Friday, February 23, 2018

வீட்டுக்கு வந்த மருமகள்

சோ நடித்த பல தேவையற்ற படங்களில் இதுவும் ஒன்று. 1973 யில் வெளிவந்த இப்படத்தை அறிமுக இயக்குனரான  ஆர்.விட்டல் இயக்கியுள்ளார். சோவுக்குப் பெண்டாட்டிக்குப் பயந்த அசட்டுப் பாத்திரம். நகைச்சுவை சொல்லும்படியாக இல்லை; அசடு வழிகிறது. சாம்பு என்பது கதாபாத்திரப் பெயர். மனோரமா ஜோடி.

பல நட்சத்திரங்கள் இருந்தும் நல்ல திரைக்கதையோ வசனங்களோ இல்லாததால் படம் சோபிக்கவில்லை. ஏ.வி.எம். ராஜன் பணக்கார மாமியாரான ஜி.வரலட்சுமியிடம் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனநிலை பாதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகே திரும்புகிறார். அவருடைய மூத்த மகளான மனோரமா தம்முடைய பாட்டியைப் போல திமிர் பிடித்தவராக இருக்கிறார். மகன் ரவிசந்திரனும் மகள் நிர்மலாவும் நல்ல மனம் படைத்தவர்கள். நிர்மலா ஏழையான முத்துராமனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாலும், வரலட்சுமியால் புகுந்த வீட்டுக்குப் போக முடியாமல் தவிக்கிறார். ரவிசந்திரனுடைய காதலியான லதா வீட்டுக்குள் புகுந்து தம்முடைய அடாவடித்தனத்தால் பாட்டியைத் திருத்தி, நிர்மலாவையும் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதே கதை.

லதா தான் தலைப்புக்கேற்ற நாயகி என்றாலும், அவரை விட நிர்மலாவுக்கு ஸ்கோப் அதிகம். அதைப் போல நாயகன் ரவிசந்திரனைவிட அவருடைய அப்பாவான ராஜனுக்குக்  காட்சிகள் அதிகம். வி.எஸ்.ராகவன், காந்திமதி, தேங்காய் சீனிவாசன், எம்.என். ராஜம் எனப் பெரிய பட்டாளமே படத்தில் உள்ளது.

பாடகி வாணி ஜெயராம் அறிமுகமானது இப்படத்தில் தான்.

Sunday, February 18, 2018

ஷண்முகப் ப்ரியா

1973யில் வெளியான இப்படத்தைப் பற்றி இன்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இது ஒரு முக்கியமான படமாக நான் கருதுகிறேன். என்.பாஸ்கரன் எழுத்தில், கே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சோ முக்கியமான வேடத்தில் நடித்த இப்படம் நாத்திகவாதத்தை நேரிடையாகவும் தைரியமாகவும் எதிர்க்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடை பெற்றுக்  கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கட்சியின் கொள்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.

மேலுகிலும் பூவுலகிலும் நடப்பதைப் போன்ற கதை. சோவுக்கு நாரதர் வேண்டும். கேட்கவா வேண்டும்? பிய்த்து  உதறுகிறார். அரசியல் நையாண்டிக்கு குறைவில்லாத வசனங்கள். சில உதாரணங்கள் -

"கலகம் செய்கிறேனா? கலகங்கள், கழகங்கள் இவற்றோடு எனக்குச் சம்பந்தமே கிடையாது."

பிள்ளையாரின் பிறந்த நாளில் கலந்து கொள்ளும் முருகனிடம் "பிறந்த நாள் - அண்ணனுக்கு? பிழைக்கும் வழி தெரிந்து கொண்டாய்."

"உன் கலகத்தை தெய்வங்களுடன் நிறுத்திக் கொள்; மனிதர்களிடம் காட்டாதே. அவர்கள் தாங்க மாட்டார்கள்." எனச் சொல்லும் முருகனுக்குப் பதில் - "அவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு."

