Showing posts with label Jayalalitha. Show all posts
Showing posts with label Jayalalitha. Show all posts

Saturday, July 14, 2018

சோ சிறு வேடங்களில் நடித்த சில நாடகங்கள்

விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகங்களிலும் சினிமாவிலும் பிசியாக இருந்த சமயத்திலும் சோ சிறு வேடங்களில் மற்றவர்கள் எழுதிய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

ஒய்.ஜி.பியின்  "அண்டர் செகரட்டரி " என்ற நாடகத்தில் சோ மனம் போனவாறு வசனங்கள் பேச, மற்ற நடிகர்கள் திணறுவர். ஆனால் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவோ அசராமல் உடனுக்குடன் பதில் வசனம் பேசி நடிப்பாராம். 1964யில் மேடையேறிய நாடகம் இது. 

"தி ஹோல் ட்ரூத்" என்ற ஆங்கில நாடகத்தில் வில்லன் சோ ஜெயலலிதாவைக் கழுத்தை நெரிக்கும்படி ஒரு காட்சி. சோவுடைய கண்களைப் பார்த்து ஜெயலலிதா சிரித்து விட, அக்காட்சியில் சோ அவருடைய முகத்தைப் பார்க்காதவாறு காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதல் நாயகனும் வில்லனும் சோவே.

"டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன்" என்ற ஆங்கில நாடகத்தில் அமெரிக்க சோல்ஜராக சோவும், ஜப்பானியப் பெண்ணாக ஜெயலலிதாவும் நடித்தனர். இது விவேகா பைன் ஆர்ட்ஸின் நாடகம். 1969யில் மேடையேறியது.

1962யில் "சொல்லித் தெரிவதில்லை" என்ற நாடகம் ஜெ.முத்துசாமி எழுதி பாலசந்தர் இயக்கினார். அதில் அம்பி, நீலு, நாணி, சோ ஆகியோர் நடித்தனர். நாணியுடன்  தோன்றுகிற காட்சியில் திடீரென சோ திக்க ஆரம்பிக்க, அதை எதிர்பார்க்காத நாணி ஏன் திக்குகிறாய் எனக் கேட்டார். டைப்பாய்டு வந்து விட்டதால் திக்குவதாகச் சோ சொன்னார். கடைசிக் காட்சியில் திக்காமல் சோ பேசினார். ஏன் திக்கவில்லை என நாணி கேட்க, மீண்டும் டைப்பாய்டு வந்து திக்குவது நின்று விட்டது எனச் சோ ஒரு போடு போட்டார். ஆடியன்சிடமிருந்து நல்ல அப்லாஸ். இதை முதலில்  சற்றும் விரும்பாத பாலசந்தர், இது நன்றாக வந்ததால் அதை நாடகத்தின் காட்சியாக மாற்றினார். 

Saturday, July 7, 2018

அவன்தான் மனிதன்


ஏ.சி.திருலோகசந்தர் இயக்கம். 11 ஏப்ரல் 1975 வெளியீடு. சிவாஜி கணேசன், ஜெயலலிதா, முத்துராமன், சந்திரபாபு, வாசு போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். சோவுக்கு அப்பாவு என்ற கதாப்பாத்திரம். சச்சு ஜோடி. 

துன்பவியல் கதை. எல்லா நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர். கண்ணதாசன் கற்பனையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். 

