Tuesday, March 6, 2018

பொன்வண்டு

ஊரெல்லாம் தமிழ் தமிழனு பேசிட்டு உங்க தங்கச்சியை மட்டும் இங்கிலிஷ் பள்ளிக்கூடத்துல அனுப்பறீங்களே?

சோ - ஊருக்கு தான் உபதேசம்; நமக்கில்லை.

மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காந்தியையும் தி.மு.க.வையும் வசனத்துக்கு வசனம் சோ கிண்டலடிக்கிறார். சில காட்சிகளிலேயே அவர் தோன்றினாலும் அரசியல் வசனங்களால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் சிக்கல் சிங்காரபாலன். சினிமா கதாசிரியராக வருகிறார்; அவ்வப்போது சினிமாக்காரர்களையும் கிண்டலடிக்கிறார். சச்சு அவருக்கு ஜோடி; ஜெயசித்ரா தங்கை.

என்.எஸ்.மணியம் எழுதி இயக்கி 28 செப்டம்பர் 1973யில் வெளிவந்த இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம். பணக்காரரான அசோகனுடைய மகன் ஜெய்சங்கர்; பெரும் ஊதாரி. ஒரு கட்டத்தில் பத்தாயிரத்தைச் சம்பாதித்துக் காட்டு எனத் தந்தை சவாலிட, ஜெய்சங்கர் வேலை தேடி அலைகிறார். சினிமா ஹீரோவுக்கு ஆளைத் தேடும் கதாசிரியர் சோ, இயக்குனர் சுருளிராஜன், தயாரிப்பாளர் தேங்காய் சீனிவாசன், பைனான்சியர் மனோரமா ஆகியோரிடம் திமிராகப் பேசி வாய்ப்பை இழக்கிறார். பின் சந்தர்ப்பவசத்தால் அவர்களுடைய தங்கை, பெண், அக்காள் மகளென உறவுப் பெண்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து, சில தில்லு முல்லுகள் செய்து சினிமா வாய்ப்பைப் பெறுகிறார். நான்கு இளம் பெண்களும், போதாததற்கு வயதான பெண்மணியான மனோரமாவும் ஜெய்சங்கரைக் காதலிக்கின்றனர். சினிமா வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதால் நால்வரையும் காதலிப்பதைப் போல நடித்து, படம் முடிந்தவுடன் அவர்களிடமிருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

கலகலப்பான படம். போர் அடிக்காமல் போகிறது. பாரதி, உஷா நந்தினி, சுபா, ஜெயசித்ரா ஆகியோர் நாயகியர். அதைத் தவிர சச்சு, எம்.என்.ராஜம், வெண்ணிறாடை மூர்த்தி, ஸ்ரீ காந்த், ஜெயகுமாரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு. 

No comments:

Post a Comment