Saturday, December 30, 2017

அன்புச் சகோதரர்கள்

"நான் அரசியலில் ஈடுபடுபவன். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஏதாவது பதில் சொல்லிடுவேன். மத்தவனுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு கவலைப்படமாட்டேன்." இப்படத்தில் இதைப் போல பல அரசியல் வசனங்கள் சோ வரும் காட்சிகளில். சுமாரான படத்தில் இப்படிப்பட்ட வசனங்கள் அவருடைய சொந்த வசனங்களாகவே இருக்க முடியும்; வசனகர்த்தாவுடையதாக இருக்க முடியாது. சில காட்சிகளே என்றாலும் சோ வரும் காட்சிகள் படத்தில் கலகல. கோபி என்ற கல்லூரி மாணவன் பாத்திரம்; நாயகியுடைய அண்ணன்; நாயகனுக்கு நண்பன். அவருக்கு ஜோடியாக வரும் நடிகையின் பெயர் தெரியவில்லை. பல படங்களில் சோவுக்கு ஜோடியாக நடித்த மனோரமா இப்படத்தில் அவருக்குத் தாயாராக வருகிறார்.

சோ தோன்றும் காட்சிகள், முத்துக்கு முத்தாக பாடல் காட்சி தவிர படத்தில் ரசிக்கும்படி எதுவும் இல்லை. நான்கு சகோதரர்களின் கதை. ரங்காராவ், மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய் சங்கர் ஆகியோரே ஆண்ட நால்வர். மேஜர் ஒரு காலத்தில் ஜமுனாவைக் காதலித்து, அவரைத் தாயாக்கி விடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையில் அவரைத் திருமணம் செய்யாமல் முறைப் பெண்ணான தேவிகாவை மணந்து கொள்கிறார். பின் உண்மையறியும் ரங்காராவ் ஜமுனாவைத் தேடிப் போகிறார்; ஆனால் அவருக்கு ஜமுனா பெற்றெடுத்த குழந்தையே கிடைக்கிறது. அதை அவர் வளர்த்து வருகிறார். இந்த உண்மைகைகள் எதையும் அறியாத ஜமுனா மிகப் பணக்காரியானவுடன் இக்குடும்பத்தைப் பழி தீர்க்கிறார். மேஜருக்கு வேலை போகிறது. குடும்பம் வறுமையில் வாடுகிறது. குழந்தை ஒன்று இறக்கிறது. கடைசியில் உண்மை அறிந்து பகை மறந்து ஜமுனா இக்குடும்பத்துடன் ஒன்று சேர்கிறார்.

நியாயமாகப் பார்த்தால் மேஜர் தான் இக்கதையின் நாயகன். ஆனால் டூயட், சண்டைக்காட்சிகள் எனப் புகுத்தி ஜெய் சங்கரை ஹீரோ ஆக்கிவிட்டார் இயக்குனர். அவருடைய ஜோடி என்பதால் வெண்ணிறாடை நிர்மலாவை  நாயகி எனலாம். மற்றபடி ஜமுனா தான் முக்கிய பாத்திரத்தில் வருகிறார் - எதிர் நாயகியாக. மனோரமா, வி.கே.ராமசாமி, வெண்ணிறாடை மூர்த்தி, நாகையா, பிரமிளா, ஸ்ரீ காந்த், ஜுனியர் பாலையா எனப் படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளம். யாருக்கும் பெரிதாக ஸ்கோப் இல்லை.

கதை சுமார். திரைக்கதை சுத்த மோசம். வசனங்கள் வேஸ்ட். ஜெய், ராஜன் போன்றோர் ஓவர் ஆக்டிங். மொத்தத்தில் மிகச் சுமாரான படம்.

லட்சுமி தீபக் இயக்கிய இப்படம் 4 மே 1973 யில் வெளியானது. 

Saturday, December 23, 2017

கங்கா கௌரி

சோ நடித்த முதல் புராணப் படமிது. பி.ஆர். பந்துலு இயக்கத்தில் 14 ஏப்ரல் 1973யில் வெளியான படம். சோ நாரதராக நடித்துள்ளார். அரசியல் வசனங்களை மறைமுகமாகப் புகுத்தி நையாண்டி செய்கிறார். ரசிக்கும்படியான நடிப்பு. ஒரு பாட்டில் இவருக்குச் சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்துள்ளார்.

சோ, மனோரமா, ஜெயலலிதா, ஜெயந்தி போன்றோர் நிறைவாக நடித்திருந்தாலும் சோ தோன்றும் காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள் ரசிக்கும்படியாக இல்லை. பல புராண கதைகளின் கலவை தான் இப்படத்தின் கதை. சிரிக்கும்படியான தோற்றத்தில் நவக்கிரகங்கள், தொந்தியுடன் சிவன் (ஜெமினி கணேசன்), வாடி போடி எனச் சண்டையிட்டுக் கொள்ளும் கங்கா - கௌரி, பயந்த சுபாவத்தில் கௌரி, போக்கிரித்தனமான கங்கா எனப் படம் முழுவதுமே அபத்தங்கள்.

ஓ.ஏ.கே. தேவர், அசோகன், சிவகுமார், பூர்ணம் விஸ்வநாதன், சி.கே.சரஸ்வதி, தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே வீணடிக்கப் பட்டுள்ளது.

Sunday, December 10, 2017

வந்தாளே மகராசி

மனோரமாவுக்கும் சச்சுவுக்கும் இதுவரை ஜோடியாக நடித்து வந்த சோ ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த படம். ஜம்பு என்ற கதாபாத்திரத்தில் சண்டைக்கார அக்காளுக்குப் பயந்த அப்பாவியாக வருகிறார். சிறிய வேடம்; ஓஹோ என்று சொல்லும்படியான காமெடி இல்லை; ஆனால் நிறைவாகச் செய்துள்ளார்.

14 ஏப்ரல் 1973யில் வெளியான இப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

எம்.என்.ராஜம் எதிர் நாயகி. அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் படம் முழுக்க ஸ்கோப். ஜெய்சங்கர் உட்பட மற்ற எல்லாருக்கும் படத்தில் அவ்வளவாக காட்சிகள் இல்லை.

பணக்காரரான வி.எஸ்.ராகவன் சபல புத்தியில் இளவயது ராஜத்தைத் திருமணம் செய்து கொள்கிறார். தந்தைக்காக புஷ்பலதா சொத்தைத் தியாகம் செய்கிறார். ராஜமும் அவருடைய அம்மாவும் (சி.கே.சரஸ்வதி) எல்லாருடனும் சண்டை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சொத்தை வைத்துக் கொள்கின்றனர். கணவனை இழந்து வரும் புஷ்பலதாவையும் அவருடைய குழந்தைகளையும் ராஜம் படுத்துகிறார். ஒரு சிறு சண்டை காரணமாக அப்பாவியான ஜெயலலிதாவைத் தம்முடைய தம்பியான சோவுக்குத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துகிறார். அதைத் தாங்க முடியாத பக்கத்து வீட்டு ஜெய்சங்கர் கில்லாடியான இன்னொரு ஜெயலலிதாவை ஆள் மாறாட்டம் செய்கிறார். இந்த ஜெயா எப்படி ராஜத்தை வழிக்குக் கொண்டு வந்து நல்லவர்கள் அனைவரையும் காப்பாற்றினார் என்பதே மீதி கதை.