Monday, September 11, 2017

ரிக்ஷாக்காரன்

29 மே 1971யில் வெளியான ரிக்ஷாக்காரன் படத்தில் பிச்சுமணி என்ற சபலம் பிடித்த வயதான பிராமணர் வேடம். தேவையில்லாத படம். காட்சிகள் அதிகம் இல்லை. நகைச்சுவையும் சுமார் ரகம் தான். வயதான மேஜர் சுந்தர்ராஜனுக்கே மாமாவாக வருகிறார். முகமது பின் துக்ளக் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த படம் வெளிவந்த சில மாதங்களிலேயே இப்படிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத படத்தில் நடிப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும் சோ.

எம்.ஜி.ஆர். நாயகன். அவருக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அருமையான பாடல்கள். வழக்கமான மசாலாக் கதை. அனாதைப் பெண்ணான மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனாக வரும் எம்.ஜி.ஆரும் காதலிக்கிறார்கள். பத்மினியுடைய பெண்தான் மஞ்சுளா என நம்பும்படி கதை நகர்கிறது. கடைசியில் மஞ்சுளா மேஜருடைய மகள் என்ற உண்மை தெரிகிறது. வழக்கம் போல் அசோகன், மனோகர், கண்ணன் என நிறைய வில்லன்கள் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கிப் போகிறார்கள். மேஜர் இறக்க அப்பழி மஞ்சுளா மீது விழ, கடைசியில் யார் உண்மையான குற்றவாளி என்பதை எம்.ஜி.ஆர். கண்டுபிடிக்கிறார். முடிவு சுபம். தேங்காய் சீனிவாசன் தான் முக்கியமான நகைச்சுவை நடிகர். இவரைத் தவிர ஐசரி வேலன், உசிலை மணி, குண்டு கருப்பையா எனப் பலரும் உண்டு. பூர்ணம் விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

No comments:

Post a Comment