Friday, March 30, 2018

ஸ்கூல் மாஸ்டர்

1958யில்  இதே பெயரில் பி.ஆர்.பந்துலு இயக்கிய கன்னடப் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பந்துலு இதை இயக்கி 25 அக்டோபர் 1973யில் வெளியிட்டார். 


ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, முத்துராமன், நம்பியார், அசோகன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், சசிகுமார், ராஜஸ்ரீ ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். 

படம் சோகமயம். ஸ்கூல் ஹெட் மாஸ்டரான ஜெமினி தீக்கிரையான பள்ளிக்கூடத்தை மாணவர்களை வைத்தே மீண்டும் காட்டுகிறார். பணக் கஷ்டத்தின் நடுவில் அவருடைய பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். இவர் ரிட்டயர் ஆனபின் பிள்ளைகள் இவரைக் கவனிக்க மறுக்கிறார்கள். பெண்டாட்டியைப் பிரிந்து அல்லலுறுகிறார். கடைசியில் அவரிடம் படித்த முத்துராமனால் கரையேறுகிறார்.

சென்டிமென்டலான கதையின் ஒரே ஆறுதல் சோவுடைய நகைச்சுவை. சோனாசலம் என்கிற சோ என்பது அவருடைய பாத்திரப் பெயர். ஆசிரியராக வருகிறார். மறைமுகமான அரசியல் தாக்குதல்கள் அவருடைய வசனங்களில் காணப்படுகின்றன. நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை.

Wednesday, March 28, 2018

மனிதரில் மாணிக்கம்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 டிசம்பர் 1973யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு மிகச் சிறிய வேடம். வேலு என்ற கேரக்டர்; ஹீரோவுக்கு நண்பர்; மெட்ராஸ் பாஷை பேசுகிறார். சோ, மனோரமா, சுருளி ராஜன் எனப் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் இப்படம் பெயரளவிலும் நம்மைச் சிரிக்க வைக்கவில்லை. எல்லாரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.வி.எம்.ராஜன் தான் நாயகன். சிவாஜி முக்கிய பாத்திரத்தில் வருகிறார். அவரும் தமாஷாக நடிக்க முயல்கிறார்; ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. நாயகனின் காதலி என்பதால் பிரமீளாவைக் கதாநாயகி எனச் சொல்லலாம். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம் எனப் பலரும் படத்தில் உண்டு. வில்லனாக மனோகர்.

மனோகரும் ராஜனும் பெரிய திருடர்கள். போலீஸ்காரர் மேஜர் அவர்களைச் சுற்றி வளைக்கிறார். தப்பிச் செல்லும் ராஜனிடம் சந்தர்ப்பவசமாக மேஜரின் சிறு குழந்தை சிக்கி விடுகிறது. மறைந்து வாழும் ராஜன் அதை வளர்க்கிறார். மனம் திருந்தி நல்ல முறையில் வாழ்கிறார். கடைசியில் வில்லனுடன் சண்டையிட்டு உடல் பலவீனமடைகிறார். ஒரு கட்டத்தில் குழந்தை மேஜரிடம் சென்று சேர்ந்து விடுகிறது. கடைசியில் வில்லன் அதைக் கடத்த ராஜன் அவனிடம் சண்டையிட்டு அதை மீட்கிறார். ஆனால் போலீஸ் அவரைச் சுட்டு வீழ்த்தி விடுகிறது.

சுமாரான கதை; மிகச் சுமாரான திரைக்கதை; உணர்ச்சியைத் தூண்டாத வசனங்களும் காட்சி அமைப்புகளும்; வீணடிக்கப்பட்ட திறமையான நடிகர்கள். நிறைய லாஜிக் ஓட்டை; மொத்தத்தில் இது ஒரு தேவையற்ற படம். 

Monday, March 26, 2018

வாயாடி

ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், மனோகர், கண்ணன், சகஸ்ரநாமம், சுந்தர்ராஜன், மனோரமா, சுகுமாரி, ஏ.சகுந்தலா  ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். மதுரை திருமாறன் இயக்குனர். 13 ஜனவரி 1973யில் வெளியான படமிது.

