Sunday, July 29, 2018

ஆறிலிருந்து அறுபது வரை

9 செப்டம்பர் 1979யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவிலும் ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாகப் போற்றப்படுகிறது. நம்ப முடியாத, மிகவும் வேகமான கடைசி 10-15 நிமிடங்களைத் தவிர்த்தால் படம் நன்றாகவே உள்ளது. சோ அழகேசன் என்ற பெயரில் பத்திரிகையாளராகவும் ரஜினியின் நண்பனாகவும் வருகிறார். இவர் இவருடைய அக்மார்க் அரசியல் வசனங்களை அவ்வப்போது பேசுகிறார். ஆனால் அவருக்கு நகைச்சுவை வேடமில்லை; குணச்சித்திர வேடம். நிறைவாகச் செய்துள்ளார்.

ஆறு வயதில் தந்தை இறந்ததிலிருந்து குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் ரஜினிகாந்த். காதல் தோல்வி, பணக் கஷ்டம், தாயின் மரணம் இவற்றுக்கிடையே தம்பி தங்கையைப் படிக்க வைக்கிறார். பெரும் பணக்காரனாகும் தம்பியும், பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ளும் தங்கையும் இவரைப் புறக்கணிக்கிறார்கள். வேலை இழக்கிறார். மனைவி படாபட் ஜெயலட்சுமியை நெருப்பில் பறிகொடுக்கிறார். வறுமையில் குடும்பமே தத்தளிக்கிறது. பின் கதை எழுதி பிரபலமாகி, பத்திரிகை தொடங்கி பணக்காரராகி, அவார்ட் வாங்குகிறார். அப்போது இவருடைய உடன் பிறப்புகள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

பாடல்களும் அருமை. நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஜெயா, சங்கீதா, எல்.ஐ.சி. நரசிம்மன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் இல்லை; ஆனால் அது குறையாகத் தெரியவில்லை. 

நாடகமே உலகம்

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 18 மே 1979யில் வெளிவந்த இப்படம் எப்படி படத்தை மோசமாக எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் படமாகும். பெரிய இயக்குனர்கள் - பெரிய நடிகர்கள் - ஆனால் ஏன்  இப்படி ஒரு படம்?

கோடீஸ்வரர் சுந்தர்ராஜன்- எம்.என்.ராஜம் தம்பதியுடைய மகள்  கே.ஆர்.விஜயா இளகிய மனம் படைத்தவர். ஏழைகளுக்கு அள்ளித் தருபவர். ஒரு லட்சம் செலவழித்து தம்மிடம் வேலை பார்க்கும் ஜெயமாலினிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் சுந்தர்ராஜன் பெண்ணை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். அதே சமயம் தாம் அவருடைய சொந்தப் பெண் இல்லை என்ற உண்மையும் விஜயாவுக்குத் தெரிகிறது. தாம் உதவிய ஜெயமாலினி வீட்டிலேயே தங்குகிறார். அவர் வில்லன் நம்பியாருடன் சேர்ந்து கொண்டும் தம்முடைய கணவரான சரத்பாபுவைக் கொல்ல முயல்கிறார். அதை ஹீரோ மோகன்பாபு உதவியுடன் விஜயா தடுக்கிறார். இது தான் கதை. சோ ரத்தன் என்ற பெயரில் சேட் நம்பியாரின் வேலைக்காரராக வருகிறார். நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. அவர் தோன்றும் காட்சிகளும் குறைவு.

மனோரமா, சி.ஐ.டி.சகுந்தலா, வெண்ணிறாடை நிர்மலா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Thursday, July 26, 2018

சக்கப் போடு போடு ராசா

எஸ்.பி.முத்துராமன் இயக்கம். வெளியான தேதி 15 செப்டம்பர் 1978.

சுமாரான படம். சோ-மனோரமா தோன்றும் காட்சிகள் மட்டுமே படத்தில் ரசிக்கும்படி உள்ளன. ஐயாசாமி என்ற பெயரில் நெல்லைத் தமிழில் சோ விளாசித் தள்ளுகிறார். படம் முழுக்க அவர் வருகிறார். அதுவே படத்தின் பலம். இதில் அரசியல் பேசவில்லை; உடல் மொழியில் சிரிக்க வைக்கவில்லை; நெல்லைத் தமிழில் கிண்டலாகவும், யதார்த்தமாகவும், அப்பாவித்தனமாகவும் பேசியே நம்மைச் சிரிக்க வைத்து விடுகிறார்.

