Wednesday, May 2, 2018

ரோஷக்காரி

மஹாராஜபுரம் சந்தானத்தின் கணீரென்ற குரலில் பாசுரத்துடன் படம் ஆரம்பிக்கிறது. எஸ்.வி.சுப்பையாவின் தேர்ந்த நடிப்பும் நம்மை மறக்கச் செய்கின்றன. ஆனால் போகப் போக படம் தடம் புரண்டு போய் விடுகிறது. கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாமே மதுரை திருமாறன் தான். ஆனால் படத்தைப் பார்க்கும்போது, நல்ல கதையை, வேறு யாரோ கதை புரியாமல் இயக்கியதைப் போல உள்ளது. அழுத்தம் இல்லாத வசனம், யதார்த்தமற்ற காட்சிகள், நிலையில்லாத பாத்திரப் படைப்பு என்று படம் முழுக்க நிறைய ஓட்டைகள். முக்கியமாக படைத்தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சோவுடைய நகைச்சுவையும், அவர் எல்லாரையும் எடுத்தெறிந்து பேசும் பாணியும், முத்துராமன், சுப்பையா, மனோரமா ஆகியோரின் அருமையான நடிப்பும் படத்தில் உள்ள மிகச் சில நல்ல விஷயங்கள்.

சோவுக்கு ஏகாம்பரம் என்ற வக்கீல் குமாஸ்தா வேடம். ஹீரோ, வில்லன் எனப் பாகுபாடு இன்றி எல்லாரையும் வாரு வாரு வாருகிறார். அரசியல் பேசவில்லை என்றாலும் இப்படத்தில் இவருடைய வசனங்கள் அருமையாக ரசிக்கும்படி அமைந்துள்ளன.

ஏழை சுப்பையாவுடைய மகனும், போர்ட்டர் முத்துராமனுடைய மகனுமாகிய ரவிசந்திரன், கோடீஸ்வரப் பெண்ணான கே.ஆர்.விஜயாவைக் காதலித்து மணமுடிக்கிறார். அவரை ஏழை என்பதால் அவமானப்படுத்துகிறார் விஜயாவுடைய தகப்பனார் வி.எஸ்.ராகவன். அதனால் அவருடைய தொடர்போ பணமோ வேண்டாம் என ஒதுங்கி வாழ்கிறார் விஜயா. அவர் சாகும்போது எல்லா சொத்தையும் மாப்பிள்ளை பெயரில் எழுதி வைத்து விடுகிறார். பணம் ரவியின் மனத்தை மாற்றுகிறது. தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார்.  தந்தை,அண்ணன் மற்றும் மனைவியை ஒதுக்குகிறார். அவர் எப்படி மனம் திரும்பினார் என்பதே மீதி கதை.

வி.கோபாலகிருஷ்ணன், சி.ஐ.டி.சகுந்தலா, ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சசிகுமார், குமாரி பத்மினி ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் 21 ஜூன் 1974யில் வெளிவந்தது. 

No comments:

Post a Comment