Wednesday, June 27, 2018

ஆண் பிள்ளை சிங்கம்

எஸ்.பி.முத்துராமனின் மோசமான படங்களில் இப்படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. 1975யில் வெளிவந்தது. இதில் சோவுக்கு வில்லன் வேடம். நகைச்சுவை வில்லன் இல்லை. பக்கா வில்லன்.

மிகவும் சுமாரான கதை; அதை விட சுமாரான திரைக்கதை. செந்தாமரை-எம்.என்.ராஜம் தம்பதி மற்றும் அவர்களுடைய பையன் சோ எல்லாரையும் ஏமாற்றி வட்டிக்குப் பணம் கொடுத்து, முதலையே ஏப்பம் விடுபவர்கள். இன்னொரு பையனான சிவகுமார் அப்பாவி; நல்லவர். அவர்களிடம் அகப்பட்டு அவதிப்படும் வேலைக்காரியாக சுஜாதா- அவருடைய கணவர் விஜயகுமார். வரதட்சிணை வாங்கி படாபட் ஜெயலட்சுமியைச் சோ மணந்து கொள்கிறார். சிவகுமாருடைய காதலியான ஸ்ரீப்ரியாவின் தூண்டுதல் பேரில் சிவகுமாரும் ஜெயலட்சுமியும் நாடகங்கள் ஆடி எப்படி குடும்பத்தைத் திருத்துகின்றனர் என்பதே மீதி கதை.

முத்துராமன், ஜுனியர் பாலையா, சுருளிராஜன், வெண்ணிறாடை மூர்த்தி போன்றோரும் படத்தில் உண்டு. 

Tuesday, June 26, 2018

தாய் வீட்டு சீதனம்

3 நவம்பர் 1976யில் மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பொறுமைக்கு மிகப் பெரிய சோதனை.

ரவிசந்திரன் வில்லனிக் ஹீரோ. கே.ஆர்.விஜயா நாயகி. விஜயாவைத் மணம் செய்து கொள்ளும் ரவி, நகை குறைவாக இருந்ததால் அவரை மண முறிவு செய்து விடுகிறார். விஜயா உழைத்து நல்ல நிலைக்கு வருகிறார். பின் ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோரின் உதவியுடன் சில நாடகங்கள் ஆடி கணவனைத் திருத்தி அவருடன் மீண்டும் சேர்கிறார். இது தான் கதைச் சுருக்கம்.

சோ சில காட்சிகளிலேயே தோன்றுகிறார். முக்கியமில்லாத பாத்திரம். ரவியுடைய நண்பராக வருகிறார்; பாத்திரப்  பெயர் கண்ணன்.

மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம், அசோகன், உஷா நந்தினி போன்றோரும் இப்படத்தில் உண்டு. 

Monday, June 25, 2018

அந்தரங்கம்

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 27 நவம்பர் 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். கமல்ஹாசன் நாயகன். தீபா அறிமுகமான படம்.

மேஜர் சுந்தர்ராஜன் தம்முடைய மனைவியான சாவித்ரி மீது கோபம் கொண்டு வீட்டிலேயே ஒதுக்கி வைத்திருப்பார். தம்முடைய மகளான தீபா திருமணம் முடிந்தவுடன் சாவித்ரியை விவாக ரத்து செய்வது மேஜரின் முடிவு. இதைத் தெரிந்து கொண்ட தீபா தாம் காதலிக்கும் கமலைத் திருமணம் செய்ய மறுத்து விடுகிறார். கமல் காரணத்தைக் கண்டுபிடிப்பதோடு மேஜரையும் சாவித்ரியையும் சேர்த்தும் வைக்கிறார். இடையில் வில்லன் கூட்டத்துடன் சண்டையும் போடுகிறார்.

"ஞாயிறு ஒளி மழையில்" சிறந்த பாடல். வி.கோபாலகிருஷ்ணன், காத்தாடி ராமமூர்த்தி எனப் பலரும் நடித்துள்ளனர்.

சோ, தேங்காய் சீனிவாசன், சுகுமாரி, மனோரமா ஆகியோரின் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. சோ தஞ்சாவூர் தங்கமணி என்ற கேரக்டரில் வருகிறார். தஞ்சாவூருக்கு வக்காலத்து வாங்கும் கேரக்டர். அலட்டாமல் அருமையான நடிப்பு. வெளுத்து வாங்குகிறார். 

