Sunday, September 23, 2018

நவக்கிரக நாயகி

28 பிப்ரவரி 1985யில் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி, கே.சங்கர் இயக்கிய இப்படத்தில் சோவுக்கு மிக முக்கியமான வேடம். படத்தில் பல கிளைக் கதைகள். ஒவ்வொரு கிளைக் கதையிலும் தோன்றும் ஒரே பாத்திரம் சோ நடித்த நாரதர் பாத்திரம் மட்டுமே. சோவுக்கு கிண்டலாக வசனம் பேசவும் மறைமுகமாக அக்கால அரசியலைத் தாக்கவும் நல்ல வாய்ப்பு; நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே படத்தின் பலம். மற்றபடி படத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை. நவகிரகங்களின் அருமையையும், அவர்களின் நாயகியான அம்மனின் அருமையும் போற்றும் படம்.

படத்தில் பல நட்சத்திரப் பட்டாளங்கள். கே.ஆர்.விஜயா, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகாந்த், ஸ்ரீ காந்த், பாண்டியன், சுரேஷ், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், நளினி, சிவசந்திரன்,  விஜி,அனுராதா, வெண்ணிறாடை மூர்த்தி என அளவிட முடியாத நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

புதிய தீர்ப்பு

1985யில் வெளியான இப்படம் பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் சி.வி.ராஜேந்திரன் இயக்கியது. சுமாரான படம். வாழ்க்கையைத் தொலைத்த அம்பிகாவுக்கு அவருடைய கல்லூரி நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வாழ்வளிக்கிறார். கடைசியில் வில்லன்களால் அவர் கொல்லப்பட, அவர்களை எல்லாம் அம்பிகா பழி வாங்குகிறார். அதுதான் படத்தின் ஒன் லைன்.

சோ ரிக்ஷாக்காரராக வருகிறார் - சென்னைத் தமிழில் விளாசித் தள்ளுகிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.

ராஜசேகர், நம்பியார், சித்ரா லட்சுமணன், எஸ். வரலட்சுமி, ஜனகராஜ், காந்திமதி போன்றோரும் படத்தில் உண்டு.

Wednesday, September 12, 2018

நான் மகான் அல்ல

ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று. 14 ஜனவரி 1984 யில் வெளியானது. இயக்கம் - எஸ்.பி.முத்துராமன்.

சோவுக்கு முக்கியமான வேடம். படம் முழுக்க ரஜினியுடன் வருகிறார்; அவருக்குப் பக்கபலமாக உள்ள கேரக்டர். ஹரி சந்திர ரெட்டி எனப் பெயர். தெலுங்கு கலந்த தமிழில் அவர் மாட்லாடி நம்மை வயிறு நோகச் செய்கிறார். உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு சில இடங்களில் அவர் அரசியலைத் தாக்குவதைக் கவனிக்கலாம். ரசிக்கும்படியான நகைச்சுவை.

வக்கீல் ரஜினி ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் சத்யராஜுக்குத் தண்டனை வாங்கித் தருகிறார். அதனால் சத்யராஜுடைய தந்தையான நம்பியாரும் அவர் நண்பர்களும் ரஜினிக்குப் பல தொல்லைகள் தருகின்றனர்; அவர் சிறை செல்கிறார்; வேலை இழக்கிறார்; தாயையும் பறி கொடுக்கிறார். வில்லன்களை அவர் எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை.

அக்காலத்திய சராசரி மசாலாப் படம். தாயை மற்றவர்கள் கொலை செய்ய, அங்கு வரும் ரஜினி முகத்தில் இஞ்சு அளவு கூட உணர்ச்சி இல்லை. பாடல்களும் சுமார். படம் ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்திருந்ததாலே நன்றாக ஓடியுள்ளது.

ராதா கதாநாயகி. செந்தாமரை, வி.கே.ராமசாமி, சங்கிலி முருகன், விஜயகுமாரி எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் உண்டு. 

Saturday, September 8, 2018

சாட்டை இல்லாத பம்பரம்

தலைப்புக்களவு படம் அவ்வளவு நன்றாக இல்லை. கதை நன்றாக இருந்தாலும் இயக்கம் சுமார் ரகம். அதனால் படமும் சுமாராகத் தான் உள்ளது. பாக்யராஜ் கதையில் ஈரோடு முருகேஷ் இயக்கிய படம். 1983 மே மாதம் வெளிவந்தது.

