Friday, November 30, 2018

கண்ணத் தொறக்கணும் சாமி

தாசரி நாராயணராவின் மூலக்கதைக்குத் திரைக்கதை-வசனம் எழுதியவர் பாக்யராஜ். இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து இசையமைத்த படம். ஆர்.கோவிந்தராஜ் இயக்கம். 14 ஏப்ரல் 1986யில் வெளியானது.

சோவுக்கு வேணு என்ற கதாபாத்திரம்; சிவகுமாருடைய நண்பராக வருகிறார். படம் முழுக்க தோன்றும் பாத்திரம். ரஜனி சோவுக்கு ஜோடி. நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. அரசியல் வசனங்களையும் அவ்வப்போது சோ அள்ளி வீசி நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

வேலை தேடி பட்டணம் வரும் சிவகுமார், வீடு வாடகைக்குக் கிடைக்க ஜீவிதாவுடைய போட்டோவை ஒரு கடையிலிருந்து வாங்கி, தம்முடைய மனைவி எனப் பொய் சொல்லி வீட்டை மனோரமாவிடமிருந்து வாடகைக்கு வாங்குகிறார். இதன் காரணமாக ஜீவிதாவுடைய  திருமணம் நின்று போகிறது. அவர் சிவகுமார் வீட்டுக்கே வந்து அவருடைய மனைவி என உரிமை கொண்டாடுகிறார். சிவகுமார் எதுவம் செய்ய முடியாமல் தவிப்பதே படத்தின் மிகப் பெரிய பகுதி. வில்லன்கள்-சண்டை-ஜீவிதா சிவகுமார் சேர்ந்து வாழ்தல் எனச் சுபமாகப் படம் முடிகிறது.

நல்ல கலகலப்பான படம்; சிறிது கூட அலுக்கவில்லை.

தலையணை மந்திரம்

ஆகஸ்ட் 15, 1984யில் வெளியான இப்படத்தை என். வெங்கடேஷ் இயக்கியிருந்தார். பாண்டியன், சுலக்ஷனா, சோ, வடிவுக்கரசி, செந்தில், வி.கோபாலகிருஷ்ணன்  போன்றோர் நடித்துள்ளனர்.


சோவுடைய தேவையற்ற படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் இவருக்கு அரசியல் வசனங்கள் இல்லை; நகைச்சுவையும் சொல்லும்படியாக இல்லை. படம் முழுக்க வருகிறார். சபலப் புத்தியுள்ளவர் பாத்திரம். கிருஷ்ணன் எனப் பெயர். நாயகனுடைய தந்தை. வடிவுக்கரசி ஜோடி. இவர்தாம் ஒரு இளம் பெண்ணுடைய தந்தை என நம்பும்படி நகரும் கதையின் முடிவில் இவருடைய நண்பர்தாம் அப்பெண்ணுடைய தந்தை என்பதை அனைவருக்கும் உணர்த்தி, அப்பெண்ணின் தடைப்பட்டிருந்த திருமணத்தை நடத்தி வைப்பார் சோ.

படம் அறுவையிலும் அறுவை. கணவனைச் சந்தேகப்படும் மனைவி கணவன் உத்தமன் என்பதைக் கடைசியில் உணரும் கதை. 

உள்ளம் உருகுதடி

மே 18, 1984யில் வெளியான இப்படத்தை ஈரோடு என். முருகேஷ் இயக்கியிருந்தார். சுரேஷ், விஜி போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்காததால் மேற்கொண்டு தகவல்கள் தர இயலவில்லை.

Thursday, November 29, 2018

சாதல் இல்லையேல் காதல்

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் சோ எழுதிய நாடகம் இது. இவருடைய மற்றைய நாடகங்களில் உள்ள சமூகச் சீர்திருத்தக் கருத்தோ, அரசியல் நையாண்டியோ இதில் கிடையாது. லாஜிக் எதுவும் பார்க்காமல் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டுமென்றால் இந்நாடகத்தைப் படிக்கலாம்.

இந்த நாடகத்தைக் கல்கி இதழில் தொடர்கதையாகச் சோ எழுதினார். 1964யில் இதை இவர் எழுதியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். முக்கியமாக, இந்த நாடகத்தை சோ மேடையேற்றவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு எஸ்.வி.சேகர் இதை மேடையேற்றினார்.

நாகராஜன் என்ற கல்லூரி மாணவன் மனம் போன போக்கில் எதையோ கிறுக்க, அதைப் பெரிய கவிதை என நம்பும் மாலதி என்ற மாணவி அவனைக் காதலிக்கிறாள். இரண்டு மாதங்களில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தால் மட்டுமே பெண்ணைக் கொடுப்பேன் என மாலதியுடைய சிற்றப்பா நிபந்தனை விதிக்கிறார்.

