Tuesday, August 7, 2018

மெட்ராஸ் பை நைட்

நாடகத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் ஒரு நாளில் நடப்பதாகக்  கதை. 1966 யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் மற்றைய நாடகங்களுடன் ஒப்பிடும்போது சுமார் தான். கதை பலவீனமாக உள்ளது. மாப்பிள்ளை மாணிக்கம் என்ற கான்ஸ்டபிள் வேடத்தில் சோ தோன்றும் காட்சிகள் மட்டும் அதிரடி. அவர் பேசும் வசனங்களில் அரசியல் நெடி அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. மெட்ராஸ் பாஷை பேச சோவுக்குக் கற்றா தர வேண்டும்? பிளந்து கட்டுகிறார். அவர் தமது இடது காலை மட்டும் அவர் ஸ்டைலில் ஆட்டிக் கொண்டு ஜாம் பஜார் ஜக்குவைத் தெரியுமா என்ற வரிசையில் பல ரெளடிகளின் பெயர்களை வரிசைப்படுத்தி சோ எல்லாரிடம் கேட்பது அட்டகாசம்.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தான் பெண் பார்க்கப் போவதாகத் தன்னுடைய சக மாணவியிடம் சொல்ல, அவள் தன்னைக் காதலித்து ஏமாற்றி விட்டதாக அவள் புலம்புகிறாள். மன உளைச்சலுக்கு ஆளாகும் அந்த மாணவன், ஒரு மருந்து கடையில் விஷம் வாங்குகிறான். பாட்டில் இல்லாததால் பிராந்தி பாட்டிலில் அதைக் கடைக்காரர் ஊற்றிக் கொடுக்கிறார்.

சினிமாவில் நடிக்க முடிவெடுத்து பின் மனத்தை மாற்றிக் கொள்ளும் ஒரு பெண், தாம் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்பதைத் தெரிவிக்க ஒரு கடிதம் எழுதி அதை அந்த மாணவனிடம் கொடுக்கிறார். அவன் அந்த இயக்குனர் தன்னுடைய நண்பனாக இருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். சினிமா வசனம் எழுதப்பட்ட காகிதத்தில் தான் அப்பெண் தான் வர இயலாததைத் தெரிவித்திருப்பார். அந்த வசனத்தைப் படித்து விட்டு தன்னுடைய நண்பன் அப்பெண்ணைக் கை விட்டுவிட்டதாக அந்த மாணவன் நினைப்பான்.

அதற்குள் அந்த பிராந்தி பாட்டில் அந்த இயக்குனரிடம் சிக்க, பிராந்தி என நினைத்து அவன் குடிப்பான். கடைக்காரன் விஷத்துக்குப் பதிலாக பிராந்தியையே கொடுத்திருப்பான் என்பது கடைசியில்தான் நமக்குத் தெரியும்.

இரவில் கடற்கரையில் நின்றதால் சந்தேகக் கேசில் போலீசிடம் மாட்டும் மாணவன், அங்கிருந்து தப்பித்து தவறாகத் தன்னுடைய தோழி வீட்டுக்குள் நுழைவான். அங்கே அவள் பிணமாகக் கிடப்பாள். அவனைப் பின் தொடர்ந்து வரும் போலீஸ் காரர் அவன் தான் கொலையாளி என நினைப்பார்.

இப்படி பல குழப்பங்கள் ஒரிரவில் நடக்கும். கடைசியில் அக்கொலையைச் செய்தவர் பெண்ணுடைய அப்பா என்பதும், பெண்ணுக்கு ஒரு வகையான மன நோய் என்பதும் தெரிய வரும். நாடகம் முழுக்க நகைச்சுவையாகப் போகிறது, கதை நகைச்சுவையாக இல்லாத பட்சத்திலும்.  

No comments:

Post a Comment