இன்னும் ஒரு காட்சியில் அவர் விஷ்ணுவை "நாராயணா, ஆபத்பாந்தவா " எனப் பல பெயர்கள் சொல்லி அழைத்து கடைசியில் "கருணாநிதியே" என முடிக்கிறார்.

பூலோகத்தில் நாத்திகவாதம் அதிகரித்து வருவதாக நாரதர் சொல்ல, பக்தி மார்க்கத்துக்கு ஆபத்தில்லை என முருகன் சொல்ல, அதைச் சோதித்துப் பார்க்க இருவருமே பூமிக்கு வருகிறார்கள். முருகனாக சிவகுமார். நாரதாராக வரும் சோ நாத்திகரான முத்துராமனையும் ஆத்திகரான ஜெயந்தியையும் மணமுடிக்கும்படியான சூழலை உருவாக்குகிறார். பல போராட்டங்களுக்குப் பின் ஜெயந்தி தம்முடைய கணவரை எப்படி ஆத்திகராக மாற்றினார் என்பதே கதை.

மேஜர் சுந்தர்ராஜன்-சுகுமாரி முத்துராமனுடைய பெற்றோர்கள். ஜெயந்தியுடைய தந்தையாக வி.எஸ்.ராகவன், மனோரமா-சுருளிராஜன், வில்லனாக தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த படம் இது.

Friday, February 9, 2018

சூரியகாந்தி

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தை முழுக்க முழுக்க ஜெயலலிதாவே தமது தோள்களில் தாங்குகிறார். இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம். சூப்பர் ஹிட் படம். இப்போது பார்த்தாலும் சுவாரசியமாக உள்ளது. நடுத்தர வயது ஜெயலலிதா கொள்ளை அழகு; நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் மெருகு கூடியுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார்.

27 ஜூலை 1973 யில் இப்படம் வெளிவந்தது. ஜெயலலிதா, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், சாவித்ரி, சோ, மனோரமா, சி.ஐ.டி. சகுந்தலா, மௌலி, வாசு, காத்தாடி ராமமூர்த்தி, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை என எண்ணற்ற நடிகர்கள். பொதுவாக இத்தனை நடிகர்கள் இருந்தால் எல்லாருக்கும் அவ்வளவாக ஸ்கோப் இருக்காது. ஆனால் இப்படத்தில் எல்லாருக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு; இயக்குனர் எல்லாரையும் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு ஒண்டு குடித்தன வீட்டில் நடப்பதைப் போன்ற கதை. சுந்தர்ராஜன்-சாவித்ரி தம்பதியரின் மகனான முத்துராமன் ஜெயலலிதாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போகும் ஜெயா, கணவனை விட மிக அதிகமாகச் சம்பாதிக்கிறார். இதனால் முத்துராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கிடையே தோன்றும் சச்சரவே மீதி கதை.

ஊர் வம்பு பேசி அலையும் மஹாபலி என்ற பாத்திரத்தில் தோன்றும் சோ தமது நடிப்பாலும் வசனங்களாலும் கலக்கியுள்ளார். சி.ஐ.டி. சகுந்தலா சோவுக்கு ஜோடி. மனோரமாவும் படத்தில் உண்டு. மௌலியுடைய அக்காளாக வருகிறார். மௌலிக்கு இது முதல் படம்.

"நான் என்றால் அது அவளும் நானும்" என்ற பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து ஜெயலலிதா பாடியுள்ளார். இப்பாட்டில் வரும் ஆங்கில வரிகளைப் பாடியதோடு மட்டுமின்றி அவரே அவற்றை எழுதியுமுள்ளார். இப்பாடல் மிகவும் பிரபலம். அதைப் போல மனோரமா பாடிய "தெரியாதோ நோக்கு" என்ற பாடலும் பிரபலமடைந்தது. டி.எம்.எஸ். பாடி கவிஞர் கண்ணதாசன் தோன்றும் "பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" என்ற தத்துவப் பாடல் இன்றைக்குக் கூட எங்காவது ஒலித்துக் கொண்டிருக்கும். 