Sunday, June 24, 2018

சினிமாப் பைத்தியம்

31 ஜனவரி 1975யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன். ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக். சுவாரசியமான படம். சினிமா பைத்தியம் பிடித்து அலையக் கூடாது என்பதையும், சினிமா நடிகர்கள் எதையும் மிகைப்படுத்தி செய்வார்கள் என்பதையும் எடுத்துரைக்கும் படம். ஜெய்சங்கர் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தம்முடைய இமேஜைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் நடிகர் ஜெய்சங்கராகவே நடித்துள்ளார். அவரை விட வில்லன் நடிகர் பலசாலி, அவரை விட ஒரு துணை நடிகர் நல்ல உடல்கட்டு உடையவர், அவர் 500 ரூபாய் தர்மம் செய்தால் அவருடைய உதவியாளர் அவர் ஐயாயிரம் உதவி செய்ததாக செய்தி வெளியிடுவது, தம்முடைய மகளுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு உதவி கேட்டு வரும் பெண்ணுக்குப் புத்திமதி கூறி ஊர் போய்ச் சேர பணம் கொடுத்தனுப்புவது எனப் பல காட்சிகள். அவரைத் தவிர கண்டிப்பாக எந்த நடிகரும் இப்பத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்கள். அவர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

ஜெய்சங்கர் மீது உயிர் விடுமளவு ரசிகையான ஜெயசித்ரா தம்முடைய முறைப் பையனான கமலைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஜெய்யையே மணம் செய்ய கனவு காண்கிறார். சினிமா உலகம் உண்மையில்லை என்பதை ஜெய் அவருக்குப் புரிய வைப்பதே கதை.

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி, பி.மாதவன் உட்பட பலர் கௌரவ நடிகர்களாக நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சச்சு, மனோரமா, வி.கே.ராமசாமி போன்றோரும் நடித்துள்ளனர்.

சோ ரமணி என்ற கேரக்டரில் ஜெய்க்கு உதவியாளராக வருகிறார். சற்றும் அலட்டிக் கொள்ளாத பாத்திரம். கலகலப்புக்குச்  சற்றும் பஞ்சமில்லை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஜெய்க்கு இவர் விளம்பரம் தேடித் தருவது நல்ல வேடிக்கை. கமலுடன் சோ நடித்த முதல் படமிது.

மேல் நாட்டு மருமகள்

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 10 மே 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். இதில் சோ கௌரவ வேடத்தில் சேட்டாக வருகிறார். அவருடைய மனைவியாக மனோரமா. அவரும் கௌரவ வேடம். தேவையற்ற படம். ஒரே காட்சி - அதுவும் மனத்தில் நிற்கவில்லை.

வெளிநாட்டுக்குப் படிக்க போகும் சிவகுமார் பிரென்ச் நாட்டு லாரன்சை மணந்து கொண்டு வருகிறார். அவரையே மணம் செய்து கொள்ள காத்திருக்கும் ஜெயசுதா அவருடைய தம்பி கமல்ஹாசனை மணந்து கொள்கிறார். வெளிநாட்டுப் பெண்மணி இந்திய கலாச்சாரப்படி வாழ, கமலும் ஜெயசுதாவும் மேல்நாட்டு நாகரீகத்தில் திளைக்கின்றனர். கடைசியில் அவர்கள் மனம் திருந்தி இந்திய கலாசாரத்தை அனுசரிப்பதாக கதை.

ஜுனியர் பாலையா, பூர்ணம் விஸ்வநாதன், வாணி கணபதி, உஷா உதூப், காந்திமதி, ராமதாஸ்  ஆகியோரும் நடித்துள்ளனர். 

Friday, June 22, 2018

உண்மையே உன் விலை என்ன?

சோ என்றால் எல்லாருக்கும் அவருடைய துக்ளக் இதழும், அரசியல் நையாண்டி விமர்சனங்களும், புகழ் பெற்ற "முகமது பின் துக்ளக்"  நாடகமுமே நினைவுக்கு வரும். ஆனால் அவர் அரசியல் சார்பில்லாத சிறந்த நாடகங்களையும் எழுதியுள்ளார். அதற்குச் சிறந்த உதாரணம் "உண்மையே உன் விலை என்ன?". இத்தனைக்கும் இந்த நாடகம் 1974யில், அவர் அரசியலில் மிகவும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த காலத்தில் மேடையேறிய நாடகம். ஆனால் இதில் பெயருக்குக் கூட அரசியல் விமர்சனம் இல்லை.

