Tuesday, April 10, 2018

அன்பைத் தேடி

முதல் காட்சி சோவுடைய வசனத்தில் ஆரம்பித்து, முடியும்போதும் சோ நகைச்சுவையில் முடியும். முக்தா சீனிவாசன் படம் என்பதால் சோவுக்கு முழு சுதந்திரம். அவர் தம்முடைய பாணியில் அரசியல்வாதிகளை நன்றாகக் கிண்டலடிக்கிறார். கிட்டத்தட்ட படம் முழுக்க வரும் சோவுடைய நகைச்சுவை சற்று கூட அலுப்பு தட்டவில்லை. விருந்தாளி மாமா என எல்லாரும் கூப்பிடுவார்கள், அவர் ஒரு விருந்தாளியாக சிவாஜி வீட்டில் வந்து உட்கார்வதால். ஆனால் அவர் கடைசி வரை தங்களுக்கு என்ன உறவு என அந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் புரியாது.

பிற்பகுதி சற்று சுமார் என்றாலும் மொத்தத்தில் படம் பார்க்கும்படி உள்ளது. சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும், ஜெயலலிதாவின் அருமையான நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம். பகல் கனவு கண்டு தன்னையே மறந்து எதையாவது போட்டு உடைத்து விடுவார் சிவாஜி. அதனால் அவர் எந்த வேலையிலும் நிலையாக இருக்க மாட்டார். ஒரு கட்டத்தில் இந்த கனவால் தம்முடைய அக்காள் மகளைத் தொலைத்து விடுவார். அப்பெண் இறந்து விட்டாள் என எல்லாரும் நம்பி இவரை ஒதுக்கிவிடுவார்கள். ஜெயலலிதாவைத் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தையை அக்காளுக்குக் கொடுத்து விடும் முடிவுடன் சிவாஜி இருப்பார். அதற்கிடையே வில்லனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தை கிடைத்து விட, சுபமாகப் படம் முடியும்.

சிவாஜியுடைய அக்காவாக விஜயகுமாரி, அவருடைய கணவராக மேஜர் சுந்தர்ராஜன், வில்லனாக மனோகரும் ஸ்ரீகாந்தும், நகைச்சுவைக்கு சோவும் மனோரமாவும் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment