Saturday, October 28, 2017

கற்பூரம்

1967யில் வெளிவந்த இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிட்டவில்லை.

இப்படத்தில் ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, பாலையா, மணிமாலா, அசோகன், ஸ்ரீகாந்த், மனோரமாவுடன் சோவும் நடித்துள்ளார். சோவுடைய ஜோடி மனோரமா. சி.என்.ஷண்முகம் இயக்கம்.

Saturday, October 21, 2017

உனக்கும் எனக்கும்

இப்படம் 1972யில் வெளியானது. என்.எஸ்.மணியம்  இயக்கத்தில், ஜெய்சங்கர், பாரதி , ஸ்ரீ வித்யா , வாசு, எம்.என்.ராஜம், மனோரமா, சுகுமாரி, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். நல்ல தம்பி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார். ஜெய்சங்கருக்கு வேலையாளாக வருகிறார். மனோரமா சோவுடைய ஜோடி.

திமிர் பிடித்த நாயகியிடம் சவால் போட்டு, அவர் வீட்டிலேயே டிரைவராக வேலை பார்த்து அவரைக் கரம் பிடித்து, அதன் பிறகு அக்குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்கும் நாயகனின் கதை.

சோவின் நகைச்சுவை படத்தைப் போலவே சுமார்ரகம். 

ஆசீர்வாதம்


இப்படம் 1972யில் வெளியானது. ஆர். தேவராஜன் இயக்கத்தில், சுமாரான கதை; சுமாரான படம். ஆனால் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.வி.சுப்பையா மிகவும் அருமையாக நடித்துள்ளார். சோவின் நகைச்சுவை ரசிக்கும்படியாக இருந்தாலும், அவர் சில காட்சிகளிலேயே தோன்றுகிறார். வேணு என்ற பெயரில் நாயகனுக்கு நண்பனாக வருகிறார்.

அநாதைப் பையனைச் செலவு செய்து படிக்க வைக்கிறார் ஆசிரியர் சுப்பையா. அச்சிறுவன் வளர்ந்த பின் ஜெய்சங்கர். நன்றாகப் படித்து பட்டம் வாங்குகிறார். படிக்காத ஆசிரியர் மகன் வாசு அவர் மீது பொறாமை கொள்கிறார். சந்தர்ப்ப வசத்தால் முதலாளி வி.எஸ். ராகவன் மகளான லட்சுமியைத் திருமணம் செய்து கொள்கிறார் ஜெய். தாம் ஏழை என்ற உண்மையை சில காரணங்களால் சொல்லாமல் மறைக்கிறார். அதைப் பயன்படுத்தி பணம் பறிக்கிறார் வாசு. அவர் எப்படி மனம் திருந்தினார், ஏழைகளை வெறுக்கும் லட்சுமி எப்படி திருந்தினார் என்பது மீதி கதை.

தேங்காய் சீனிவாசன், சி.ஐ.டி.சகுந்தலா, எம்.பானுமதி, சுருளிராஜன் போன்றோரும் படத்தில் உண்டு.

மிஸ்டர் சம்பத்

சோ இயக்கிய படம். ஆர்.கே.நாராயணின் நாவலைத் தழுவி எழுதப்பட்ட கதை. திரைக்கதை வசனமும் சோவுடையவை. இப்படம் 13 ஏப்ரல் 1972யில் வெளியானது.


மற்றவர்களை ஏமாற்றியே வாழும் சோவும், மிகவும் நல்லவரான மேஜர் சுந்தர்ராஜனும் தத்தம் வழியே சிறந்தது எனச் சவாலிட்டுக் கொள்கிறார்கள். ஒரு வருடம் கழித்து தங்கள் தங்கள் வழியிலேயே பயணித்து வாழ்க்கையில் யார் முன்னேறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதே அந்தச் சவால்.

ஜிப்பா கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு வெத்தலைப் பாக்குப் பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, நக்கலாக அனைவரின் பலவீனத்தையும் அறிந்து கொண்டு ஏமாற்றுபவராகக் கலக்கியுள்ளார் சோ. மனோரமா அவருக்கு ஜோடி.

