Sunday, August 13, 2017

சிவாஜி நாயகன் - சோ வில்லன்

விளையாட்டுப் பிள்ளை - சிவாஜி நாயகனாக நடித்த படத்தில் சோ வில்லனாக நடித்த படம் இது. அடிதடி வில்லன் இல்லையென்றாலும் வில்லன்தான், நகைச்சுவை வில்லன்.

பிப்ரவரி 1970யில் வெளிவந்த இப்படம் கொத்தமங்கலம் சுப்பு எழுத்தில், எஸ்.எஸ்.வாசன் திரைக்கதையில், .பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான அருமையான படம். கே.வி.மஹாதேவன் இசையில் "ஏரு பெருசா" உட்பட சில நல்ல பாடல்கள் படத்தில் உண்டு. சிவாஜி, பத்மினி, சோ, வி.எஸ்.ராகவன், ராகவனுடைய மனைவியாக நடிப்பவர் (பெயர் தெரியவில்லை), டி.எஸ்.பாலையா, மனோரமா, காஞ்சனா, சிவகுமார் என எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து மிகையின்றி நடித்துள்ளனர்.

படிக்காத சிவாஜியும்அந்த கிராமத்து பண்ணையார் வி.எஸ்.ராகவனுடைய மகளான பத்மினியும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். சிவாஜியுடைய பெரியப்பாவான டி.எஸ்.பாலையா நடுவில் புகுந்து சில குழப்பங்கள் ஏற்படுத்த, சிவாஜியும் பத்மினியும் ராகவன் சம்மதமின்றி கல்யாணம் செய்து கொள்கின்றனர். பாலையா சூழ்ச்சியால் அவர்களை ஊரும் குடும்பமும் ஒதுக்கி வைக்கின்றனர். இருந்த வீடும் பறிபோகிறது.

சில வருடங்கள் கழித்து, பண்ணையார் மனம் மாறி பேரன் பெயரில் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போகிறார். இன்னும் சில வருடங்கள் கழித்து, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்தான அரசன் ராமதாஸ் உயிரை மதம் பிடித்த யானையிடம் இருந்து காப்பாற்றுகிறார் சிவாஜி. அதனால் இளவரசி காஞ்சனா நட்பு கிடைக்கிறது. அதை பாலையாவுடைய மகனான சோ தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கிறார். அதை பத்மினியும், அவருடைய மகனாக வரும் சிவகுமாரும் நம்புவதால், சிவாஜி குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. கடைசியில் சிவாஜி உயிரைப் பறிக்க சோ செய்யும் முயற்சியும் தோல்வியில் முடிய, படம் சுபமாக முடிகிறது.

கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை; அழுகை கிடையாது. அழகான பத்மினி; வீரமான சிவாஜி; இளமையான காஞ்சனா; சிரிப்புக்கு பாலையாவும் சோவும் - இப்படி எல்லா விஷயங்களும் ஒருங்கே அமைந்த சூப்பர் படம் இது.


வேலு என்பது சோவுடைய கதாபாத்திர பெயர். மனோரமா ஜோடி. நாடக நடிகராக வருகிறார். பிற்பாதியில் சிவாஜிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் வில்லனாக மாறுகிறார். கூர்மையான வசனங்கள் இல்லை என்றாலும், சிரிப்பைத் தூண்ட கூடிய வசனங்கள் மற்றும் நடிப்பு.

No comments:

Post a Comment