ஜெய்சங்கரும் சோவும் கல்லூரி நண்பர்கள். இருவருடைய பெயரும் ராஜா. அதைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறாத ஜெய் சோவுடைய சர்டிபிகேட்டை வைத்து தம்முடைய தந்தையான வி.கே.ராமசாமியை ஏமாற்றுவார். வீட்டில் வேலை செய்யும் கே.ஆர்.விஜயாவைக் காதலித்துக் கைப்பிடிப்பார். மனைவி உதவியில் படித்துப் பட்டம் பெறுவார். ஒரு கொலை கேசில் மாட்டிக் கொள்வார். விஜயா சாமர்த்தியமாக அவர் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

சுமாரான படம். சோ நகைச்சுவை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம். அதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை.

அலைகள்

ஸ்ரீதர் இயக்கிய சுமாரான படங்களில் இதுவும் ஒன்று. நல்ல கதை; ஆனால் சுமாரான திரைக்கதை; சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. நடிக்கத் தெரியாத நாயகன்; உப்புச் சப்பில்லாத பாத்திரங்கள் (நாயகன்-நாயகியைத் தவிர); மனத்தில் பதியாத காட்சிகள்; பல பரிமாணங்கள் இல்லாத திரைக்கதை என பல குறைகள்; ஒரு முறை பார்க்கலாம்.

1 ஜனவரி 1973யில் வெளியான படம். விஷ்ணுவர்தன் அறிமுகமான படம்; அவர் நடிக்கவே இல்லை. அவருக்கும் சேர்த்து வைத்து நாயகியான சந்திரகலா நடிக்கிறார்; மிகவும் அருமையான நடிப்பு. ஓர் அநாதைப் பெண் பல கயவர்களால் துன்புறுத்தப்படுகிறார்; அவருக்குத் துணையாக ஒரு போலீஸ் அதிகாரி; கடைசியில் வில்லனை நாயகி கொன்று விட, அவரை வாதாடி விடுவிக்கிறார் நாயகன்.

எதிர் நாயகியாக மனோரமா; அவருடைய அப்பாவிக் கணவராக சோ. நாராயணன் எனப் பெயர்; நகைச்சுவை சுமார் ரகமே. தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் ஆகியோரும் படத்தில் உண்டு. 

Wednesday, March 21, 2018

மல்லிகைப் பூ

என்.எஸ்.மணியம் எழுதி இயக்கி 4 டிசம்பர் 1973யில் வெளியான இப்படம் ஒரு முறை மட்டும் பார்க்கக்கூடிய வகையில் உள்ளது. இதில் சோவுக்குக் கௌரவ வேடம். முனியாண்டி என்ற கிராமத்தான் வேடம். மனைவியாக மனோரமா; நகைச்சுவை சொல்லிக் கொள்ளும்படியில்லை.

முத்துராமன் வேலை செய்யும் இடத்தில், முதலாளி பெண்ணைக் (பிரமீளா) காதலிக்கிறார். அதையறியும் முதலாளியான வி.எஸ்.ராகவன் தம்முடைய மனைவியான சுகுமாரி மூலம் சில பொய்கள் கூறி முத்துராமனை நகரத்துக்கு அனுப்பி விடுகிறார். அங்கே வில்லன் ஸ்ரீகாந்துக்குப் பயந்து ஓடி வரும் கே.ஆர். விஜயா இவரிடம் தஞ்சம் புகுகிறார். ராகவன் சதி செய்து பிரமீளாவுக்கு வேறு இடத்தில் திருமண செய்ய முயல்கிறார். அதை அறியும் முத்துராமன் சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜயாவைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இதையறியாத பிரமீளா ஊரை விட்டு ஓடி வந்து விடுகிறார்; முத்துராமனுடைய பட்டணத்து முதலாளியான ஸ்ரீகாந்துடைய மனைவிதான் விஜயா என பிரமீளா சில காரணங்களால் நம்புகிறார். அவர் விஜயாவிடம் வேலைக்காரியாகச் சேர்கிறார். பல குழப்பங்களுக்குப் பிறகு, விஜயா நல்லவர்; முத்துராமன் சந்தர்ப்ப வசத்தால் விஜயாவைத் திருமணம் செய்து கொண்டார், ஸ்ரீகாந்த் திட்டமிட்டு விஜயாவைத் துரத்துகிறார் போன்ற உண்மைகள் தெரிகின்றன. பிரமீளாவே வில்லனைக் கொன்று, தானும் உயிரை விடுகிறார். தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ராமதாஸ் போன்றோரும் படத்தில் உண்டு.