நாகராஜனுடைய நண்பன் சுரேஷ் அவனைத் தன்னுடன் பம்பாய்க்கு அழைத்துப் போகிறான். நாகராஜன் இறந்து விட்டதாக பொய்யான விளம்பரம் கொடுத்து, அவனை அவனுடைய தம்பியாக நடிக்க வைக்கிறான். இப்படி ஆள் மாறாட்டம் செய்து பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் செய்யும் முயற்சியும், அதனால் ஏற்படும் குழப்பங்களும், நாகராஜன் தான் சொன்ன பொய்யால் தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடுவது எனக் கதை நீளுகிறது. முழுவதும் காமெடி கலாட்டா.

கல்லூரி மாணவர்களின் செய்கைகள், கவிஞர்கள் எதையோ கிறுக்கி கவிதை எனச் சாதிப்பது, இளைஞர்களின் வெளிநாட்டு நாகரீக மோகம், இப்படி பல விஷயங்களையும் தமக்கே உரிய நகைச்சுவையுடன் விளாசித் தள்ளுகிறார் சோ.

Tuesday, November 13, 2018

சாத்திரம் சொன்னதில்லை

சோவின் தலை சிறந்த நாடங்களில் ஒன்று. 1980யில் மேடையேறிய நாடகம்.

இது அரசியல் நாடகம் இல்லை. ஜாதி ஏற்றத் தாழ்வைப் பற்றிய சமூகப் பிரச்சினையின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம்.

சாரியார் என்ற பிராமணர் ஜாதிப் பாகுபாடு கூடாது என எல்லோருக்கும் சொல்லி வருவார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பையனும், வேறொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் காதலிக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்க இருவருடைய பெற்றோர்களுடனும் பேசிவிட்டு வருவார். இவரைச் சோதிக்க வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஒருவர், இவருடைய மகனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனும் ஒரே நாளில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த உண்மையை வைத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும் மாறி விட்டதாகக் கதை கட்டிவிடுவார். அதை உண்மை என நம்பும் சாரியார் அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தம்முடைய மக்கு மகனை வைய ஆரம்பிப்பார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனைக் கொண்டாடுவார். ஒரு கட்டத்தில் அந்தத் திருமணம் நின்று விட, மனம் மகிழ்வார்; தம்முடைய மகன் இல்லை என அவர் நம்பும் தம்முடைய மகனுக்கே, அப்பெண்ணை மணமுடிக்க சம்மதிப்பார். அவர் பேசிய தர்ம நியாயங்கள் அவருடைய செய்கையில் இருக்காது. நியாய தர்மங்கள் பேசுபவர்கள் தமக்கு என்று வந்தால் வேறு விதத்தில் நடந்து கொள்வார்கள் என்பதே நாடகத்தின் மையக் கருத்து. கடைசியில், அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் இறந்து விட, அவன் தம்முடைய மகன் இல்லை என்ற உண்மை தெரிந்தும், அவனுக்காகக் காரியங்கள் செய்வார் மனம் திருந்திய சாரியார். 

Monday, November 12, 2018

சட்டம் தலை குனியட்டும்

1972யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் சிறந்த அரசியல் நாடகங்களில் ஒன்று.

"ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும் போதும் என் தொகுதியிலே போட்டி போடற எல்லாக் கட்சிக்காரர்களையும் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வருது. எல்லாக் கட்சி கேண்டிடேட்சைப் பத்தியும் யோசிப்பேன். என்ன ஆனாலும் சரி இத்தனை பேர்லே ஒரே ஒரு ஆள்தானே ஜெயிக்க முடியும், எம்.பி. ஆக முடியும். பார்த்துக்கலாம்னு ஒரு நிம்மதி. அத்தனை கேண்டிடேட்சும் ஜெயிக்கற மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா என்னை மாதிரி பொது மக்கள் கதி என்ன?"

இப்படி பல கூர்மையான யோசிக்க வைக்கக் கூடிய வசனங்கள். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட வசனங்களே.