அப்பாவியான சிவகுமார் தைரியமான சரிதாவைத் திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் அவர் எதிர் கொள்ளும் சவால்களும் சரிதா அதை எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை. க்ளைமாக்ஸ் மட்டும் பெரிய சொதப்பல். சரிதாவின் அருமையான நடிப்பு படத்துக்கு பலம்.

சோ சிவகுமாருடைய தந்தை தர்மலிங்கமாக வருகிறார். வில்லன் கேரக்டர்; க்ளைமாக்ஸில் மட்டும் நல்லவராக மாறி விடுகிறார். சொல்லும்படியான நடிப்போ, ரசிக்கும்படியான நகைச்சுவையோ இல்லை; இந்தப் படம் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

சாமிக்கண்ணு, சங்கிலி முருகன், காந்திமதி, செந்தில் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தாலும் பாடல்கள் சுமார். 

அடுத்த வாரிசு

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 7 ஜூலை 1983யில் வெளிவந்த இப்படம் ரஜினிகாந்தின் முக்கியமான படங்களில் ஒன்று. வழக்கமான மசாலாக் கதை. சோவுக்கு ரஜினியின் வேலையாள் வேடம்; ராமன் எனப் பாத்திரப் பெயர். ரசிக்கும்படியான நகைச்சுவை என்றாலும் அவருடைய அரசியல் வசனங்கள் இல்லாததால் மிகவும் பிரமாதம் எனச் சொல்ல முடியாது.

ஜமீனின் தொலைந்து போன பெண்ணுக்குப் பதிலாக ஒரு போலியான பெண்ணைத் தயார் செய்ய வில்லனுக்கு உதவுகிறார் ரஜினி. கடைசியில் அவரே ஜமீனின் உண்மையான வாரிசு எனத் தெரிகிறது. வில்லன்களிடமிருந்து நாயகியையும் ஜமீன் சொத்தையும் ரஜினி மீட்டெடுப்பதே க்ளைமாக்ஸ்.

ஸ்ரீதேவி நாயகி. ஆனந்தன், மனோரமா, ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, செந்தாமரை, ரவீந்திரன், சில்க், வி.கோபாலகிருஷ்ணன், எஸ். வரலட்சுமி போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் பெரும்பாலான பாடல்கள் அருமை. 

நம்பினால் நம்புங்கள்

எம். எஸ். கோபிநாத் இயக்கத்தில் 1982யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், சரிதா, சத்யராஜ் போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு வாய்க்கவில்லை. 

வடைமாலை

கவிஞர் வாலியும் ஒளிப்பதிவாளர்  மருத்திராவும் சேர்ந்து இயக்கிய படம் இது. 12 மார்ச் 1982யில் வெளிவந்த இப்படம் தமிழக அரசின் விருதைப் பெற்றது. ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்த இப்படத்தில் சோவும் நடித்திருந்தார். இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு வாய்க்காததால் மேல் விபரங்கள் தர இயலவில்லை. 

Friday, September 7, 2018

துணைவி

வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் ஏப்ரல் 1981யில் வெளியான இப்படம் below average category. சோவுக்கு ஒரு சிறிய வேடம். எம்.என்.ராஜம் ஜோடி. அவ்வப்போது சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. இது இவருக்குத் தேவையில்லாத படம்.

சிவகுமார் சுஜாதா தம்பதியினர்க்கு மூன்று குழந்தைகள். சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போது அவருக்கு தேங்காய் சீனிவாசன் மூலம் மிரட்டல் வருகிறது. அதனால் அவர் தாம் வேலை செய்யும் வங்கியில் கருப்புப் பணத்தைக் கலக்கிறார். சுஜாதா தம்முடைய கணவர் ஏதோ தவறு செய்வதாக எண்ணி நான்கு  குழந்தைகளுடன் வெளியேறி, கூலி வேலை செய்து பிழைக்கிறார். வறுமையில் அவர்கள் வாடுவதைப் பார்த்துப் பொறுக்காத சிவகுமார், கைக் குழந்தையாக உள்ள கடைசி குழந்தையை, குழந்தை பாக்கியம் இல்லாத பணக்கார சோ வீட்டு வாசலில் வைத்து விட்டு வருகிறார். பிறகொரு சமயத்தில், வில்லன்களுடன் நடக்கும் கைகலப்பில் ஒரு கொலை நடக்க, சிவகுமார் சிறை செல்கிறார்.