பாடல்களும் இசையும் சுமார் ரகம்; காட்சியமைப்புகளும் வசனங்களும் சுமாரே.

Wednesday, March 14, 2018

வாக்குறுதி

மோகன் காந்திராமன் இயக்கிய இப்படம் மிகவும் சுமார் ரகம். 8 செப்டம்பர் 1973யில் வெளியானது. இப்படத்தில் மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சோ தோன்றுகிறார். நாயகியுடைய அண்ணன்; மனோரமா ஜோடி. நகைச்சுவை சுமார்தான். ஒரு சில வசனங்கள் மட்டும் நன்றாக உள்ளன.

வி.எஸ்.ராகவனும் மேஜர் சுந்தர்ராஜனும் கள்ளக் கடத்தல்காரர்கள். தம்மைப் பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டர் அசோகனைச் சுட்டு கொள்கிறார் மேஜர். பதிலுக்குப் போலீஸ் சுட, துப்பாக்கியால் சுடப்படும் ராகவன் தமது மகனை வளர்க்கும்படி மேஜரிடம் வாக்குறுதி வாங்குகிறார். ஆனால் அச்சிறுவனை எங்கோ அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு, ராகவன் கொடுக்கும் பணத்தில் வேறு ஊருக்குப் போய் பெரிய பணக்காரராகிறார் மேஜர். அவருடைய மனைவி அஞ்சலிதேவி.

நிர்மலாவும் சோவும் மேஜருடைய மக்கள். நிர்மலா கார் மெக்கானிக் ஜெய்சங்கரைக் காதலிக்கிறார். அவர் பிற்பாடு மேஜரிடம் டிரைவராக வேலையில் அமர்கிறார். தாம் தான் ராகவனுடைய மகன் என்றும் அவரைக் கொன்றவனைப் பழி வாங்குவதே தனது லட்சியம் என்கிறார் ஜெய். பெயரை மாற்றி வாழும் மேஜர் இதனால் கலவரமடைகிறார். ஜெய்யைக்  கொலை செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் முடியவில்லை.

கடைசியில் ராகவன் உயிருடன் திரும்புகிறார். ஜெய். தாம் சி.ஐ.டி. என்றும் உண்மையில் அசோகனுடைய மகன் என்றும் சொல்கிறார். மேஜரைக் கைது செய்கிறார்.

தேங்காய் சீனிவாசனும் படத்தில் உண்டு.

Sunday, March 11, 2018

பெண் என்றால் பெண்

1967யில் வெளியான இப்படம் ஆரூர்தாஸ் இயக்கியது. ஜெமினி கணேசன், விஜயகுமாரி, சரோஜா தேவி, அசோகன், பண்டரி பாய், வி.கே.ராமசாமி, தங்கவேலு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

விதி வசத்தால் ஜெமினியைக் காதலிக்கும் விஜயகுமாரி அசோகனை மணப்பதும், அசோகன் காதலிக்கும் சரோஜா தேவி ஜெமினியை மணப்பதும் கதை. தனி ட்ராக்கில் மருந்து விற்பனையாளர்களாக சோவும் தங்கவேலுவும் வருகிறார்கள். கதையும் நன்றாக இல்லை. நகைச்சுவைக் காட்சிகளும் சுவையாக இல்லை. 

