Showing posts with label Baliya. Show all posts
Showing posts with label Baliya. Show all posts

Friday, October 20, 2017

தெய்வ சங்கல்பம்

21 ஜூலை 1972யில் வெளியான இப்படத்தை பி.ஆர்.சோமு இயக்கியுள்ளார். .வி.எம்.ராஜன், விஜயகுமாரி, முத்துராமன், பாலையா, பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, ஜி.சகுந்தலா, மேஜர் சுந்தர்ராஜன், சச்சு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். சோவுக்கு அநாதை ஆசிரம நிர்வாகி வேடம்; மணி என்று பெயர். படம் நன்றாக இல்லாததால் சோவின் நகைச்சுவையும் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. சச்சு அவருக்கு இணை.

கதை சுமார்; திரைக்கதை சுத்த மோசம். மேஜர் சுந்தர்ராஜனுடைய தங்கையான சகுந்தலாவை ஏமாற்றி விடுகிறார் வி.எஸ்.ராகவன். அதற்குப் பழிவாங்க ஒரு விபத்தில் சுய நினைவின்றி இருக்கும் ஏ.வி.எம்.ராஜனை ராகவன் மகளான விஜயகுமாரிக்குத் தாலி கட்ட வைக்கிறார் மேஜர். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தந்தைக்கும் மகளுக்கும் மணாளன் யாரெனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் குணமாகும் ராஜன் தாம்தான் விஜயகுமாரிக்குத் தாலி கட்டியவர் எனப் பொய் சொல்ல, ஏன் எதற்கு எனக் கேட்காமல் அதை அப்படியே நம்பி விஜயகுமாரி அவர் வீட்டுக்குப் போய் விடுகிறார். பின் அது பொய் எனத் தெரிந்து வெளியேறுகிறார். சில குழப்பங்களுக்குப் பிறகு உண்மை தெரிந்து, பிரிந்தவர்கள் சேர்ந்து, இறந்தவர்களாகத் தெரிந்தவர்கள் உயிருடன் வந்து, எல்லா உண்மைகளும் எல்லாருக்கும் தெரிந்து, கதை சுபமாக முடிகிறது.


சோவின் நகைச்சுவை போல பாலையாவின் நடிப்பும் எடுபடவில்லை. அவர் தம்முடைய அக்காளான வரலட்சுமிக்குப் பயந்தவராக வருகிறார். அவருக்கு இணை பண்டரிபாய்; மகன் ராஜன். அக்காள் மகளாக சச்சு. எல்லா நடிகர்களும் இயக்குனரால் வீணடிக்கப்பட்டுள்ளனர். 

Tuesday, July 25, 2017

மனம் ஒரு குரங்கு

1967யில் வெளியான படம். .டி.கிருஷ்ணஸ்வாமி டைரக்ஷன். செல்லப்பா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சோ. கே.ஆர்.விஜயா கதாநாயகி; நாயகன் .வி.எம்.ராஜன்.

திரைக்கதை - சோ. சோவுடைய எழுத்தில் ஏற்கனவே சக்கை போடு போட்ட நாடகம்தான் படமாக எடுக்கப்பட்டது. 

டி.எஸ்.பாலையா பணக்காரர்; அவருடைய ஒரே மகன் சோ. இருவரும் திரையில் தோன்றும் காட்சிகள் நமது வயிற்றைக் குலுக்க வைக்கின்றன.
.வி.எம்.ராஜன் நாடகம் போடுகிறார்; காய்கறிக்காரியாக நடிக்கும் நடிகை கோபித்துக் கொண்டு போய் விட, அவள் இல்லாமலே நாடகத்தை நடத்துவதாகச் சவால் விடுகிறார் ராஜன். உண்மையான காய்கறிக்காரியான  கே.ஆர்.விஜயாவை நாடகத்தில் நடிக்க வைக்கிறார்.

விஜயா நடிப்பைப் பார்க்கும் ராஜனின் நண்பனான சோ விஜயாவைக் காதலிக்கிறார். பாலையா பார்த்து வைக்கும் அவருடைய பணக்கார நண்பருடைய மகளை நிராகரிக்கிறார். விஜயா காய்கறி விற்பவர் எனது தெரிந்த பிறகு, அந்தப் பணக்காரப் பெண்ணையே மணக்க சம்மதிக்கிறார்.

விஜயாவின் நடை உடை பாவனையை மாற்றி, அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நவநாகரீக நங்கை போல காட்டுகிறார் ராஜன். அவர் திட்டப்படியே சோ மீண்டும் விஜயாவை மணக்க விரும்ப, விஜயா அவரை நிராகரிக்கிறார்.

இன்னும் சில மன மாற்றங்களும் நிராகரிப்புகளும் படத்தில் உண்டு. கடைசியில், விஜயா மனம் மாறி படங்களில் நடிக்கத் தொடங்குகிறார். அவர் மீது உயிரையே வைத்த முத்து ராமன் இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். ராஜன் மனம் சபலப்பட்டு விஜயாவை மணக்க விரும்புகிறார்; ஆனால் அவரை விஜயா நிராகரிக்கிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் பிரமாதம். ராஜன் விஜயாவுக்கு நாகரீகமாக இருக்க கற்றுக் கொடுக்கும் காட்சிகள் மட்டும் சிறிதே நீளம். 'மனம் ஒரு குரங்கு' என்ற பாடலைத் தவிர மற்றவை மனத்தில் நிற்கவில்லை.


சோ படம் முழுவதும் அவ்வப்போது வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அவருடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயம் இல்லை.