முத்துராமன், ஜெயா, நீலு, பூர்ணம் விஸ்வநாதன், மாலி, வெண்ணிறாடை மூர்த்தி, சுகுமாரி, செந்தாமரை ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

வசனங்களும் சோவுடைய அட்டகாசமான நடிப்பும் நாடகப் பாணியில் அமைந்த இப்படத்தின் மிகப் பெரிய பலம். நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். 

புது முக நடிகையான ஜெயாவைத் தமக்குத் தெரியும் என எல்லாரையும் நம்ப வைத்து, இலவசமாக இருக்க இடமும், சாப்பிட உணவும், நல்ல மரியாதையையும் சாமர்த்தியமாக ஏற்படுத்திக் கொள்கிறார் சோ. பிறகு ஜெயாவையும் நம்ப வைத்து, அவருடைய அக்காவான மனோரமாவை மயக்கி, அவர்களை முத்துராமன் இயக்கும் படத்திலிருந்து விலக வைக்கிறார். தம்மை நம்பி ஏமாறும் பூர்ணம் விஸ்வநாதனையும் மாலியையும் வைத்துப் பணத்தைத் தயாரித்து நஷ்டப்பட வைக்கிறார். கடைசியில் செய்யாத குற்றத்துக்குக் கைதாகிச் சிறை செல்கிறார்.




Friday, October 20, 2017

தெய்வ சங்கல்பம்

21 ஜூலை 1972யில் வெளியான இப்படத்தை பி.ஆர்.சோமு இயக்கியுள்ளார். .வி.எம்.ராஜன், விஜயகுமாரி, முத்துராமன், பாலையா, பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, ஜி.சகுந்தலா, மேஜர் சுந்தர்ராஜன், சச்சு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். சோவுக்கு அநாதை ஆசிரம நிர்வாகி வேடம்; மணி என்று பெயர். படம் நன்றாக இல்லாததால் சோவின் நகைச்சுவையும் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. சச்சு அவருக்கு இணை.

கதை சுமார்; திரைக்கதை சுத்த மோசம். மேஜர் சுந்தர்ராஜனுடைய தங்கையான சகுந்தலாவை ஏமாற்றி விடுகிறார் வி.எஸ்.ராகவன். அதற்குப் பழிவாங்க ஒரு விபத்தில் சுய நினைவின்றி இருக்கும் ஏ.வி.எம்.ராஜனை ராகவன் மகளான விஜயகுமாரிக்குத் தாலி கட்ட வைக்கிறார் மேஜர். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தந்தைக்கும் மகளுக்கும் மணாளன் யாரெனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் குணமாகும் ராஜன் தாம்தான் விஜயகுமாரிக்குத் தாலி கட்டியவர் எனப் பொய் சொல்ல, ஏன் எதற்கு எனக் கேட்காமல் அதை அப்படியே நம்பி விஜயகுமாரி அவர் வீட்டுக்குப் போய் விடுகிறார். பின் அது பொய் எனத் தெரிந்து வெளியேறுகிறார். சில குழப்பங்களுக்குப் பிறகு உண்மை தெரிந்து, பிரிந்தவர்கள் சேர்ந்து, இறந்தவர்களாகத் தெரிந்தவர்கள் உயிருடன் வந்து, எல்லா உண்மைகளும் எல்லாருக்கும் தெரிந்து, கதை சுபமாக முடிகிறது.


சோவின் நகைச்சுவை போல பாலையாவின் நடிப்பும் எடுபடவில்லை. அவர் தம்முடைய அக்காளான வரலட்சுமிக்குப் பயந்தவராக வருகிறார். அவருக்கு இணை பண்டரிபாய்; மகன் ராஜன். அக்காள் மகளாக சச்சு. எல்லா நடிகர்களும் இயக்குனரால் வீணடிக்கப்பட்டுள்ளனர். 