Sunday, June 24, 2018

சினிமாப் பைத்தியம்

31 ஜனவரி 1975யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன். ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக். சுவாரசியமான படம். சினிமா பைத்தியம் பிடித்து அலையக் கூடாது என்பதையும், சினிமா நடிகர்கள் எதையும் மிகைப்படுத்தி செய்வார்கள் என்பதையும் எடுத்துரைக்கும் படம். ஜெய்சங்கர் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தம்முடைய இமேஜைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் நடிகர் ஜெய்சங்கராகவே நடித்துள்ளார். அவரை விட வில்லன் நடிகர் பலசாலி, அவரை விட ஒரு துணை நடிகர் நல்ல உடல்கட்டு உடையவர், அவர் 500 ரூபாய் தர்மம் செய்தால் அவருடைய உதவியாளர் அவர் ஐயாயிரம் உதவி செய்ததாக செய்தி வெளியிடுவது, தம்முடைய மகளுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு உதவி கேட்டு வரும் பெண்ணுக்குப் புத்திமதி கூறி ஊர் போய்ச் சேர பணம் கொடுத்தனுப்புவது எனப் பல காட்சிகள். அவரைத் தவிர கண்டிப்பாக எந்த நடிகரும் இப்பத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்கள். அவர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

ஜெய்சங்கர் மீது உயிர் விடுமளவு ரசிகையான ஜெயசித்ரா தம்முடைய முறைப் பையனான கமலைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஜெய்யையே மணம் செய்ய கனவு காண்கிறார். சினிமா உலகம் உண்மையில்லை என்பதை ஜெய் அவருக்குப் புரிய வைப்பதே கதை.

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி, பி.மாதவன் உட்பட பலர் கௌரவ நடிகர்களாக நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சச்சு, மனோரமா, வி.கே.ராமசாமி போன்றோரும் நடித்துள்ளனர்.

சோ ரமணி என்ற கேரக்டரில் ஜெய்க்கு உதவியாளராக வருகிறார். சற்றும் அலட்டிக் கொள்ளாத பாத்திரம். கலகலப்புக்குச்  சற்றும் பஞ்சமில்லை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஜெய்க்கு இவர் விளம்பரம் தேடித் தருவது நல்ல வேடிக்கை. கமலுடன் சோ நடித்த முதல் படமிது.

Tuesday, May 15, 2018

சோ நடித்த ஆங்கிலப் படம்

முன்னாள் ஜனாதிபதி கிரியுடைய மைந்தர் சங்கர் கிரி பிரிட்டிஷ் கவுன்சிலுடன் சேர்ந்து ஒரு டாகுமெண்டரி படம் தயாரித்தார். Epistle எனப் படத் தலைப்பு. அவரும் அவருடைய மனைவி யமுனா கிரியுமே வசனகர்த்தாக்கள். இயக்குனர் யாரெனத் தெரியவில்லை. ஜி.எஸ்.கோபாலகிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.

இப்படத்தில் நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய பெண்ணைச் சங்கர் தேடினார். திரு. ஒய்.ஜி.பியுடைய மனைவியான ராஷ்மி அவர்கள் ஜெயலலிதாவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ஜெயா சிறுமி. அவருடைய தாயார் சந்தியா ஒய்.ஜி.பி. நாடகங்களில் நடித்து வந்தார்.

டாக்குமென்டரியாக ஆரம்பித்த படம் திரைப்படமாக வளர்ந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என நினைத்த ஜெயா தொடர்ந்து பல நாட்கள் விருப்பமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடைசியில் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் ஆகி விட்டது.

1961யில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை. 1966யில் ஜெயா பிரபலமானவுடன் வெளிவந்தது. வந்த சுவடு தெரியாமல் படம் படு தோல்வி அடைந்தது.

ஒய்.ஜி.பியின் குழுவில் இருந்ததாலோ என்னவோ, இப்படத்தில் சோவும் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். நியாயமாக இதுதான் அவருடைய முதல் படம். பார் மகளே பார் 1963யில் தான் வெளிவந்தது. சோ இதை வெறும் டாகுமென்டரியாகவே நினைத்தார் என்று நினைக்கிறேன். இப்படத்தைப் பற்றி அவர் ஒரு முறையும் எதுவும் பேசியதில்லை. அதனால் நானும் அவருடைய திரைப்பட வரிசையில் இதை சேர்க்கவில்லை.

