Friday, April 13, 2018

ஒரே சாட்சி

கதை சுமார்; திரைக்கதை அதை விட சுமார்; அழுத்தமில்லாத வசனம்; மிகையான நடிப்பு - இவை எல்லாவற்றையும் கலந்து செய்த கலவைதான் "ஒரே சாட்சி". 30 மே 1974யில் வெளிவந்த இப்படத்தை கே.விஜயன் இயக்கியுள்ளார்.

சோ 3-4 காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை நன்றாக உள்ளது. சிறிதளவு அரசியலும் மறைமுகமாகப் பேசுகிறார். ரங்கன் என்ற போட்டோகிராஃபர் கதாபாத்திரம். மனோரமா ஜோடி.

கதையின் நாயகன் ஏ.வி.எம்.ராஜன். ஏழையான அவர் குடும்பம் போலீஸ் அதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன் தயவில் வாழ்கிறது. பி.ஆர்.வரலட்சுமியைக் காதலிக்கிறார் ராஜன். அவரிடம் தகாத முறையில் நடக்க முயலும் மனோகருடன் சண்டையிடுகிறார்; அவரைக் கொன்று விட்டதாக நினைத்து பயந்து வாழ்கிறார். அதைப் பார்த்த அவர் தம்பியான சிறுவனும் பயத்தில் ஊரை விட்டு ஓடி விடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசிடம் மாட்டி நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது. அவருக்காக வாதாடும் வி.கோபாலகிருஷ்ணன் கடைசியில் முன் விரோதம் காரணமாக தான் தான் மனோகரைக் கொன்றதாக உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

எம்.என்.ராஜம், குலதெய்வம் ராஜகோபால், காந்திமதி, நீலு, சி.ஐ.டி.சகுந்தலா எனப் பலரும் நடித்துள்ளனர் இப்படத்தில். சங்கர்-கணேஷ் இசை அமைத்து உள்ளனர். பாடல்கள் எதுவும் மனத்தில் பதியும்படி இல்லை. 

No comments:

Post a Comment