Friday, August 4, 2017

முதல் வண்ணப்படம்

எம்.ஜி.ஆருடன் சோ சேர்ந்து நடித்த 'ஒளி விளக்கு' என்ற படம் சோ நடித்த முதல் வண்ணப்படமாகும். தர்மேந்திரா நடித்து 'ஃபூல் அவுர் பத்தர்' என்ற ஹிந்தி வெற்றிப்படத்தின் ரீ-மேக் தான் இந்தப்படம். சாணக்யா இயக்கம். 1968 செப்டம்பர் வெளியீடு. எம். எஸ். விஸ்வநாதனின் இசையில் எல்லாப் பாடல்களுமே மிக நன்றாக வந்திருந்தன. குறிப்பாக 'ஆண்டவனே', 'தைரியமாகச் சொல்', 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்.

சௌகார் ஜானகி தான் கதைப்படி கதாநாயகி. ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு ஜோடி. அளவுக்கு அதிகமாகப் பயங்கரமாகச் சிரித்து அசோகன் எரிச்சலூட்டுகிறார். இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கிச் செல்கிறார் மனோகர். ஒரே ஒரு காட்சியில் தேங்காய் சீனிவாசன். போலீஸ்காரராக வி.எஸ். ராகவன்.

மூலக் கதை நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆருக்காகவோ என்னவோ திரைக்கதையில் நிறைய மசாலாவும் சென்டிமென்டும். எம்.ஜி.ஆரின் 100 ஆவது படமாகிய இது தமிழகத்தில் வெற்றி பெறவில்லை எனக் கேள்வி.

கதைப்படி எம்.ஜி.ஆர். ஒரு திருடர். அவர் மனம் திருந்திய பிறகு ஜெயலலிதாவும் அசோகனும் ஒரு வங்கியைக் கொள்ளையிடுவார்கள். எம்.ஜி.ஆர் அதைத் தடுக்கும் முயற்சியில் போலீஸ் வந்துவிடும். கள்வர்கள் ஓடி விடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு சிறைத் தண்டனை கிடைக்கும். வெளியே வந்த எம்.ஜி.ஆர். அசோகனைக் கண்டுபிடித்து நியாயம் கேட்பார். அசோகனுடைய கையாளைப் பொய் துப்பாக்கியால் ஜெயலலிதாவை வைத்து சுட்டுவிட்டு, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை பிளாக் மெயில் செய்வார்.
ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்காக எம்.ஜி.ஆரும் கொள்ளையடித்து அந்தப் பணத்தை அசோகனுக்கு கொடுத்து வருவார். ஒரு சமயம் கொள்ளையடிக்க போன பங்களாவில் காய்ச்சலில் தனியாகத் தவிக்கும் கணவனை ஐந்து வயதிலேயே இழந்த சௌகார் ஜானகிக்கு பணிவிடை செய்து காப்பாற்றுவார். பின்னொரு காட்சியில் அவருடைய தீய எண்ணம் கொண்ட மைத்துனனிடமிருந்து அவரைக் காப்பாற்றி, தம்முடைய வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்.

ஜானகியால் எம்.ஜி.ஆர். கொள்ளையடிப்பதை நிறுத்துவார். ஆனால் அசோகன் அவரை மிரட்டுவார். இதற்கிடையே ஒரு தீ விபத்தில் ஒரு குழந்தையைக் காப்பாற்றி தீக்காயம் படுவார் எம்.ஜி.ஆர். அப்பகுதி மக்கள் எல்லாரும் அவருக்கு உதவுவார்கள். ஜெயலலிதா தான் யாரையும் கொலை செய்யவில்லை என்பதைக் கண்டறிவார்.

க்ளைமாக்ஸ் சண்டை. வில்லன்கள் போலீஸ் வசம். ஜானகி கத்திக்குத்தால் மரணம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஜோடி சேர்வார்கள்.


சோவுக்கு வழக்கம் போல நகைச்சுவை வேடம். கத்திரி எனப் பெயர். திருட்டுத் தொழில் செய்வார். அவர் தேங்காய் சீனிவாசனுடன் சேர்ந்து வரும் காட்சியில் தமக்கு மாறு கண் இருப்பதைப் போல நடிப்பார். இந்தக் காட்சியைத் தவிர சோ தோன்றும் மற்ற காட்சிகள் ஒன்றும் சொல்லும்படி இல்லை

No comments:

Post a Comment