Tuesday, April 10, 2018

அன்பைத் தேடி

முதல் காட்சி சோவுடைய வசனத்தில் ஆரம்பித்து, முடியும்போதும் சோ நகைச்சுவையில் முடியும். முக்தா சீனிவாசன் படம் என்பதால் சோவுக்கு முழு சுதந்திரம். அவர் தம்முடைய பாணியில் அரசியல்வாதிகளை நன்றாகக் கிண்டலடிக்கிறார். கிட்டத்தட்ட படம் முழுக்க வரும் சோவுடைய நகைச்சுவை சற்று கூட அலுப்பு தட்டவில்லை. விருந்தாளி மாமா என எல்லாரும் கூப்பிடுவார்கள், அவர் ஒரு விருந்தாளியாக சிவாஜி வீட்டில் வந்து உட்கார்வதால். ஆனால் அவர் கடைசி வரை தங்களுக்கு என்ன உறவு என அந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் புரியாது.

பிற்பகுதி சற்று சுமார் என்றாலும் மொத்தத்தில் படம் பார்க்கும்படி உள்ளது. சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும், ஜெயலலிதாவின் அருமையான நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம். பகல் கனவு கண்டு தன்னையே மறந்து எதையாவது போட்டு உடைத்து விடுவார் சிவாஜி. அதனால் அவர் எந்த வேலையிலும் நிலையாக இருக்க மாட்டார். ஒரு கட்டத்தில் இந்த கனவால் தம்முடைய அக்காள் மகளைத் தொலைத்து விடுவார். அப்பெண் இறந்து விட்டாள் என எல்லாரும் நம்பி இவரை ஒதுக்கிவிடுவார்கள். ஜெயலலிதாவைத் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தையை அக்காளுக்குக் கொடுத்து விடும் முடிவுடன் சிவாஜி இருப்பார். அதற்கிடையே வில்லனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தை கிடைத்து விட, சுபமாகப் படம் முடியும்.

சிவாஜியுடைய அக்காவாக விஜயகுமாரி, அவருடைய கணவராக மேஜர் சுந்தர்ராஜன், வில்லனாக மனோகரும் ஸ்ரீகாந்தும், நகைச்சுவைக்கு சோவும் மனோரமாவும் நடித்துள்ளனர். 

Friday, February 9, 2018

சூரியகாந்தி

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தை முழுக்க முழுக்க ஜெயலலிதாவே தமது தோள்களில் தாங்குகிறார். இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம். சூப்பர் ஹிட் படம். இப்போது பார்த்தாலும் சுவாரசியமாக உள்ளது. நடுத்தர வயது ஜெயலலிதா கொள்ளை அழகு; நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் மெருகு கூடியுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார்.

27 ஜூலை 1973 யில் இப்படம் வெளிவந்தது. ஜெயலலிதா, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், சாவித்ரி, சோ, மனோரமா, சி.ஐ.டி. சகுந்தலா, மௌலி, வாசு, காத்தாடி ராமமூர்த்தி, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை என எண்ணற்ற நடிகர்கள். பொதுவாக இத்தனை நடிகர்கள் இருந்தால் எல்லாருக்கும் அவ்வளவாக ஸ்கோப் இருக்காது. ஆனால் இப்படத்தில் எல்லாருக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு; இயக்குனர் எல்லாரையும் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு ஒண்டு குடித்தன வீட்டில் நடப்பதைப் போன்ற கதை. சுந்தர்ராஜன்-சாவித்ரி தம்பதியரின் மகனான முத்துராமன் ஜெயலலிதாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போகும் ஜெயா, கணவனை விட மிக அதிகமாகச் சம்பாதிக்கிறார். இதனால் முத்துராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கிடையே தோன்றும் சச்சரவே மீதி கதை.

ஊர் வம்பு பேசி அலையும் மஹாபலி என்ற பாத்திரத்தில் தோன்றும் சோ தமது நடிப்பாலும் வசனங்களாலும் கலக்கியுள்ளார். சி.ஐ.டி. சகுந்தலா சோவுக்கு ஜோடி. மனோரமாவும் படத்தில் உண்டு. மௌலியுடைய அக்காளாக வருகிறார். மௌலிக்கு இது முதல் படம்.