Thursday, October 19, 2017

புகுந்த வீடு

சோவுக்கு இரட்டை வேடம்; அம்பலம் என்ற வேடத்திலும், அவருடைய தந்தையாகவும். தந்தையாக வரும் சோ என்ன காரணத்தினாலோ முழுக்க முழுக்க பாலையாவைப் போல பேசி நடித்துள்ளார். சில காட்சிகளிலேயே இந்தப் பாத்திரம் தோன்றுகிறது. மகன் கேரக்டர் நாட்டுப்புறமாக உள்ள மனைவியை விரும்பாமல், மனைவியே மாடர்ன் உடையணிந்து யாரைப் போலவோ வர, அது தெரியாமல் அவர் மீது சபலப்படும் கேரக்டர்.

பட்டு இயக்கிய படம். படத்தில் திரைக்கதையும் வசனமும் வீக். அதனால் சோ-மனோரமா காம்பினேஷன் ரசிக்கும்படியாக இருந்தாலும் எப்போதும் நினைவு கூரும் வகையில் அமையவில்லை.

நாயகன் ரவிசந்திரன்; அவரைப் பணக்கார ஏ.வி.எம்.ராஜனுடைய தங்கையான லட்சுமி காதலித்து மணம் செய்து கொள்கிறார். ஓர் ஏற்பாட்டின்படி ஏ.வி.எம். ரவிசந்திரன் தங்கையை (சந்திரகலா) மணமுடிக்கிறார். லட்சுமிக்கு சதா இருமும் மாமியாரான சாவித்ரியைக் கண்டால் பிடிக்கவில்லை. அதனால் தம்பதியரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர். அது ராஜன் தம்பதியருடைய வாழ்க்கையையும் பாதிக்கிறது. கடைசியில் லட்சுமி மனம் திருந்தி எல்லாரும் ஒன்று சேர்கின்றனர். வி.எஸ்.ராகவன், சி.ஐ.டி.சகுந்தலா போன்றோரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள் நிறைவாக நடித்துள்ளனர். ஆனால், சுமாரான பட்டுவின் இயக்கம் படத்தை ரசிக்கும்படி செய்யவில்லை.

இப்படம் வெளியான ஆண்டு 1972.

Saturday, October 14, 2017

தாய்க்கு ஒரு பிள்ளை

ஒரு காட்சியில் மகிழ்ச்சியால் சிரிக்கும் ஏழை ஒருவரைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிடுவார் சோ. அருகிலிருப்பவர் காரணத்தைக் கேட்க, சோ சொல்வார் - "ஏழையின் சிரிப்பில் நான் இறைவனைக் காண்கிறேன்."

இப்படி படத்தில் பல தருணங்களில் சோவின் வசனங்கள் தி.மு.க.வையும் இந்திரா காந்தியையும் தாக்குகின்றன. எம்.ஜி.ஆர். கணக்கு கேட்ட விவகாரம், கருணாநிதி பாணியில் மேடைப் பேச்சு, இந்திரா காந்தி காரணமின்றி மாநில ஆட்சியைக் கலைப்பது என பல அரசியல் சமாச்சாரங்கள் கிண்டலடிக்கப் படுகின்றன. இயக்குனர் பட்டு சோவுக்கு இப்படத்தில் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

சோவுடைய சொந்த வசனங்களைத் தவிர இப்படத்தில் எதுவுமே ரசிக்கும் படியாக இல்லை. சோ மனோரமா தோன்றும் காட்சிகளும் சுமார் ரகமே. சுமாரான கதை; தொய்வெடுக்கும் திரைக்கதை; சத்தில்லாத வசனங்கள்; மிகையான நடிப்பு; மொத்தத்தில் மோசமான படம்.