பொன்னூஞ்சல்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 15 ஜூன் 1973யில் வெளியான இப்படத்தில் சிங்காரம் என்ற அசட்டுக் கேரக்டர் சோவுக்கு. தங்கவேலு அப்பா; மனோரமா ஜோடி; வில்லனாக வரும் நம்பியாரின் கையாளாக இருந்து கடைசியில் நாயகனுக்கு உதவும் கதாபாத்திரம். நகைச்சுவை சொல்லும் படியாக இல்லை; பல காட்சிகள் சுத்த அசடு வடிதல். சோ தவிர்த்திருக்க வேண்டிய படமிது.

சிவாஜி ஹீரோ. எஸ்.வி. சுப்பையாவுடைய  மகன். மாமன் சஹஸ்ரநாமத்துடைய மகளான உஷா நந்தினியைக் காதலிக்கிறார். எல்லாம் கை கூடி திருமணம் நடக்கும் சமயத்தில் சுப்பையா பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு வர தட்சிணை கேட்கிறார். அதைத் தர முடியாததால் இரண்டு குடும்பங்களுக்குமிடையே இடைவெளி விழுகிறது. நம்பியார் செய்யும் சதியால் முத்துராமனைத் திருமண செய்து கொள்கிறார் நாயகி. அவர்கள் வழக்கப்படி நாத்தனாரே தாலி கட்ட வேண்டும். அந்தத் தாலி சிவாஜி வாங்கியது எனத் தெரிந்தவுடன் சிவாஜியே நாயகியை மணந்தவர் என எல்லாரும் ஒப்புக் கொள்கின்றனர். க்ளைமாக்சில் நம்பியாரை முத்துராமன் கொலை செய்து விடுகிறார். காந்திமதி, வி. கோபாலகிருஷ்ணன், சி.ஐ.டி. சகுந்தலா, உசிலை மணி போன்றோரும் நடித்துள்ளனர்.

சுமாரான படம். நம்ப முடியாத திருமண சடங்குகள். ஆகாயப் பந்தலிலே பாடல் மட்டும் சூப்பர். பல நடிகர்கள் இருந்தும் சக்தி கிருஷ்ணசாமியின் வசனம் இருந்தும் படம் ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. 

Wednesday, February 7, 2018

காசி யாத்திரை

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 மே 1973யில் வெளி வந்த படம் இது. சொக்கலிங்கம் என்ற குடிகாரன் பாத்திரத்தில் சோ நடித்துள்ளார். மனோரமா இரண்டு வேடங்கள். அதில் ஒருவர் சோவுக்கு ஜோடி. முழு நீள நகைச்சுவைப் படம். ஆனால் சோவுக்கு சப்போர்டிங் கேரக்டர் தான். வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், ஸ்ரீகாந்த் ஆகியோரே கதாநாயகர்கள். எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர். சோ வரும் காட்சிகளும் நல்ல கலகலப்புடன் உள்ளன. அரசியல் நையாண்டிகளுக்குப் பஞ்சமில்லை.

ஹனுமான் பக்தரான வி.கே.ஆர். தம்முடைய மருமக்களான குமாரி பத்மினியையும் ஸ்ரீகாந்தையும் காதலிக்கவோ திருமணம் செய்யவோ அனுமதிக்கவில்லை. சுருளி ராஜன் உதவியுடன் வி.கே.ஆர். மனம் எப்படி மாற்றப்படுகிறது என்பதே கதை.

வாசுவும் மனோரமாவும் வில்லன்கள். ஜெயா, தேங்காய் சீனிவாசன், காந்திமதி, டைப்பிஸ்ட் கோபு எனப் பெரிய நகைச்சுவை நடிகர் பட்டாளம் படத்தில் உண்டு.