Monday, August 14, 2017

என் அண்ணன்

1970 மே-யில் வெளியான திரைப்படம். . நீலகண்டன் இயக்கம். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

பூச்சி என்ற முழு அசட்டு கேரக்டரில் சோ. நகைச்சுவையோ வசனங்களோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சோ நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.

வழக்கமான மசாலாக் கதை. ஏழை எம்.ஜி.ஆர். தம்முடைய தங்கை விஜய நிர்மலாவைப் படிக்க வைக்கிறார். அவர் பணக்கார டாக்டர் முத்துராமனைக் காதலித்து மணந்து கொள்கிறார். அவர் மீது ஆசை வைத்திருந்த தேங்காய் சீனிவாசன் மூலம் எம்.ஜி.ஆர் தந்தை தான் தன்னுடைய கணவனைக் கொன்றவர் என்பதை அறிந்தவுடன், முத்துராமனுடைய தாயான எஸ்.என்.லட்சுமி மருமகளை விரட்டி விடுகிறார்.

தேங்காயைத் தாக்கி சிறை செல்லும் எம்.ஜி.ஆர். அங்கே தந்தையான டி.கே.பகவதியைச் சந்திக்கிறார். அவர் கொலை செய்யவில்லை என்பதை அறிகிறார்.

சிறையிலிருந்து வெளியே வரும் எம்.ஜி.ஆர். தம்முடைய காதலியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொலையாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து தந்தையை விடுதலையடைய வைக்கிறார். தங்கையும் அவர் கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளப் படுகிறார்.

நம்பியார் மற்றும் அசோகன் வில்லன்கள். சோ நம்பியாருடைய மகன். அவருக்கு ஜோடி கீதாஞ்சலி. பேபி ஸ்ரீதேவியும் படத்தில் உண்டு.


கே.வி.மகாதேவன் இசையில் பெரும்பாலான பாடல்கள் அருமை. அதிலும் "கடவுள் ஏன் கல்லானான் ", "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ", "நீல நிறம் " ஆகிய பாடல்கள் குறிப்பிட தக்கவை.

No comments:

Post a Comment