Saturday, December 30, 2017

அன்புச் சகோதரர்கள்

"நான் அரசியலில் ஈடுபடுபவன். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஏதாவது பதில் சொல்லிடுவேன். மத்தவனுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு கவலைப்படமாட்டேன்." இப்படத்தில் இதைப் போல பல அரசியல் வசனங்கள் சோ வரும் காட்சிகளில். சுமாரான படத்தில் இப்படிப்பட்ட வசனங்கள் அவருடைய சொந்த வசனங்களாகவே இருக்க முடியும்; வசனகர்த்தாவுடையதாக இருக்க முடியாது. சில காட்சிகளே என்றாலும் சோ வரும் காட்சிகள் படத்தில் கலகல. கோபி என்ற கல்லூரி மாணவன் பாத்திரம்; நாயகியுடைய அண்ணன்; நாயகனுக்கு நண்பன். அவருக்கு ஜோடியாக வரும் நடிகையின் பெயர் தெரியவில்லை. பல படங்களில் சோவுக்கு ஜோடியாக நடித்த மனோரமா இப்படத்தில் அவருக்குத் தாயாராக வருகிறார்.

சோ தோன்றும் காட்சிகள், முத்துக்கு முத்தாக பாடல் காட்சி தவிர படத்தில் ரசிக்கும்படி எதுவும் இல்லை. நான்கு சகோதரர்களின் கதை. ரங்காராவ், மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய் சங்கர் ஆகியோரே ஆண்ட நால்வர். மேஜர் ஒரு காலத்தில் ஜமுனாவைக் காதலித்து, அவரைத் தாயாக்கி விடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையில் அவரைத் திருமணம் செய்யாமல் முறைப் பெண்ணான தேவிகாவை மணந்து கொள்கிறார். பின் உண்மையறியும் ரங்காராவ் ஜமுனாவைத் தேடிப் போகிறார்; ஆனால் அவருக்கு ஜமுனா பெற்றெடுத்த குழந்தையே கிடைக்கிறது. அதை அவர் வளர்த்து வருகிறார். இந்த உண்மைகைகள் எதையும் அறியாத ஜமுனா மிகப் பணக்காரியானவுடன் இக்குடும்பத்தைப் பழி தீர்க்கிறார். மேஜருக்கு வேலை போகிறது. குடும்பம் வறுமையில் வாடுகிறது. குழந்தை ஒன்று இறக்கிறது. கடைசியில் உண்மை அறிந்து பகை மறந்து ஜமுனா இக்குடும்பத்துடன் ஒன்று சேர்கிறார்.

நியாயமாகப் பார்த்தால் மேஜர் தான் இக்கதையின் நாயகன். ஆனால் டூயட், சண்டைக்காட்சிகள் எனப் புகுத்தி ஜெய் சங்கரை ஹீரோ ஆக்கிவிட்டார் இயக்குனர். அவருடைய ஜோடி என்பதால் வெண்ணிறாடை நிர்மலாவை  நாயகி எனலாம். மற்றபடி ஜமுனா தான் முக்கிய பாத்திரத்தில் வருகிறார் - எதிர் நாயகியாக. மனோரமா, வி.கே.ராமசாமி, வெண்ணிறாடை மூர்த்தி, நாகையா, பிரமிளா, ஸ்ரீ காந்த், ஜுனியர் பாலையா எனப் படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளம். யாருக்கும் பெரிதாக ஸ்கோப் இல்லை.

கதை சுமார். திரைக்கதை சுத்த மோசம். வசனங்கள் வேஸ்ட். ஜெய், ராஜன் போன்றோர் ஓவர் ஆக்டிங். மொத்தத்தில் மிகச் சுமாரான படம்.

லட்சுமி தீபக் இயக்கிய இப்படம் 4 மே 1973 யில் வெளியானது. 

No comments:

Post a Comment