Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1970யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.

4 comments:

  1. such satires hold good even today!

    ReplyDelete
  2. Viveka Fine arts தங்கள் ஐம்பதாம் ஆண்டு விழா நடத்திய போதுபோது மமேடை ஏறிய எட்டு நாடகத்தில் இதுவும் ஒன்று. பார்த்து மிகவும் ரசித்தேன்

    ReplyDelete