ஜெய்சங்கர்-ஜெயசித்ரா  ஹனிமூனுக்காக ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். அதன் முதலாளி மேஜர் சுந்தர்ராஜன் கொள்ளைக்காரர். அவரை அவருடைய கையாளான ஸ்ரீகாந்த் கொன்று விடுகிறார். அதைப் பார்க்கும் ஜெயசித்ரா போலீசில் சொல்ல, நிரூபணம் இல்லாததால் வில்லன்கள் தப்பிக்கின்றனர். பின்பு அவர்களே தேங்காய் சீனிவாசனைக் கொன்று அப்பழியை ஜெயசித்ரா மீது சுமத்துகின்றனர். ஜெய்சங்கர் எப்படி உண்மையைக் கண்டுபிடித்து தம்முடைய மனைவியை மீட்டார் என்பதே மீதி கதை.

கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி, சுருளி ராஜன், தங்கவேலு, கண்ணன், வெண்ணிறாடை மூர்த்தி, உசிலை மணி, எஸ்.எஸ்.சந்திரன், டைப்பிஸ்ட் கோபு, அசோகன் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Tuesday, July 24, 2018

தனிக் குடித்தனம்

மார்ச் 4, 1977யில் வெளியான இப்படம் மிகச் சிறந்த நகைச்சுவைக் குடும்பச் சித்திரம். இது ஒரு மேடை நாடகம்; எஸ்.ஏ. கண்ணன் இயக்கத்தில் படமாக்கப்பட்டது.

ஒரு காட்சி கூட சலிப்படைய வைக்காத படம். பெரிய நட்சத்திரக் கூட்டமே படத்தில் உண்டு. எல்லாருமே தங்கள் பாத்திரம் அறிந்து  அருமையாக நடித்துள்ளனர். அசடு வழியாமல், அடிதடி இல்லாமல், யாரையும் கிண்டலடிக்காமல் சிரிக்க வைக்க முயற்சித்து அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். அதே சமயத்தில் படம் சிந்திக்கவும் வைக்கிறது.

மேஜர் சுந்தர்ராஜன் பண்டரி பாய் தம்பதியரின் மகள் கே.ஆர்.விஜயா. அவருடைய கணவர் சோ. பாலு என்ற அப்பாவி வேடம். வீட்டோடு மாப்பிள்ளை. அவர் செய்யும் அப்பாவித்தனமான வேலைகள் நம்முடைய வயிற்றை நோக அடிக்கின்றன. அவருடைய வழக்கமான அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும் அவரை இப்படத்தில் ரசிக்க முடிகிறது.

விஜயாவுடைய தம்பியாக ஒய்.ஜி.மகேந்திரன். அவர் சங்கீதாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்குத் தனிக் குடித்தனம் போக ஆசை. மனைவியைத் தூண்டி, வீட்டாருடன் சண்டை மூட்ட வைக்கும் அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. கடைசியில் அவர் விரும்பியபடி தனிக் குடித்தனம் இருக்கிறார். ஆனால் அதில் இருக்கும் சிரமங்கள் அவரைத் திருத்தி மீண்டும் குடும்பத்துடன் இணைய வைக்கிறது.

காத்தாடி ராமமூர்த்தி, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்றோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Wednesday, July 18, 2018

அவன் ஒரு சரித்திரம்

"வணக்கம் பல முறை சொன்னனேன்" உட்பட கண்ணதாசன் கற்பனையில் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அருமையான பாடல்கள். சிவாஜியின் பிரமாதமான நடிப்பு, காஞ்சனாவின் சிறந்த நடிப்பு, நல்ல கதை என பல நல்ல அம்சங்களைக் கொண்ட இப்படம் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 14 ஜனவரி 1977யில் வெளியானது.