இந்த நாடகம் நமது சிந்தனையைத் தூண்ட கூடியது. உண்மையை விலைக்கு வாங்க முடியுமா? முடியலாம். ஆனால் எல்லாரையுமே பணத்தால் வாங்க முடியுமா? தேவையில்லை. உண்மையின் விலை பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; அது பதவியாகவோ, வேலை வாய்ப்பாகவோ ஏன் மத நம்பிக்கையாகக் கூட இருக்க முடியும். ஒவ்வொருவரைப் பொறுத்து, உண்மையின் விலை மாறுபடலாம். அது தான் இந்த நாடகத்தின் சாராம்சம். ஆனால் முடிவில் உண்மையின் விலையாக ஒரு நல்லவர் உயிரை விட்டு, உண்மையை நிலை நாட்டுகிறார்.

ஒரு பாதிரியார்; அவரிடம் பாவ மன்னிப்பு கோர ஒருவன் வருகிறான். ஒரு பெண்ணின் கற்பைக் காப்பாற்ற அவன் செய்த கொலை தவறில்லை எனக் கருதும் பாதிரியார் அவனை மறைத்து வைக்கிறார். ஆனால் எப்போதும் உண்மை மட்டுமே பேசுகிறார்; அதனால் போலீசில் மாட்டிக் கொள்கிறார். அவரை விடுவிக்க ஒரு வக்கீல் வருகிறார். பொய் பேச மறுத்து, அந்த வக்கீலுக்கும் பெரிதாகப் பாதிரியார் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உண்மை என்ன என்பதற்கு சில சாட்சிகளும் ஆவணங்களும் கிடைக்கின்றன. கொல்லப்பட்டவனுடைய தந்தை அரசியல்வாதி. அவர் எல்லாரையும் விலை பேசி உண்மையை வாங்கி விடுகிறார். பாதிரியாருக்கு உதவியாக இருந்த வக்கீல், நண்பர், பாதிக்கப்பட்ட பெண் என எல்லாருமே விலை போகிறார்கள். ஆனால் கடைசியில் வேறு ரூபத்தில் உண்மை வெளிவருகிறது. அதை ஊருக்கு எல்லாம் தெரிய வாய்த்து அரசியல்வாதியின் கையால் இறந்து போகிறார் பாதிரியார்.

சோவுடைய காலத்தால் அழியாத படைப்புகளில் இதுவும் ஒன்று. 

உறவு சொல்ல ஒருவன்

தேவ்ராஜ் - மோகன் இயக்கத்தில் 1975 ஜூலையில் வெளியான இப்படம் ஓரளவுக்குச் சுவாரசியமான படம். நடிகர்களும் பொருத்தமான தேர்வு; இயல்பான நடிப்பு.

முத்துராமனைப் பணக்காரன் என நினைத்துக் காதலிக்கிரார் பத்மப்ரியா. பணக்காரனாகும் முயற்சியில் சிறை சென்று வருகிறரர் முத்துராமன். ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் பணக்காரரான சுஜாதாவுக்கு நர்ஸாகப்  போகிறார். சாகும் தருவாயில் உள்ள அவருடைய விருப்பம் முத்துராமனைத் திருமணம் செய்வதாக உள்ளது. அவர் இறந்தவுடன் அப்பணம் முழுவதும் முத்துராமனுக்கு வந்தால் தனக்கு நன்மை எனக் கணக்கு போடும் பத்மப்ரியா முத்துராமனைக் கட்டாயப்படுத்தி சுஜாதாவைத் திருமணம் செய்து கொள்ள வைக்கிறார். கடைசியில் சுஜாதா குணமாகி விடுகிறார். காதலை இழந்த பத்மப்ரியா தற்கொலை செய்ய முயற்சிக்கும்போது, இத்தனை நாட்களாக அவரால் நிராகரிக்கப்பட்ட சிவகுமார் அவரைக் காப்பாற்றுகிறார். இருவரும் இணைகின்றனர்.

சோ முத்துராமனுடைய நண்பராக வருகிறார். முருகேசன் எனப் பெயர். அவருடைய பாத்திரம் நகைச்சுவைக்கும் குணச்சித்திரத்துக்கும் மத்தியில் உள்ளது. சொல்லும்படி நகைச்சுவைக் காட்சிகளோ வசனங்களோ அமையவில்லை. 

Wednesday, June 20, 2018

பிஞ்சு மனம்

ஏ.கே.சுப்ரமணியம் இயக்கி 1975யில் வெளிவந்த இப்படத்தில் சோ கௌரவ நடிகர். லட்சுமியுடைய அண்ணனாக வருகிறார். நகைச்சுவை என்று பெரிதாக இல்லை.

படமும் சுத்த போர். பொறுமையுடன் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் பரிசளிக்கலாம்.