"நான் என்றால் அது அவளும் நானும்" என்ற பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து ஜெயலலிதா பாடியுள்ளார். இப்பாட்டில் வரும் ஆங்கில வரிகளைப் பாடியதோடு மட்டுமின்றி அவரே அவற்றை எழுதியுமுள்ளார். இப்பாடல் மிகவும் பிரபலம். அதைப் போல மனோரமா பாடிய "தெரியாதோ நோக்கு" என்ற பாடலும் பிரபலமடைந்தது. டி.எம்.எஸ். பாடி கவிஞர் கண்ணதாசன் தோன்றும் "பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" என்ற தத்துவப் பாடல் இன்றைக்குக் கூட எங்காவது ஒலித்துக் கொண்டிருக்கும். 

Saturday, December 23, 2017

கங்கா கௌரி

சோ நடித்த முதல் புராணப் படமிது. பி.ஆர். பந்துலு இயக்கத்தில் 14 ஏப்ரல் 1973யில் வெளியான படம். சோ நாரதராக நடித்துள்ளார். அரசியல் வசனங்களை மறைமுகமாகப் புகுத்தி நையாண்டி செய்கிறார். ரசிக்கும்படியான நடிப்பு. ஒரு பாட்டில் இவருக்குச் சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்துள்ளார்.

சோ, மனோரமா, ஜெயலலிதா, ஜெயந்தி போன்றோர் நிறைவாக நடித்திருந்தாலும் சோ தோன்றும் காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள் ரசிக்கும்படியாக இல்லை. பல புராண கதைகளின் கலவை தான் இப்படத்தின் கதை. சிரிக்கும்படியான தோற்றத்தில் நவக்கிரகங்கள், தொந்தியுடன் சிவன் (ஜெமினி கணேசன்), வாடி போடி எனச் சண்டையிட்டுக் கொள்ளும் கங்கா - கௌரி, பயந்த சுபாவத்தில் கௌரி, போக்கிரித்தனமான கங்கா எனப் படம் முழுவதுமே அபத்தங்கள்.

ஓ.ஏ.கே. தேவர், அசோகன், சிவகுமார், பூர்ணம் விஸ்வநாதன், சி.கே.சரஸ்வதி, தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே வீணடிக்கப் பட்டுள்ளது.

Sunday, December 10, 2017

வந்தாளே மகராசி

மனோரமாவுக்கும் சச்சுவுக்கும் இதுவரை ஜோடியாக நடித்து வந்த சோ ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த படம். ஜம்பு என்ற கதாபாத்திரத்தில் சண்டைக்கார அக்காளுக்குப் பயந்த அப்பாவியாக வருகிறார். சிறிய வேடம்; ஓஹோ என்று சொல்லும்படியான காமெடி இல்லை; ஆனால் நிறைவாகச் செய்துள்ளார்.

14 ஏப்ரல் 1973யில் வெளியான இப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

எம்.என்.ராஜம் எதிர் நாயகி. அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் படம் முழுக்க ஸ்கோப். ஜெய்சங்கர் உட்பட மற்ற எல்லாருக்கும் படத்தில் அவ்வளவாக காட்சிகள் இல்லை.

பணக்காரரான வி.எஸ்.ராகவன் சபல புத்தியில் இளவயது ராஜத்தைத் திருமணம் செய்து கொள்கிறார். தந்தைக்காக புஷ்பலதா சொத்தைத் தியாகம் செய்கிறார். ராஜமும் அவருடைய அம்மாவும் (சி.கே.சரஸ்வதி) எல்லாருடனும் சண்டை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சொத்தை வைத்துக் கொள்கின்றனர். கணவனை இழந்து வரும் புஷ்பலதாவையும் அவருடைய குழந்தைகளையும் ராஜம் படுத்துகிறார். ஒரு சிறு சண்டை காரணமாக அப்பாவியான ஜெயலலிதாவைத் தம்முடைய தம்பியான சோவுக்குத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துகிறார். அதைத் தாங்க முடியாத பக்கத்து வீட்டு ஜெய்சங்கர் கில்லாடியான இன்னொரு ஜெயலலிதாவை ஆள் மாறாட்டம் செய்கிறார். இந்த ஜெயா எப்படி ராஜத்தை வழிக்குக் கொண்டு வந்து நல்லவர்கள் அனைவரையும் காப்பாற்றினார் என்பதே மீதி கதை.