படம் நன்றாக இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக அமையவில்லை. ராமு என்ற அசட்டு கேரக்டர் சோவுக்கு. அவருடைய தந்தையாக வி.கே.ராமசாமியும், சிற்றன்னையாக மனோரமாவும், மனோரமாவுடைய தந்தையாக தங்கவேலுவும் நடித்துள்ளனர். இவர்கள் எல்லாரும் வில்லத்தனமான காமெடியன்கள். இத்தனை பேர் இருந்தும் நமக்குச் சிரிப்பு வரவில்லை. சோவுடைய கேரக்டர் மிகவும் வீக். இப்படத்தை அவர் தவிர்த்திருக்கலாம். எம்.பானுமதி அவருக்கு ஜோடி.

சிவாஜி பெரிய பணக்காரர். அவருடைய தந்தை பகவதி; தாய் பண்டரிபாய். சிவாஜி படித்து கலெக்டராகிறார். அகிம்சை வழியில் நேர்மையாக இருக்கும் அவருக்குப் பல சோதனைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் அவர் எப்படி வெற்றி கண்டார் என்பதே கதை. அவருக்கு உறுதுணையாக காஞ்சனாவும், ஜோடியாக மஞ்சுளாவும் நடித்துள்ளனர். தீவிரவாதியாகவும் அவருடைய தம்பியாகவும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். 

Saturday, July 14, 2018

சோ சிறு வேடங்களில் நடித்த சில நாடகங்கள்

விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகங்களிலும் சினிமாவிலும் பிசியாக இருந்த சமயத்திலும் சோ சிறு வேடங்களில் மற்றவர்கள் எழுதிய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

ஒய்.ஜி.பியின்  "அண்டர் செகரட்டரி " என்ற நாடகத்தில் சோ மனம் போனவாறு வசனங்கள் பேச, மற்ற நடிகர்கள் திணறுவர். ஆனால் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவோ அசராமல் உடனுக்குடன் பதில் வசனம் பேசி நடிப்பாராம். 1964யில் மேடையேறிய நாடகம் இது. 

"தி ஹோல் ட்ரூத்" என்ற ஆங்கில நாடகத்தில் வில்லன் சோ ஜெயலலிதாவைக் கழுத்தை நெரிக்கும்படி ஒரு காட்சி. சோவுடைய கண்களைப் பார்த்து ஜெயலலிதா சிரித்து விட, அக்காட்சியில் சோ அவருடைய முகத்தைப் பார்க்காதவாறு காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதல் நாயகனும் வில்லனும் சோவே.

"டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன்" என்ற ஆங்கில நாடகத்தில் அமெரிக்க சோல்ஜராக சோவும், ஜப்பானியப் பெண்ணாக ஜெயலலிதாவும் நடித்தனர். இது விவேகா பைன் ஆர்ட்ஸின் நாடகம். 1969யில் மேடையேறியது.

1962யில் "சொல்லித் தெரிவதில்லை" என்ற நாடகம் ஜெ.முத்துசாமி எழுதி பாலசந்தர் இயக்கினார். அதில் அம்பி, நீலு, நாணி, சோ ஆகியோர் நடித்தனர். நாணியுடன்  தோன்றுகிற காட்சியில் திடீரென சோ திக்க ஆரம்பிக்க, அதை எதிர்பார்க்காத நாணி ஏன் திக்குகிறாய் எனக் கேட்டார். டைப்பாய்டு வந்து விட்டதால் திக்குவதாகச் சோ சொன்னார். கடைசிக் காட்சியில் திக்காமல் சோ பேசினார். ஏன் திக்கவில்லை என நாணி கேட்க, மீண்டும் டைப்பாய்டு வந்து திக்குவது நின்று விட்டது எனச் சோ ஒரு போடு போட்டார். ஆடியன்சிடமிருந்து நல்ல அப்லாஸ். இதை முதலில்  சற்றும் விரும்பாத பாலசந்தர், இது நன்றாக வந்ததால் அதை நாடகத்தின் காட்சியாக மாற்றினார். 

பெற்றால் தான் பிள்ளையா?

