Monday, November 27, 2017

நல்ல முடிவு

இப்படம் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம். ஒரு படம் எப்படி மோசமாக இயக்கப்படக் கூடாது என்பதை எடுத்தக்காட்டும் விதமாக இப்படத்தைப் பாடத்தில் சேர்க்கலாம்.

23 ஜனவரி 1973யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் சி.என்.ஷண்முகம். இப்படத்தில் சோவுக்கு பாலு என்ற அசட்டுப் பாத்திரம். தேவையற்ற படம். நகைச்சுவை படத்தைப் போலவே சகிக்கவில்லை. மனோரமா ஜோடி. அவரும் வீணடிக்கப்பட்டுள்ளார்.சோ பெண் வேடமிட்டு தேங்காய் சீனிவாசன் கையால் தாலி கட்டிக்கொள்கிறார். தம்முடைய தம்பிக்கு மகளைத் தர வேண்டுமென முன்பே பேசி வைத்து விடுகிறார். அக்காள், தம்பி இருவருமே சோ தான் எனத் தெரியாமல் தேங்காயும் ஒப்புக் கொள்ள, அவரை ஏமாற்றி மனோரமாவைத் திருமணம் செய்து கொள்கிறார் சோ.

ஜெயந்தி, நிர்மலா இருவரும் சகோதரிகள். நிர்மலாவை மனோகர் மானப்பங்க படுத்த முயலும்போது, அவர் கொல்லப்படுகிறார். அவரை ஜெயந்திதான் கொன்றார் என நினைத்து அவரைப் பிடிக்க போலீஸ் வருகிறது. அவர் நீரில் விழுந்து தப்பிக்கிறார். அவர் இறந்து விட்டார் என எல்லாரும் நினைக்கிறார்கள். தம்முடைய அண்ணனைக் கொன்றவளின் தங்கை வாழ்க்கையைக் கெடுக்க வேண்டுமென்பதற்காக முத்துராமன் நிர்மலாவைத் திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துகிறார்.

ஜெயந்தி ஜெமினியால் காப்பாற்றப் படுகிறார். வடநாட்டு இளவரசி எனப் பொய் சொல்லி, ஜெமினி அவரைத் திருமணம் செய்து ஊருக்கு கொண்டு வருகிறார். ஜெமினி முதலில் முத்து ராமனையும், பின் ஜெயந்தியையும் கொலையாளி எனச் சந்தேகிக்கிறார். ஜெயந்தி ஜெமினியையும், நிர்மலா முத்துராமனையும், சோ மனோகரின் மனைவியையும் சந்தேகிக்கின்றனர். கடைசியில் பைத்தியமாக வேடமிட்டு அலையும் சுகுமாரியே கொலையாளி எனத் தெரிகிறது.

கொலையாளியைக் கண்டுபிடிக்க கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் மோதிரத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் மாட்டிப் பார்த்து பொருந்துகிறதா என சோவும் மனோரமாவும் வேவு பார்ப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதைப் போல ஜெமினி முத்துராமனிடம் அவர் கொலையாளியா என வினவ, அவர் மறுத்தவுடன் அதை ஜெமினி நம்பி விடுவார். அதே பாணியில் பல காட்சிகள். எப்படி இவ்வளவு மோசமாக ஒரு இயக்குனரால் படமெடுக்க முடிந்தது. 

No comments:

Post a Comment