லட்சுமிபதி என்ற வக்கீல் பணம் இருப்பவன் (அரசியல்வாதி), பணமில்லாதவன் ஆகியோருக்கு இடையே சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஓர் ஏழை சந்தர்ப்ப வசத்தால் செய்த குற்றங்களுக்கு விரைவாகத் தண்டனை தீர்ப்பகிறது. ஆனால் ஓர் அரசியல்வாதி செய்த குற்றங்களுக்கு அவர் மீது விசாரணைக் கமிஷன் மட்டுமே வருகிறது. அதை அவர் எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்துகிறார். ஓர் இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுகிறார். நேர்மையான லட்சுமிபதியையும் சாலை விபத்தில் கொன்று விடுகிறார். இத்தகையான சம்பவங்களால் சட்டமே தலை குனிய வேண்டும் என்பதே கதை முடிவு.

லட்சுமிபதியின் கதாபாத்திரம் இன்னும் சற்று கனமாக அமைத்திருக்கலாம். வந்தே மாதரம் வக்கீலைப் போல அலட்சியமாக நடந்து கொள்பவராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரே புகழுக்காக முன்பு அந்த அரசியல்வாதிக்கு  ஆஜராவது அவருடைய கதா பாத்திரத்தை முழுமையாக நாம் ஆதரிப்பதைத் தடுக்கிறது. 

Tuesday, November 6, 2018

வந்தே மாதரம்

மஹாத்மா காந்தி, கௌடில்யர், சார்லஸ் டிக்கன்ஸ், பாரதியார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோருக்கும் சோ எழுதி இயக்கிய வந்தே மாதரம் என்ற இந்த நாடகத்துக்கும் தொடர்பு உண்டு. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.

1975யில் மேடையேறிய இந்நாடகம் அதற்கு முன்பாகத் துக்ளக் இதழில் தொடர்கதையாக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னுரையில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து சம்ஸ்க்ருத வாக்கியங்களும் அதன் மொழிபெயர்ப்பும் இடம் பெறும். அவை அந்த அத்தியாயத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வாக்கியங்கள் எதுவுமே கௌடில்யருடையது இல்லை. எல்லாமே சோவின் வார்த்தைகள். அதை தொடர் முடிந்தவுடன் சோ வெளியிட்டார். தாம் சொல்லும் நல்ல விஷயங்களை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் கௌடில்யர் பெயரில் வெளியிட்டதாக தம்முடைய பாணியில் எழுதியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் பல மாதங்களாக வெளிவந்த இந்தத் தொடர் முடியும் வரை இதைப் படித்தவர்கள் யாரும் இந்த வாக்கியங்கள் அர்த்த சாஸ்திரத்தில் கிடையாது என்பதை அறியவில்லை.

பாஸ்கரன் என்ற மிகவும் திமிர் பிடித்த ஆனால் மேதாவியான பாரிஸ்டர் வேடத்தில் சோ. குடிகாரர்; யாரையும் சிறிது கூட மதிக்காதவர்; பணத்தாசை இல்லாதவர்; நல்லவர் எனப் பல கலவைக்குணம் கொண்டவர். சார்லஸ் டிக்கன்ஸின் "டேல் ஆ ஃப் டூ சிட்டீஸ்" என்ற கதையில் தோன்றும் ஸிட்னி கார்ட்டன் என்ற பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்தப் பாத்திரம்.

ஆர்யா என்ற பாஷ்யம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். அவர் தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறியவர். அவருடன் சோவுக்கு நட்பு இருந்தது. அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தின் சில இடங்களும், சம்பவங்களும் இந்தக் கதையில் அமைக்கப்பட்டுள்ளன. கதையின் நாயகனும் அவனுடைய நண்பர்களும் முதலில் தீவிரவாதிகளாக இருந்து காந்தியவாதிகளாக மாறுவதும் கவனிக்கத் தகுந்தது. நாயகனுடைய நண்பன் பெயரும் பாஷ்யம்.

கதா நாயகன் சுந்தரம், பாஷ்யம் மற்றும் தமிழ் வாத்தியார் சம்பந்த மூர்த்தி ஆகியோர் பாரதியாரைக் கடற்கரையில் சந்திக்கின்றனர். அவர் மூலம் மேலும் உத்வேகம் அடைவதாக ஓர்  அத்தியாயம். இப்படியாக பாரதியாரையும் தம்முடைய கதையில் ஒரு பாத்திரமாகி விட்டார் சோ.

1910களின் கடைசியில் நகரும் கதைக்களம். ஜனார்த்தனம் என்ற நேர்மையான  போலீஸ் அதிகரியுடைய மகன் சுந்தரம், தன்னுடைய கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்புகிறான். அதை விரும்பாத அவனுடைய தந்தை அவனைத் தடுத்துப் பார்க்கிறார்; கைது செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் நன்றிக்கெட்டத் தனத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.