விவேகா ஃபைன் ஆர்ட்ஸில் பிசியாக இருந்து கொண்டே சோ ஒய்.ஜி.பி.யின் நாடகங்களிலும் நடித்து வந்தார். பட்டு எழுதிய ஒய்.ஜி.பி.யின் "பெற்றால் தான் பிள்ளையா" என்ற நாடகத்தில் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ புகுந்து விளையாடினார். அந்த நாடகத்தின் வெற்றி டைரக்டர் பீம்சிங்கையும் நடிகர் திலகம் சிவாஜியையும் அதைத் திரைப்படமாக எடுக்க வைத்தது. மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை நடத்தியும் காட்டினார் சிவாஜி. இப்படித்தான் சோவுடைய சினிமா பிரவேசம் நடந்தது. அந்தப் படத்தின் பெயர் "பார் மகளே பார்".

நாடகம் மேடையேறிய ஆண்டு 1961. திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1963. 

சோ எழுதி இயக்கி நடித்த நாடகங்கள் பல இருந்தாலும் அவர் வேறொருவர் எழுதிய நாடகத்தில் நடித்த சிறு வேடமே அவரை சினிமாவுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையே உன் விலை என்ன? திரைப்படம்

1974யில் மேடையேற்றப்பட்ட "உண்மையே உன் விலை என்ன" என்ற நாடகத்தின் படமாக்கம். 30 ஏப்ரல் 1976யில் வெளியானது. கதை-வசனம்-இயக்கம் சோ.

ஒரு பாதிரியார்; அவரிடம் பாவ மன்னிப்பு கோர ஒருவன் வருகிறான். ஒரு பெண்ணின் கற்பைக் காப்பாற்ற அவன் செய்த கொலை தவறில்லை எனக் கருதும் பாதிரியார் அவனை மறைத்து வைக்கிறார். ஆனால் எப்போதும் உண்மை மட்டுமே பேசுகிறார்; அதனால் போலீசில் மாட்டிக் கொள்கிறார். அவரை விடுவிக்க ஒரு வக்கீல் வருகிறார். பொய் பேச மறுத்து, அந்த வக்கீலுக்கும் பெரிதாகப் பாதிரியார் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உண்மை என்ன என்பதற்கு சில சாட்சிகளும் ஆவணங்களும் கிடைக்கின்றன. கொல்லப்பட்டவனுடைய தந்தை அரசியல்வாதி. அவர் எல்லாரையும் விலை பேசி உண்மையை வாங்கி விடுகிறார். பாதிரியாருக்கு உதவியாக இருந்த வக்கீல், நண்பர், பாதிக்கப்பட்ட பெண் என எல்லாருமே விலை போகிறார்கள். ஆனால் கடைசியில் வேறு ரூபத்தில் உண்மை வெளிவருகிறது. அதை ஊருக்கு எல்லாம் தெரிய வாய்த்து அரசியல்வாதியின் கையால் இறந்து போகிறார் பாதிரியார்.

மேலே கொடுக்கப்பட்டது தான்  நாடகத்தின் மூலக்கதை. படத்தில் சில மாற்றங்கள். அரசியல்வாதிக்குப் பதிலாக பெரும் பணக்காரர். பத்திரிகையாசிரியர், அவருடைய மகள், பத்திரிகை நிருபர் எனச் சில புதிய பாத்திரங்கள். அந்த இரண்டு பாத்திரங்களும் பாதிரியாருக்கு உதவியாக வருகின்றனர். வக்கீலுடைய மகனை ஏன் பணக்காரரால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதிலும் சில மாற்றங்கள். அவருடைய காதலியாக பத்திரிகையாசிரியர் மகள். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதுவும் நாடகத்தில் கிடையாது. இதைத்தவிர க்ளைமாக்ஸும் சில மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. கோர்ட்டில் பாதிரியார் சுடப்படுகிறார், நாடகத்தில் வருவதைப் போல சர்ச்சில் அன்று.

பாதிரியாராக முத்துராமன். அமைதியான முகம்; சாந்தமான நடிப்பு. அப்படியே ஒரு உண்மையான பாதிரியைப் பார்ப்பதைப் போலவே உள்ளது. வில்லனாக அசோகன். வக்கீலாக சோ. சத்தியநாராயணா எனப் பெயர். தெலுங்கும் தமிழும் கலந்து பேசுகிறார்; நம்மை வயிறு நோக அடிக்கிறார். அவருடைய மனைவியாக சுகுமாரியும் மகனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். பாதிக்கப்படும் பெண்ணாக சி.ஐ.டி.சகுந்தலாவும் அவருடைய கணவராக தேங்காய் சீனிவாசனும். கொலை செய்யும் டிரைவராக விஜயகுமார், பத்திரிகை ஆசிரியர் நீலு, அவருடைய மகள் பத்மப்ரியா, முக்கிய பாத்திரத்தில் நிருபராக மனோரமா, விஜயகுமாருக்கு அடைக்கலம் கொடுக்கும் முருகன் பக்தராக வி.கே.ராமசாமி என எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர்.

