Tuesday, May 15, 2018

சோ நடித்த ஆங்கிலப் படம்

முன்னாள் ஜனாதிபதி கிரியுடைய மைந்தர் சங்கர் கிரி பிரிட்டிஷ் கவுன்சிலுடன் சேர்ந்து ஒரு டாகுமெண்டரி படம் தயாரித்தார். Epistle எனப் படத் தலைப்பு. அவரும் அவருடைய மனைவி யமுனா கிரியுமே வசனகர்த்தாக்கள். இயக்குனர் யாரெனத் தெரியவில்லை. ஜி.எஸ்.கோபாலகிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.

இப்படத்தில் நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய பெண்ணைச் சங்கர் தேடினார். திரு. ஒய்.ஜி.பியுடைய மனைவியான ராஷ்மி அவர்கள் ஜெயலலிதாவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ஜெயா சிறுமி. அவருடைய தாயார் சந்தியா ஒய்.ஜி.பி. நாடகங்களில் நடித்து வந்தார்.

டாக்குமென்டரியாக ஆரம்பித்த படம் திரைப்படமாக வளர்ந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என நினைத்த ஜெயா தொடர்ந்து பல நாட்கள் விருப்பமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடைசியில் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் ஆகி விட்டது.

1961யில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை. 1966யில் ஜெயா பிரபலமானவுடன் வெளிவந்தது. வந்த சுவடு தெரியாமல் படம் படு தோல்வி அடைந்தது.

ஒய்.ஜி.பியின் குழுவில் இருந்ததாலோ என்னவோ, இப்படத்தில் சோவும் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். நியாயமாக இதுதான் அவருடைய முதல் படம். பார் மகளே பார் 1963யில் தான் வெளிவந்தது. சோ இதை வெறும் டாகுமென்டரியாகவே நினைத்தார் என்று நினைக்கிறேன். இப்படத்தைப் பற்றி அவர் ஒரு முறையும் எதுவும் பேசியதில்லை. அதனால் நானும் அவருடைய திரைப்பட வரிசையில் இதை சேர்க்கவில்லை.

No comments:

Post a Comment