Saturday, March 10, 2018

மலை நாட்டு மங்கை

இப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நண்பர்களுக்காக சோ நடித்துக் கொடுத்திருப்பாரென்று. இப்படிப்பட்ட மோசமான படங்களைப் பற்றி, பிற்காலத்தில் யோசித்துப் பார்க்கும் போது நாம் நடிக்காமல் இருந்திருக்கலாமோ எனச் சோ நினைத்திருக்கக் கூடும். பி.சுப்ரமணியம் இயக்கத்தில் 3 செப்டம்பர் 1973யில் வெளிவந்த இப்படம் அறுவையோ அறுவை. சோவுக்கு மிகச் சிறிய வேடம். ராமு என்ற டிரைவர் கேரக்டர். 2-3 காட்சிகளில் உளறுகிறார் - ஒரு பெண்ணிடம் வழிகிறார். அவ்வளவு தான். இப்படி ஒரு படம் சோவுக்குத் தேவையா என நினைக்கத் தோன்றுகிறது.

ஜெமினியும் சசிகுமாரும் நாயகர்கள். விஜஸ்ரீ நாயகி. ஆனந்தன் வில்லன். சுருளி ராஜன், வி.எஸ்.ராகவன் போன்றோரும் படத்தில் உண்டு. காட்டு வாசிகளிடம் சாமியார் போல வேஷமிட்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் கொள்ளைக்காரரான ஆனந்தன். அவருடைய பிடியிலிருந்து காடு எப்படி தப்பியது என்பதே கதை. ஜெமினி காட்டுவாசியாகவும் சசிகுமார் போலீஸாகவும் நடித்துள்ளனர்.  ஜெமினிக்குத் துணையாக ஒரு யானையும், ஆனந்தனுக்குத் துணையாக ஒரு சிங்கமும் வருகின்றன. 

Tuesday, March 6, 2018

பொன்வண்டு

ஊரெல்லாம் தமிழ் தமிழனு பேசிட்டு உங்க தங்கச்சியை மட்டும் இங்கிலிஷ் பள்ளிக்கூடத்துல அனுப்பறீங்களே?

சோ - ஊருக்கு தான் உபதேசம்; நமக்கில்லை.

மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காந்தியையும் தி.மு.க.வையும் வசனத்துக்கு வசனம் சோ கிண்டலடிக்கிறார். சில காட்சிகளிலேயே அவர் தோன்றினாலும் அரசியல் வசனங்களால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் சிக்கல் சிங்காரபாலன். சினிமா கதாசிரியராக வருகிறார்; அவ்வப்போது சினிமாக்காரர்களையும் கிண்டலடிக்கிறார். சச்சு அவருக்கு ஜோடி; ஜெயசித்ரா தங்கை.

என்.எஸ்.மணியம் எழுதி இயக்கி 28 செப்டம்பர் 1973யில் வெளிவந்த இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம். பணக்காரரான அசோகனுடைய மகன் ஜெய்சங்கர்; பெரும் ஊதாரி. ஒரு கட்டத்தில் பத்தாயிரத்தைச் சம்பாதித்துக் காட்டு எனத் தந்தை சவாலிட, ஜெய்சங்கர் வேலை தேடி அலைகிறார். சினிமா ஹீரோவுக்கு ஆளைத் தேடும் கதாசிரியர் சோ, இயக்குனர் சுருளிராஜன், தயாரிப்பாளர் தேங்காய் சீனிவாசன், பைனான்சியர் மனோரமா ஆகியோரிடம் திமிராகப் பேசி வாய்ப்பை இழக்கிறார். பின் சந்தர்ப்பவசத்தால் அவர்களுடைய தங்கை, பெண், அக்காள் மகளென உறவுப் பெண்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து, சில தில்லு முல்லுகள் செய்து சினிமா வாய்ப்பைப் பெறுகிறார். நான்கு இளம் பெண்களும், போதாததற்கு வயதான பெண்மணியான மனோரமாவும் ஜெய்சங்கரைக் காதலிக்கின்றனர். சினிமா வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதால் நால்வரையும் காதலிப்பதைப் போல நடித்து, படம் முடிந்தவுடன் அவர்களிடமிருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

கலகலப்பான படம். போர் அடிக்காமல் போகிறது. பாரதி, உஷா நந்தினி, சுபா, ஜெயசித்ரா ஆகியோர் நாயகியர். அதைத் தவிர சச்சு, எம்.என்.ராஜம், வெண்ணிறாடை மூர்த்தி, ஸ்ரீ காந்த், ஜெயகுமாரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.