 சுந்தரத்துடைய காதலி சுமதி. அவள் மீது ஒரு சமயத்தில் மையல் கொள்ளும் புகழ் பெற்ற குடிகார, திமிர் பிடித்த வக்கீல் பாஸ்கரன் ஒரு முறை ஒரு வழக்கிலிருந்து சுந்தரத்தைக் காப்பாற்றுகிறான்.

சுந்தரமும் நண்பர்களும் குண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கின்றனர். அதில் ஆங்கிலேயர்கள் பயணிப்பார்கள் என்பது அவர்களுடைய அனுமானம். ஆனால் இந்தியர்கள் பயணிக்கின்றனர். ரயில் கவிழ்ந்து அவர்கள் அனைவரும் மரணமடைகிறார்கள். சுந்தரம் கைதாகிறான். சுமதிக்காக பாஸ்கரன் சுந்தரத்தை விடுவிக்க வாதாடுகிறான். ஆனால் சுந்தரத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கேஸ் தோற்று விடுகிறது. முடிவில் சுந்தரத்துக்குப் பதிலாகத் தானே ஆள் மாறாட்டத்தில் சிறை புகுந்து தூக்கு மேடை செல்கிறான் பாஸ்கரன்.

கதையில் இவர்களைத் தவிர பல சுவாரசியமானப் பாத்திரங்களும் உண்டு. ஆங்கிலேயரிடமும் பழகி, சுதந்திரத் தியாகிகளிடமும் பழகி, அங்கிருந்து விஷயங்களை இங்கே கசியவிடும் கலகலப்பான பத்திரிகையாளர் வேணு, அரைகுறை ஆங்கிலத்தில் பேசி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காண்டிராக்டர் வஜ்ரவேலு போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

பாஸ்கரன் மிகவும் சக்திவாய்ந்த பாத்திரம். கேலி, கிண்டல், நையாண்டி, அலட்சியம், திமிர், குடித்ததால் வரும் தள்ளாட்டம், மற்றவர்களை மரியாதை இன்றிப் பேசுதல் என மிகவும் ரசிக்கத்தக்க வேடம். சோவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.

தொடர்கதைக்கும் நாடகத்துக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. கதையில் பாஸ்கரனும் சுந்தரமும் ஓரளவுக்குப் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள்; அதனாலேயே கடைசியில் சிறையில் ஆள் மாறாட்டம் செய்ய முடிகிறது. ஆனால் நாடகத்தில் அப்படி வரவில்லை. நாடகத்தில் பாஸ்கரன் தமிழ் ஆசிரியரிடம் மட்டும் மரியாதையுடன் பேசுகிறான்; இலவச பள்ளிக்கூடம் நடத்த பண உதவி செய்கிறான்; அது மூலக் கதையில் இல்லாதது. நாடகத்தில் தன்னைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறான் பாஸ்கரன்; அதனால் போலீசுக்கு யார் இறந்தது எனத் தெரியவில்லை. ஆனால் மூலக்கதையிலோ ஆள் மாறாட்டம் செய்து சுந்தரத்தின் இடத்தில் பாஸ்கரன் தூக்கில் தொங்குகிறான்.

இந்த மேடை நாடகம் திரைக்கதையில் விரிவாக்கம் செய்யப்பட்டு தொலைக்காட்சித் தொடராக 80களில் வந்தது. நாடகமும், தொலைக்காட்சித் தொடரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நாடகத்தின், குறிப்பாக பாஸ்கரன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. உதாரணத்துக்குச் சில -

"உங்களை மாதிரி ஆசாமிகளை விட குடி எவ்வளவோ பெட்டர். குடி உடம்பைத்தான் கெடுக்கும். உங்கள மாதிரி ஆசாமிங்க குடியையே கெடுப்பிங்க."

"மூளையை மறந்து காரியம் பண்ணா அதுக்கு தலையை மறைச்சுதான் ஆகணும்."

"உட்காருங்களேண்டா...தரைதான் விசாலமா இருக்கே...என்ன சாப்பிடறீங்க? குடிக்க விஸ்கியா பிராண்டியா?"

"வெள்ளைக்காரங்களை விட மோசமானவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க...நாடு சுதந்திரம் அடைஞ்சா நான் சொல்றது புரியும்."

"யாருக்குமே இடம் கொடுக்காதவங்களுக்காகத் தான் இந்த சமூகம் இடம் கொடுக்கும்."

"ஒரு தேசப் பக்தனுக்கு தேசத்துக்காக உயிர் விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்காக உழைப்பது முக்கியமா? தேசத்திடமிருந்தே விடுதலை வாங்கி சென்று விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்கே விடுதலை வாங்கித் தர உழைப்பது முக்கியமா?"