ஜெய் ஷங்கர் நாயகன்; அவருடைய வளர்ப்புத் தந்தை ஏ.வி.எம்.ராஜன். பாலாஜியால் வஞ்சிக்கப்பட்ட சாவித்ரிக்குத் தஞ்சம் தருகிறார் ராஜன். அவர்தாம் தம்முடைய தாய் என்ற உண்மை தெரியாமலேயே வளர்கிறார் ஜெய். சாகும் தறுவாயில் ராஜன் உண்மையைச் சொல்ல, தாயை வஞ்சித்த பாலாஜியையும், அதற்கு உதவிய தேங்காய் சீனிவாசனையும் பழி வாங்கப் புறப்படுகிறார் ஜெய். அவருக்கு உதவுகின்றனர் அவருடைய நண்பர்களான சோ, மனோரமா, அவருடைய காதலியும் சீனிவாசனுடைய மகளுமான வெண்ணிறாடை நிர்மலா. பாலாஜியுடைய மகன் சசிகுமாரும் ஒரு வில்லன். முடிவு சுபம். வெற்றி நாயகனுக்கு.

சோவுடைய கதாபாத்திர பெயர் முனியப்பா. மனோரமா அவருக்கு ஜோடி. சோ ஒரு காட்சியில் பெண்பிள்ளை வேடத்திலும் வருகிறார்.  நீலு சோவுடைய தந்தையாக வருகிறார் இப்படத்தில். அவர் வில்லன்களின் கணக்குப் பிள்ளையாக நடித்துள்ளார்.

இப்படம் வெளியான ஆண்டு 1972. பட்டு இயக்கிய படம். 

Sunday, October 8, 2017

உறவுகள் இல்லையடி பாப்பா

சோ எழுதி இயக்கிய இந்நாடகம் 1975யில் முதலில் மேடையேறியது. 1980களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

இது அரசியல் நாடகம் இல்லை. பெயருக்குக் கூட அரசியல் பற்றி மறைமுக வசனம் கூட கிடையாது. ஆனால் எப்படி சோவுடைய அரசியல் நாடகங்கள் 50 வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் ஏற்புடையதாக உள்ளனவோ, அதைப் போல இச் சமூக நாடகமும் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

புண்ணியகோடி என்ற வயோதிகர் வேடத்தில் சோ. அவருடைய மகனாக நீலு; பேரனாக அம்பி. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் கிடைத்தவுடன் அந்த ஒற்றுமை சீர் குலைகிறது. ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்; பரஸ்பரம் துரோகம் செய்ய முயல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் சில சாவுகளும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. கடைசியில் எல்லாருமே இறக்க, சோ பைத்தியம் பிடித்து அலைவதாக நாடகம் முடிகிறது.


பணத்தாசையின் தீமையையும், அதன் அசுர பலத்தையும் சோ நகைச்சுவையாக அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியுள்ளார்.

Wednesday, October 4, 2017

தவப் புதல்வன்

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படம் 26 ஆகஸ்ட் 1972யில் வெளியானது. கதாநாயகன் சிவாஜியுடைய நண்பனாக ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்துள்ளார். அசட்டுப் பாத்திரம்; மனோரமா ஜோடி. நாயகனுக்கு உதவ சோ போடும் திட்டங்கள் எல்லாம் நாயகனுக்குத் தொல்லைகள் தரும். ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் சோவின் ஆகச் சிறந்த படம் எனச் சொல்ல முடியாது.


சிவாஜி பணக்காரர். பண்டரிபாயுடைய மகன்; இசைக்கலைஞர். அவருடைய முறைப் பெண் கே.ஆர்.விஜயா. வி.கோபாலகிருஷ்ணன்-காந்திமதி தம்பதியினருடைய மகள்; டாக்டர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தறுவாயில் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் வந்து விடுகிறது. அதை நோயாளியான தாயிடம் இருந்து மறைக்க, அதைப் பயன்படுத்தி ஹோட்டலில் நாட்டியமாடும் சகுந்தலாவும் அவருடைய குடிகார அண்ணன் வாசுவும் சதி செய்கின்றனர். பல சோதனைகளுக்குப் பிறகு சதியிலிருந்தும் நோயிலிலுருந்தும் சிவாஜி விடுபடுவதே மீதி கதை.