நாடகத்தின் பாணியில் இருந்தாலும் நல்ல படம். 

Saturday, July 7, 2018

வேலும் மயிலும் துணை



1979யில்  வெளியான இப்படத்தை இயக்கியவர் ரா சங்கரன். முருகன் புகழைக் கூறும் இப்படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம். எல்லாருக்கும் சிறிய வேடங்கள். எம்.ஆர்.ராதா, ராதிகா, ஸ்ரீப்ரியா, கண்ணதாசன், மேஜர், சச்சு, நீலு, விஜயகுமார், ஜெய் கணேஷ், மனோரமா ஆகியோருடன்   சோவும் நடித்துள்ளார்.  சோவுக்கு ஜோடி மனோரமா. இப்படத்தை இன்னும் நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அன்னப்பூரணி


1978யில்  வெளியான இப்படத்தை இயக்கியவர் பஞ்சு-கிருஷ்ணன. 


பணக்காரர் வீட்டில் வளரும் அனாதைப் பெண்ணான கே.ஆர்.விஜயா பெரியவரானவுடன், அக்குடும்பத்தின் ஊதாரிப் பிள்ளையான ஸ்ரீகாந்த் கெட்டுப் போகாமல் காத்து வருகிறார். இதற்கிடையே முத்துராமனைக் கல்யாணம் செய்து கொள்கிறார். வில்லன் மேஜர் சுந்தர்ராஜனால் கணவர் மீது விழும் கொலைப் பழியை எப்படி துடைக்கிறார் என்பது மீதிக் கதை. 

மொத்தத்தில் அலுப்பு தட்டும் கதை, வசனம், நடிப்பு. படத்தின் ஒரே ஆறுதல் சோவுடைய அரசியல் வசனங்கள். அதுவும் காலட்சேபம் செய்கிறேன் என அரசியலையும் சினிமாவையும் தாக்கும் காட்சி பிரமாதம். ஆங்கிலோ இந்தியனான மனோரமா சோவுக்கு ஜோடி; நீலு மாமனார்.


 

வாழ்த்துங்கள்



1978யில்  வெளியான இப்படத்தை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன் . முத்துராமன் , சந்திரகலா, பண்டரிபாயுடன்   சோவும் நடித்துள்ளார்.  இப்படத்தை இன்னும் நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

கருணை உள்ளம்



29 செப்டம்பர் 1978யில்  வெளியான இப்படத்தை இயக்கியவர் பீம்சிங் . விஜயகுமார், ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, ஜெயாவுடன்  சோவும் நடித்துள்ளார். இது ஸ்ரீகாந்த் நடிப்புக்காக அவார்ட் வாங்கிய படம். இப்படத்தை இன்னும் நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அவள் ஒரு அதிசயம்



24 மார்ச் 1978யில்  வெளியான இப்படத்தை இயக்கியவர் பி.வி.ஸ்ரீனிவாஸ். ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியாவுடன்  சோவும் நடித்துள்ளார். இப்படத்தை இன்னும் நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராசி நல்ல ராசி



23 டிசம்பர் 1977யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் கோபு. ஜெய்சங்கர், விதுபாலாவுடன் சோவும் நடித்துள்ளார். இப்படத்தை இன்னும் நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

பலப் பரீட்சை

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1977யில் வெளியான இப்படத்தில் முத்துராமன், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி. மஹேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், பகோடா காதர், மனோரமாவுடன் சோவும் நடித்திருந்தார்.  மனோரமா ஜோடி. ஒய்.ஜி.யம் சுஜாதாவும் அவருடைய மக்கள்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கணவனுக்கும் மனைவிக்கும் பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் நடக்கும் உரசல்களைப் பற்றிய படம். கதை, திரைக்கதை, நடிப்பு, நகைச்சுவை என எல்லா விஷயங்களும் சுமார். அதுவும் சோ, ஒய்.ஜி, மனோரமா, தேங்காய் ஆகியோர் இணைந்து காமெடி என நினைத்து அசடு வழிகிறார்கள். சோவின் தேவையில்லாத படங்களில் இதுவும் ஒன்று. 

