Friday, August 11, 2017

மகிழம்பூ

1969யில் வெளியான மகிழம்பூ படத்தை வி.டி.அரசு இயக்கியிருந்தார். இதில் சோவுக்குப் பூங்காவனம் என்ற படிக்காத கிராமத்து இளைஞர் வேடம். படம் முழுக்க திருநெல்வேலி தமிழில் பேசி வெளுத்து வாங்கியுள்ளார். படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் சோவின் காமெடி டிராக். சோவுக்கு ஜோடியாக மனோரமா. படிக்காத சோ படித்தவர்களைக் கிண்டலடிக்கும் இடங்கள் சிரிக்கவும், சில இடங்களில் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன.

ஏ.வி.எம்.ராஜன் நாயகன். பணக்காரரான அவர் குருட்டாம் போக்கில் எல்லாருக்கும் தானம் செய்கிறார். தனக்கு மிஞ்சி தான் தானம் தர்மம் எனச் சொல்லும் அவருடைய அண்ணனான வி.எஸ்.ராகவனுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. ராஜன் ஒரு கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டுகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த புஷ்பலதாவைத் திருமணம் செய்யும் சமயத்தில், வில்லன் மனோகர் முட்டுக்கட்டை போடுகிறார். தாம் முன்பு உதவிய யாருமே தமக்கு உதவ முன் வராததைக் கண்டு, தமக்கு மிஞ்சியே தான தர்மம் என்பதை உணர்கிறார். படம் சுபமாக முடிகிறது. மேஜர் சுந்தர்ராஜன், டைப்பிஸ்ட் கோபு ஆகியோரும் படத்தில் உண்டு.

பாடல்கள் மனத்தில் பதியவில்லை. சோவுடைய காட்சிகளைத் தவிர்த்து பார்த்தால் படம் ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. 

No comments:

Post a Comment