ஸ்ரீகாந்த் பெண் பித்தர். அவரால் கைவிடப்பட்ட ஒரு பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகிறார். அப் பெண் குழந்தை அநாதை ஆசிரமத்தில் வளர்கிறது. அக்குழந்தையுடைய சித்தி லட்சுமி அதை வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஸ்ரீகாந்த்தையே மணந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஜெய்சங்கர் தான் அக்குழந்தையுடைய தந்தை என லட்சுமி பொய் சொல்ல, அதை அக்குழந்தையும் ஜெயசித்ராவும் நம்புகிறார்கள். உண்மை எப்படி வெளி வந்தது, ஸ்ரீகாந்த் எப்படி திருந்தினார், ஜெயசித்ராவும் ஜெய் சங்கரும் எப்படி இணைந்தார்கள் என்பதே மீதி கதை.

பகவதி, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், காந்திமதி எனப் பலரும் நடித்துள்ளனர். ஆனால் யாருக்குமே சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. 

Monday, June 18, 2018

உங்க வீட்டுக் கல்யாணம்

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1975யில் வெளிவந்த இப்படம் முழு நீள நகைச்சுவைப் படம். தேங்காய் சீனிவாசன் நகைச்சுவை நாயகன். சுபா நாயகி. சோ மணி என்ற அசட்டு கேரக்டர். நாயகியுடைய அண்ணனாக வருகிறார். அவருக்கு ஜோடியாக மனோரமா. படத்தில் பெரிய காமெடி நடிகர்கள் பட்டாளமே இருந்தாலும் சிறிது கூட சிரிப்பு வரும்படி ஒரு காட்சியும் இல்லை. அவ்வப்போது சோ அரசியல் பேசினாலும் அது அவர் ஏற்கனவே அரைத்த மாவு.

தங்கவேலு பணக்காரர். அவருடைய மகள் சுபா தேங்காய் சீனிவாசனைக் காதலிக்கிறார். சீனிவாசன் கொள்ளைக்காரன் வேடத்தில் தங்கவேலு வீட்டில் தங்குகிறார். உண்மையான கொள்ளைக்கூட்டமே உள்ளே நுழைய, அவர்களிடமிருந்து எல்லோரும் எப்படி தப்பித்தனர் என்பதே கதை.

வெண்ணிறாடை மூர்த்தி, வி.கோபாலகிருஷ்ணன், ஜோதி லட்சுமி எனப் பலரும் நடித்துள்ளனர்.

Sunday, June 17, 2018

இதயம் பார்க்கிறது

ஜெய்சங்கரின் 100ஆவது  படம். ஜகந்நாதன் இயக்கம்; 1974 வெளியீடு. அளவிட முடியாத அளவுக்குப் போர். சோ தோன்றும் சில நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே படத்தில் ஓரளவுக்கு நன்றாக உள்ளன. சோவுக்குப் புரோக்கர் பரமசிவம் என்ற பாத்திரம். கௌரவ வேடம்; மனோரமா ஜோடி.

ஜெய்சங்கர்-ஜெயசித்ரா காதலர்கள். ஜெயசித்ரா வெளிநாட்டுக்குப் படிக்க சென்று விடுகிறார். ஒரு விபத்தில் ஜெய்க்குக் கண்பார்வையும் ஒரு கையும் விளங்காமல் போய் விடுகிறது. ஒரு கொள்ளைக்கார கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் ஜெய் எப்படி மீண்டார் என்பதே கதை. தேங்காய் சீனிவாசனும் ஸ்ரீகாந்தும் வில்லன்கள். மேஜர் சுந்தர்ராஜன், நீலு போன்றோரும் படத்தில் உண்டு.

Friday, June 15, 2018

மகளுக்காக

1974யில் எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம். ஹுசைனி என்ற கைதி; நாயகனுக்கு உதவி செய்து அவர் சிறையில் இருந்து தப்பிக்க உதவுகிறார். நகைச்சுவை என்று பெரிதாக எதுவும் இல்லை. சோ மட்டுமில்லை; இப்படத்தில் ரவிசந்திரன், விஜயகுமாரி, மனோரமா, அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் எனப் பலருக்கும் கௌரவ வேடங்கள்.

ஏ.வி.எம்.ராஜன் ஒரு சிறிய தகராறில் அடுத்த வீட்டுக்காரரான கண்ணனைக் கொலை செய்து தலை மறைவாகிவிடுகிறார். அவருடைய மனைவி விஜயகுமாரி இறந்து விட, அவருடைய பெண் குழந்தை ஏழை தேங்காய் சீனிவாசனிடம் வளர்கிறாள். அவருடைய நண்பனான எம்.ஆர்.ஆர். வாசு தாம் அப்பெண்ணை வளர்ப்பதாகப் பொய் சொல்லி ராஜனைக் கொள்ளையிட வைத்து அவ்வப்போது பணம் பறிக்கிறார். ஒரு கட்டத்தில் தம்முடைய மகளைப் பார்க்க ராஜன் வர, அவரைப் போலீசில் மாட்டி விடுகிறார் வாசு. சிறையிலிருந்து தப்பிக்கும் ராஜன் தம்முடைய மகளான ஜெயா வீட்டில் மறைந்து இருக்கிறார். போலீசாரின் உதவியோடு ராஜனைச் சுடுகிறார். ராஜன் மகள் மடியில் உயிர் விடுகிறார். அவர் உயிர் விடும் தருணத்திலேயே மகளுக்கு உண்மை தெரிகிறது. 

Tuesday, June 12, 2018

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

ரா. சங்கரன் இயக்கத்தில் 1974யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த் போன்றோருடன் சோவும் நடித்துள்ளார். பரந்தாமன் என்ற கேரக்டர். படமும் நகைச்சுவையும் சுமார் ரகம். அவ்வப்போது அண்ணா அண்ணா எனக் கூப்பிட்டு தி.மு.க.வைத் தாக்குகிறார். டெல்லி குமார் அறிமுகம் இப்படத்தில். அவர் சோவுடைய அண்ணன். மனோரமா ஜோடி. சுருளி ராஜன் மகன்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே சுமார் ரகம் இப்படத்தில். பணக்கார டெல்லி குமாருடைய இறந்து போன தம்பி மகள் ஜெயசித்ரா. அவருடைய செல்ல மகள். அவருக்கு இன்னொரு தம்பியான சோ குடும்பத்தையும், தங்கையான பண்டரி பாயையும் பிடிக்காது. பண்டரிபாயுடைய மகன் சிவகுமார் ஜெயசித்ராவைக் காதலிக்கிறார். ஒரு விபத்தில் அவர் கண் பார்வை பறி போக, அவரை குமாரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயசித்ரா. அதனால் குமாருடன் அவருக்குப் பேச்சு வார்த்தை நின்று விடுகிறது.

கடன் தொல்லையால் சோ தலை மறைவாகிவிட, அவருடைய குடும்பம் குமார் வீட்டில் தஞ்சம் புகுகிறது. ஒரு கட்டத்தில் சில காரணங்களால் தாம் இறந்து விட்டதாகவும் முதலில் யாருக்குக் குழந்தை பிறக்கிறதோ அவர்களுக்கே தமது சொத்து என அவர் உயில் எழுத, சுருளியும், வயதான மனோரமாவும் முதலில் குழந்தை பெற போட்டி போடுகின்றனர். கடைசியில் சிவகுமார் கண் பார்வை கிடைக்க, அவர்களே உத்தமர்கள் என குமார் உணர, படம் முடிகிறது.

Sunday, June 10, 2018

கல்யாணமாம் கல்யாணம்

12 ஜனவரி 1974யில் கே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சுமார்ரகம். முழு நீள நகைச்சுவைப் படம்.

ஜெய்சங்கர் ஹீரோ. ஜெயசித்ரா இரு வேடங்களில் - அவசியமின்றி. சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுகுமாரி, ஸ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன் போன்றோர் நடித்துள்ளனர். நாயகனைத் திருமணம் செய்ய மறுக்கிறாள் நாயகி. அதனால் படிக்காத கிராமத்தானாக நடித்து நாயகியின் மனத்தை மயக்கும் கதை. பொதுவாக கிராமத்தனை வெறுக்கும் நாயகியை ஏமாற்ற பணக்காரனாக நாயகன் நடிப்பதே வழக்கம். இப்படத்தில் அது மட்டும் தான் வித்தியாசம். கடைசியில் நாயகி திருந்துவார். அதுதான் க்ளைமாக்ஸ்.

சோவுக்கு டாக்டர் வேடம். நாயகியுடைய தந்தை தேங்காய் சீனிவாசனுடைய நண்பர். படம் முழுதும் அவருடன் வருகிறார். பல யோசனைகள் சொல்வார். நாயகனையும் நாயகியையும் அவ்வப்போது வாருவார். இவருடைய பங்கு நன்றாக இருந்தாலும் படம் சுமார் என்பதால் பெரிதாக எடுபடவில்லை.