Friday, October 20, 2017

தெய்வ சங்கல்பம்

21 ஜூலை 1972யில் வெளியான இப்படத்தை பி.ஆர்.சோமு இயக்கியுள்ளார். .வி.எம்.ராஜன், விஜயகுமாரி, முத்துராமன், பாலையா, பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, ஜி.சகுந்தலா, மேஜர் சுந்தர்ராஜன், சச்சு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். சோவுக்கு அநாதை ஆசிரம நிர்வாகி வேடம்; மணி என்று பெயர். படம் நன்றாக இல்லாததால் சோவின் நகைச்சுவையும் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. சச்சு அவருக்கு இணை.

கதை சுமார்; திரைக்கதை சுத்த மோசம். மேஜர் சுந்தர்ராஜனுடைய தங்கையான சகுந்தலாவை ஏமாற்றி விடுகிறார் வி.எஸ்.ராகவன். அதற்குப் பழிவாங்க ஒரு விபத்தில் சுய நினைவின்றி இருக்கும் ஏ.வி.எம்.ராஜனை ராகவன் மகளான விஜயகுமாரிக்குத் தாலி கட்ட வைக்கிறார் மேஜர். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தந்தைக்கும் மகளுக்கும் மணாளன் யாரெனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் குணமாகும் ராஜன் தாம்தான் விஜயகுமாரிக்குத் தாலி கட்டியவர் எனப் பொய் சொல்ல, ஏன் எதற்கு எனக் கேட்காமல் அதை அப்படியே நம்பி விஜயகுமாரி அவர் வீட்டுக்குப் போய் விடுகிறார். பின் அது பொய் எனத் தெரிந்து வெளியேறுகிறார். சில குழப்பங்களுக்குப் பிறகு உண்மை தெரிந்து, பிரிந்தவர்கள் சேர்ந்து, இறந்தவர்களாகத் தெரிந்தவர்கள் உயிருடன் வந்து, எல்லா உண்மைகளும் எல்லாருக்கும் தெரிந்து, கதை சுபமாக முடிகிறது.


சோவின் நகைச்சுவை போல பாலையாவின் நடிப்பும் எடுபடவில்லை. அவர் தம்முடைய அக்காளான வரலட்சுமிக்குப் பயந்தவராக வருகிறார். அவருக்கு இணை பண்டரிபாய்; மகன் ராஜன். அக்காள் மகளாக சச்சு. எல்லா நடிகர்களும் இயக்குனரால் வீணடிக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment