Saturday, August 5, 2017

லட்சுமி கல்யாணம்

1968 நவம்பரில் வெளியான படம், லட்சுமி கல்யாணம். இதில் சீனு என்ற அசட்டுப் பையன் வேடத்தில் சோ நடித்துள்ளார். ஜீ.ஆர். நாதன் இயக்கத்தில் .எல்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் வெளியான படம்.

சிவாஜி ஹீரோ. அவருக்கு ஜோடி கிடையாது. அவரும் அவருடைய தந்தை வீ.கே.ராமசாமியும் ஒரு கிராமத்தில் கடை வைத்திருப்பர். அதே ஊரைச் சேர்ந்த சௌகார் ஜானகியுடைய மகளான நிர்மலாவைத் தம்முடைய தங்கையாகப் பாவிப்பார் சிவாஜி. சௌகார் ஜானகியுடைய கணவரான மேஜர் சுந்தர்ராஜன் இறந்து விட்டதாக எல்லோரும் நம்புவார்கள். ஆனால் ஜானகி பூவும் பொட்டுமாக இருப்பார். அதைப் பற்றி ஊரில் எல்லோரும் தவறாகப் பேசுவார்கள். சிவாஜி லட்சுமி என்ற நிர்மலாவின் கேரக்டருக்குப் பல போராட்டங்களுக்கு இடையே திருமணம் செய்து வைப்பதே கதை.

நல்ல கதை. கடைசி 20-30 நிமிடங்களில் சிறிது மசாலா - நம்ப முடியாத காட்சிகள். மற்றபடி படம் நன்றாகத் தான் இருக்கிறது. தங்கை மீது பாசம், தங்கைக்குக் கல்யாணம் நடக்கவில்லையே என்ற ஏக்கம், எதிரிகள் மீது கோபம், சில கேரக்டர்களைக் கிண்டல் செய்யும்போது குறும்பு என சிவாஜியுடைய நவரச நடிப்பு பிரமாதம். சௌகார் ஜானகி தான் கதையின் நாயகி. வழக்கம் போல தேவைக்கேற்ற நல்ல நடிப்பு.

நிர்மலா கேரக்டர் பெயரில் தான் படத் தலைப்பு. ஆனால் அவருக்கு சப்போர்டிங் கேரக்டர் தான். நிர்மலாவைத் திருமணம் செய்ய நினைத்து அது முடியாமல் போக, அவரைத் திருமணம் செய்ய வருபவர்களை எல்லாம் மனம் மாற்றி திருமணத்தைக் கெடுக்கும் வில்லன் கேரக்டரில் நிறைவாக நம்பியார் நடித்துள்ளார். அரசியல் கைதியாக ஜெயிலிலிருந்து தப்பி தலைமறைவு வாழ்க்கை நடத்தி கடைசியில் எல்லாருக்கும் உண்மையை விளக்கி உயிரை விடும் கேரக்டரில் மேஜர் - வழக்கமான நடிப்பு. பாலாஜி - முக்கியமில்லாத வேடத்தில். பாலாஜி சிவாஜியின் நண்பர். நிர்மலாவைத் திருமணம் செய்யும்போது, ஜானகியைப் பற்றி அவருடைய தந்தை வீ.எஸ். ராகவனிடம் பேசி நம்பியார் திருமணத்தை நிறுத்தி விடுவார். ராகவன் கடைசியில் சுந்தர்ராஜன் தன்னுடைய பழைய நண்பர்; தம்முடைய சகோதரனைக் கொன்ற வெள்ளைக்காரனைக் கொன்றுவிட்டு அரசியல் கைதியானவர் என்ற உண்மை தெரிந்தவுடன் நிர்மலாவை ஏற்றுக் கொள்வார்.

சிவாஜியுடைய நண்பனாக வி. கோபாலகிருஷ்ணன். தம்முடைய கால் ஊனமுற்ற தங்கையைச் சிவாஜிக்குத் திருமணம் செய்து வைத்து, தாமும் நிர்மலாவைத் திருமணம் செய்ய தயாராகயிருப்பார். ஆனால் வங்கியில் கையாடிய குற்றத்துக்காக கைது செய்யப்படுவார். ராமதாசும் நிர்மலாவைத் திருமணம் செய்யும் எண்ணத்தில் வந்து, நம்பியாரால் மனம் மாற்றப்படும் சிறு வேடத்தில் வருவார்.

கண்ணதாசன் கதை வசனம் எழுதி பாடல்களும் எழுதியுள்ளார். அருமையான பாடல்கள். 'ராமன் எத்தனை ராமனடி ' என்ற மிகவும் அருமையான பாடல் இப்படத்தில்தான்.


சோ தோன்றும் இடமெல்லாம் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அசட்டு கேரக்டர். அவரைப் படத்தில் பலரும் கிண்டலடிப்பார்கள். அதற்கு சோ அளிக்கும் பதில்களிலேயே எதிராளிகளைத் தூக்கிப் போட்டுவிடுவார். அவர் மற்றவர்களைக் கிண்டல் செய்வது போல அமைந்திருக்கும் அவருடைய பதில்கள்.

No comments:

Post a Comment