பேரும் புகழும்

1976யில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த இப்படத்தில் முத்துராமன், சுஜாதா, சோ, மனோரமா, மேஜர், வி.கோபாலகிருஷ்ணன், செளகார், தேங்காய், ஸ்ரீகாந்த், ஒய்.ஜி., பண்டரி பாய் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

பெயர், புகழுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் சுஜாதாவைத் திருமணம் செய்து கொண்டு முத்துராமன் அவரைத் திருத்துவதே கதை.


சோ சில காட்சிகளிலேயே தோன்றுகிறார். நகைச்சுவை வேடம். காட்சிகள் நன்றாகவே அமைந்திருந்தன. சம்திங் சதாசிவம் எனப் பெயர். காசு வாங்கிப் பட்டங்கள் பதவிகள் வாங்கித் தருகிறார். அரசியல் வசனங்கள் இல்லை. படத்தின் இறுதியில் மனோரமா ஜோடியாகிறார்.

படம் மொத்தத்தில் சுமார் ரகம்.

மேயர் மீனாட்சி

மே 1976யில் மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளியான படமிது. கே.ஆர்.விஜயா நாயகி. வீட்டு வேலை செய்பவர் வில்லன்களை உள்ளே தள்ள தேர்தலில் நின்று மேயராகும் கதை. ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, விஜயகுமார், ஸ்ரீப்ரியா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, பகவதி, சுருளி ராஜன் போன்றோருடன் சோவும் நடித்துள்ளார். அவருக்கு வக்கீல் வேடம். நாயகிக்கு உதவியாக வருகிறார். அப்புசாமி எனப் பெயர். மனோரமா ஜோடி. அவர் தோன்றும் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படம் அறுவை என்பதால் அவர் காட்சிகளும் எடுபடவில்லை.

ரோஜாவின் ராஜா


15 டிசம்பர் 1976யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் கே.விஜயன். மருந்துக்குக் கூட நல்ல விஷயம் எதுவும் இப்படத்தில் இல்லை.

சிவாஜி, சோ, ஏ.வி.எம்.ராஜன் எல்லோரும் கல்லூரி மாணவர்களாக வருவது சிரிப்பை வரவழைக்கிறது. ஸ்ரீகாந்த் அவர்களுடைய நண்பர். சிவாஜி ஏழை; ராஜன் பணக்காரர். ஏழை என்பதனால் அவருடைய காதலியான வாணிஸ்ரீயை அவருடன் சேர விடாமல் செய்கின்றனர். பின் அவர் தம்முடைய நண்பன் ராஜனுக்காக காதலியைத் தியாகம் செய்ய, அவர் அம்மா இறக்க, அவர் பித்து பிடித்து அலைகிறார். உண்மை அறியும் ராஜன் நண்பனைத் தேடித் கண்டுபிடித்து அவரை குணமாக்கி, வாணிஸ்ரீயையும் ஒப்படைக்கிறார்.

மேஜர் சுந்தரராஜன், மனோகர், நீலு, சோ, மனோரமா, ஜி.வரலட்சுமி, சுகுமாரி, வி.கே.ராமசாமி எனப் பல பெரும் நடிகர்கள் நடித்திருந்தும் யாரையும் இயக்குனர் நன்றாகப் பயன்படுத்தவில்லை.

சோவுக்கு இரட்டை வேடம். அப்பா-மகன். மகன் பெயர் ஜம்பு. இருவருமே மொட்டை. இருவரில் யார் தம்முடைய  கணவர் எனத் தெரியாமல் அவ்வப்போது மனோரமா தவிக்கிறார். அதுதான் நகைச்சுவை. சோவுக்கு இப்படம் தேவையா?

