங்கை லட்சுமி. சிவாஜியுடைய மேலதிகாரிகளாக வி.எஸ்.ராகவனும் அவருடைய மகன் முத்துராமனும். முத்துராமனை லட்சுமி காதலிக்க, முத்துராமன் தங்கை சரோஜாதேவியை சிவாஜி காதலிக்கிறார். முத்துராமனுக்குத் தங்கையை மணமுடிக்க சம்மதிக்கிறார் சிவாஜி. அப்போது முத்துராமனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறார். அது அவர் குடிகாரர் என்பதாகும். நண்பன் சோவின் யோசனையால் தாம் பெரிய குடிகாரராகவும், குடியால் தமக்குப் பெரிய வியாதி இருப்பதாகவும் நடிக்கிறார். அதை உண்மையென நம்பி முத்துராமன் குடியை விடுகிறார். ஆனால் இந்தப் பொய் படிப்படியாக சிவாஜிக்குக் கொலைகாரன் பட்டத்தையும், திருடன் பட்டத்தையும் வாங்கிக் கொடுக்கிறது. எல்லாரும் இவரை வெறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர் முதலாளியின் வாரிசாகிறார். பல சம்பவங்களுக்குப் பிறகு எப்படி உண்மையை நிலை நாட்டுகிறார் என்பதே மீதி கதை.

சிவாஜி ஓவர் ஆக்டிங். சரோஜா தேவி குண்டாக ஆடாமல் அசையாமல் வருகிறார். அவர் சிவாஜிக்கு ஜோடி; நாயகி இல்லை. சோ மனோரமா மற்றும் நீலுவுடன் தனி டிராக்கில் காமெடி செய்கிறார். ரசிக்கும்படியாக இருந்தாலும் ஓஹோவென இல்லை. நீலு ரௌடியாக நல்ல நடிப்பு. சோவுக்கு முக்கிய வேடம்; ஆனால் அவர் எழுதிய கதை இல்லை; அவருடைய பலம் வசனங்கள். அது இதில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


இதைத் தவிர வி.கோபாலகிருஷ்ணன், குல தெய்வம் ராஜகோபால், வெண்ணிறாடை மூர்த்தி, கண்ணன், தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில்.

No comments:

Post a Comment