சுஜாதாவிடம் வளரும் பையன் திருடனாகிறான்; பெண் முறை கேடான வழிகளில் சந்தர்ப்பவசத்தால் சிக்குகிறாள். இன்னொரு பெண் கண் பார்வை இழக்கிறாள். சோவிடம் வளரும் பையன் (சுதாகர்) நல்லவனாகவும், வல்லவனாகவும் ஆகிறார். இதற்கிடையே சிவகுமார் சிறையில் சகஸ்ரநாமத்திடம் சைவ தத்துவங்களைக் கற்கிறார். விடுதலையானவுடன் ஓர் ஆசிரமத்தில் சேர்கிறார். மரணப் படுக்கையில் இருக்கும் அந்த மடாதிபதி இவரையே புதிய மடாதிபதி ஆக்குகிறார்.

சாமியாரான சிவகுமார் எப்படி சுஜாதாவுடைய கெட்டுப் போன பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார், சுதாகரை அவள் காதலியுடன் சேர்க்கிறார், சுஜாதாவின் சந்தேகங்களைப் போக்குகிறார், இன்னும் பல செய்கிறார் என்பது மீதி கதை. முடிவில் சிவகுமாரைக் குறி வைக்கும் தோட்டாவைத் தான் உள்வாங்கி தியாகியாகச் சாகிறார் அவர் துணைவி. மொத்தத்தில் இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன், விஜய பாஸ்கர், மௌலி, கண்ணன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

Wednesday, September 5, 2018

கழுகு

ஓர் ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் தான் இப்படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 6 மார்ச் 1981யில் வெளியான இப்படம் ரஜினியின் முக்கியமான வெற்றி படங்களில் ஒன்று.

சோவுக்குப்  பத்திரிகையாளர் வேடம். ராமசாமி எனப் பெயர். குணச்சித்திர வேடம்; இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார். எஸ்.பி.முத்துராமன் நட்பின் காரணமாகச் சோ நடித்த படம் என நினைக்கிறேன். இவருடைய பாத்திரத்தைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை.

ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியான மசாலாப் படம். ரஜினி ரதியைக் காதலித்துக் கை பிடிக்கிறார். சொகுசு பஸ்ஸில், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மனைவியுடன் ஹனிமூன் போகிறார். ஒரு காட்டில் நர பலி கொடுப்பதைப் பார்க்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு நர பலி கொடுக்கும் கூட்டத்தை ஒழித்துக் கட்டுவதே மீதி கதை.

இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சங்கிலி முருகன் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Sunday, September 2, 2018

கடவுளின் தீர்ப்பு

ஜூலை 1981யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் விந்தன். விஜயபாபு, சங்கீதா என மிகவும் அறியப்படாதவர்கள் நாயகன்-நாயகி.

ஜாதிக் கொடுமைச் சாடும் கதைக்களம். ஆனால் நடிகர்களின் சுமார் நடிப்பு, சுமாரான இசை மற்றும் திரைக்கதை, பலமற்ற வசனம் ஆகிய காரணங்களால் படம் நன்றாக இல்லை. படத்தின் ஒரே பலம் சோ. அவர் குணச்சித்திர வேடத்தில் வருகிறார். சிற்சில இடங்களில் மறைமுகமாக அரசியலைச் சாடுகிறார். மற்றபடி அவருடைய வாடிக்கையான கேலி, கிண்டல் இதில் கிடையாது. இருந்தாலும் அவர் தோன்றுகின்ற காட்சிகள் பார்க்கும்படி இருக்கின்றன. அதற்குக் காரணம் அவருடைய நிறைவான நடிப்பு. சங்கரன் ஐயர் என்பது அவருடைய கதாபாத்திரப் பெயர். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த எம்.பானுமதியைத் திருமணம் செய்து கொள்வதால், அவரை ஊரார் கோவிலில் பூஜை செய்வதிலிருந்து விலக்குகிறார்கள். ஜாதிக் கொடுமைக்கு எதிராக வாதிடும் வேடம் அவருக்கு.

மேஜர் சுந்தர்ராஜனுடைய மகளான சங்கீதா தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த விஜயபாபுவைக் காதலிக்கிறார். அதனால் விளையும் எதிர் வினைகளைத் தாண்டி அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே கதை.

விஜயகுமாரி, காந்திமதி, சுருளிராஜன், ஸ்ரீகாந்த் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.