அவன்தான் மனிதன்


ஏ.சி.திருலோகசந்தர் இயக்கம். 11 ஏப்ரல் 1975 வெளியீடு. சிவாஜி கணேசன், ஜெயலலிதா, முத்துராமன், சந்திரபாபு, வாசு போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். சோவுக்கு அப்பாவு என்ற கதாப்பாத்திரம். சச்சு ஜோடி. 

துன்பவியல் கதை. எல்லா நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர். கண்ணதாசன் கற்பனையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். 

யாருக்கும் வெட்கமில்லை

13 ஜூன் 1975யில் வெளியான இப்படத்தை எழுதி இயக்கியவர் சோ. இதே பெயரில் மேடையேறிய இவருடைய நாடகத்தின் படமாக்கமே இது. இதில், சிவகுமார், ஜெயலலிதாவுடன் சோவும் நடித்திருந்தார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. 

பணம் பத்தும் செய்யும்

ஜி.சுப்ரமணிய ரெட்டியார் இயக்கிய இப்படம் 1 ஆகஸ்ட் 1975யில் வெளியானது. இதில் சோவும் ரத்னாவும் நடித்திருந்தனர். திரைக்கதை-வசனம் சோ எனக் கேள்விப்பட்டேன். ஆனால் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாததால் அதை உறுதி செய்ய முடியவில்லை. 

அவளுக்கு ஆயிரம் கண்கள்

டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் 1975யில் வெளியான இப்படத்தில் ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஜெயலலிதா ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை. அதனால் மேல் விபரங்கள் கொடுக்க இயலவில்லை. 

சொந்தங்கள் வாழ்க

மதுரை திருமாறன் இயக்கத்தில் 1975யில் வெளியான இப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, விஜயகுமார், மனோரமா, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், எம்.என்.ராஜம், டைப்பிஸ்ட் கோபு,  ஆகியோருடன் சோவும் நடித்திருந்தார்.

ஜெய்சங்கர் வில்லத்தனம் கலந்த ஹீரோ. அவரும் ஜெயசித்ராவும் கல்லூரித் தோழர்கள். ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள். பஞ்சாயாத்துத் தேர்தலில் போட்டியிடும் மேஜர் சுந்தர்ராஜன் மீது அநாவசியப் பழி போட்டு தம்முடைய தந்தையான வி.கே.ராமசாமியை ஜெயிக்க வைக்கிறார் ஜெய். அதற்குப் பழிவாங்க அவரைக் காதலிப்பதைப் போல நடித்து ஏமாற்றுகிறார் ஜெயசித்ரா. சில காரணங்களால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். எப்படி மனதளவிலும் இணைந்தார்கள் என்பதே மீதி கதை.

 படம் சுமார்; நடிப்பும் வசனமும் சுமார். ஆனால் சோ வரும் காட்சிகள் மட்டும் அருமையாக உள்ளன. அவர் சொந்த பாணியில் அரசியல் வசனம் பேசி வெளுத்து வாங்குகிறார். செட்டியார் என்ற கேரக்டர். கோயம்புத்தூர் பாஷை பேசுகிறார். மனோரமா ஜோடி. 

 
 


Friday, July 6, 2018

தேன் சிந்துதே வானம்

ரா சங்கரன் இயக்கத்தில் 14 மே 1975யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, கமல்ஹாசன், தங்கவேலு, மேஜர் சுந்தர்ராஜன், நீலு, மனோரமா, சுகுமாரி, ஸ்ரீகாந்த், ராணி சந்திரா  ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

"உன்னிடம் மயங்குகிறேன் " உட்பட சில நல்ல பாடல்கள் இடம் பெற்ற படம்.

சிவகுமாரையும் ஜெயசித்ராவையும் காதலிக்க வைத்துத் திருமணம் செய்து வைக்கும் கேரக்டர் கமலுக்கு. பணக்கார ஜெயசித்ராவை மயக்கி தங்கள் வலையில் விழ வைக்க முயலும் முறை மாப்பிளைகளாக சோவும் ஸ்ரீகாந்தும். ஜெயசித்ரா தந்தையாக தங்கவேலு. நீலுவும் படத்தில் உண்டு.

சோவுக்குப் பாவாடை என்ற அசட்டு கேரக்டர். மனோரமா ஜோடி. படம் அறுவையோ அறுவை. சோ மனோரமா ஜோடியின் நகைச்சுவை சுமார் ரகம்.