Sunday, May 13, 2018

தங்கப் பதக்கம்

செந்தாமரையின் நாடகத்தை சில மாற்றங்களுடன் சிவாஜி கணேசன் மேடையேற்றினார். பிறகு அவரே அதைத் திரைப்படமாகவும் எடுத்தார். அது தான் தங்கப் பதக்கம். பி. மாதவன் இயக்கத்தில் 1 மார்ச் 1974யில் இப்படம் வெளியானது.

மொத்தத்தில் நல்ல படம். போலீஸின் கம்பீரத்துடன், தந்தையின் பாசத்தையும் அருமையாக நடித்துக் காட்டுகிறார் சிவாஜி. இது கண்டிப்பாக அவருடைய சிறந்த படங்களில் ஒன்று. மற்ற நடிகர்களும் இயல்பான நடிப்பில் படத்துக்குப்  பலம் சேர்க்கிறார்கள்.

நேர்மையான போலீசுக்காரருக்கு நேர்மையற்ற திருட்டு மகன். அவனைக் கடைசி வரை திருத்த முடியாமல் போகிறது. கடைசியில் அவன் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் போது, தனது கையாலேயே அவனை அந்த போலீஸ்காரர் சுட்டுக் கொள்கிறார்.

சிவாஜி காதல் காட்சிகளில் குழைவது அவருடைய கம்பீரத்தைக் குறைக்கிறது. செளத்ரி என்று தமிழ்நாட்டில் யாருக்குப் பெயர் இருக்கும்? அதையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அப்பெயரை உச்சரிக்கின்றனர். வில்லன் படிப்படியாக எப்படி உயர்ந்து நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்கும்படி வளர்ந்தார்? எதுவும் நம்பும்படி இல்லை.

காமெடி தனி டிராக். சோவுக்கு இரண்டு வேடங்கள் - அண்ணனாக நேர்மையான போலீஸ் சுந்தரம், தம்பியாக அடாவடி அரசியல்வாதி வையாபுரி என்ற வைகை வளவன். அண்ணன் கேரக்டரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வைகை வளவனாகப் பின்னி எடுக்கிறார் சோ. முக்கியமாக இப்படத்தில் எம்.ஜி.ஆரை நிறைய தாக்குகிறார்.

சோ இதில் அப்பாயிசம் என்ற கொள்கையை அறிமுகப்படுத்துகிறார். அது என்னவென புரியவில்லையே என்று ஒருவர் சொல்ல, அதுதான் அப்பாயிசம் என்கிறார் சோ. நியாயம், நேர்மை, நாணயம் என தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் கிண்டலடிக்கிறார். தம்பியாக வரும் சோ அடிக்கடி அண்ணா என்று அழைக்கிறார். ஏன்டா அண்ணன் பெயரைக் கெடுக்கிறாய் என அண்ணனாக வரும் சோ கிண்டலடிக்கிறார். இப்படி படத்தில் நிறைய அரசியல் வசனங்கள்.  குறிப்பாக,மேடையில் அவர் பேசும் வசனங்கள் ஏ க்ளாஸ். சந்தேகமின்றி இது சோவுடைய முக்கியமான படம். பட்டையைக் கிளப்புகிறார்.

சோவுக்கு ஜோடியாக மனோரமாவும் புஷ்பமாலாவும் நடித்துள்ளனர்.

சிவாஜியைத் தவிர, கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், பிரமிளா, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சுருளி ராஜன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எம்.எஸ். இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர்.

No comments:

Post a Comment