Friday, September 22, 2017

ஒரு தாய் மக்கள்

ப.நீலகண்டன் இயக்கிய இப்படம் 9 டிசம்பர் 1971யில் வெளியானது. எம்.ஜி.ஆர். நாயகன்; ஜெயலலிதா நாயகி. முத்துராமனும் நம்பியாரும் வில்லன்கள். பண்டரிபாய், அசோகன், வி.கே.ராமசாமி ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். பணக்கார அசோகனிடம் வேலை செய்பவராக வருகிறார் சோ. அவருடைய கேரக்டர் பெயர் சிகாமணி. அவரும் வி.கே.ஆரும் சேர்ந்து ஓரளவு நகைச்சுவையாக நடித்துள்ளனர். ஆனால் இருவருக்குமே அவ்வளவாக வாய்ப்பு இல்லை.

குழந்தைகளாக இருக்கும் போது பிரிந்த சகோதரர்களான எம்.ஜி.ஆரும் முத்துராமனும் பெரியவர்கள் ஆனவுடன் ஒன்று சேர்வதே கதை. இருவரும் ஜெயலலிதாவைக் காதலிப்பதும் அதனால் அவர்களுக்குள் பகை ஏற்படுவதும், பின் வழக்கம் போல் எம்.ஜி.ஆர். வெல்வதும் முத்துராமன் மனம் திருந்துவதுமாக கதை முடிகிறது.

Thursday, September 14, 2017

நீரும் நெருப்பும்

18 அக்டோபர் 1971யில் வெளியான இப்படமும் சோவுக்குத் தேவையில்லாத படம். இதில் கௌரவ வேடம் போல ஒரே காட்சியில் தோன்றுகிறார். எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் மேஜிக் செய்வார். அவருடைய உதவியாளராக சோ வருகிறார். இவர் கேரக்டருக்குப் பெயர் கூட கிடையாது.

படம் வழக்கமான . நீலகண்டனின் மசாலாப் படம். பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக். எம்.ஜி.ஆர் ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பிடிக்க இப்படத்தில் எதுவுமில்லை. எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் அதிகம் என்ற காரணத்தால் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.


எம்.ஜி.ஆர். இரு வேடங்கள். ஜெயலலிதா நாயகி. அசோகன் வில்லன். ஆனந்தன் அவருடைய கையாள். மனோகர் எம்.ஜி.ஆரின். காட் ஃபாதர். இதைத் தவிர தேங்காய் சீனிவாசன், மனோரமா, டி.கே.பகவதி என நிறைய நட்சத்திரங்கள். தந்தையைக் கொன்ற வில்லனை இரு சகோதரர்களும் பழி வாங்கும் கதை.

Thursday, August 24, 2017

குமரிக் கோட்டம்

26 ஜனவரி 1971யில் வெளியான எம்.ஜி.ஆரின் வெற்றிப் படம். . நீலகண்டன் இயக்கம். சோவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரம். தவிர்த்திருக்க வேண்டிய படங்களில் ஒன்று.

கதை வழக்கமான மசாலா கதை. எம்.ஜி.ஆருடைய தந்தையும் வி.கே.ராமசாமியும் நண்பர்கள். பணம் வந்தவுடன் நட்பை மறந்து நண்பனை அவமானப்படுத்துகிறார் வி.கே.ஆர். எம்.ஜி.ஆர் அவரை மீண்டும் ஏழையாக்கி புத்தி புகட்டுவது தான் கதை.

வி.கே.ஆருடைய மகளாகவும், ஆட்டக்காரியாகவும் இரு வேடங்களில் ஜெயலலிதா. வில்லனாக மனோகர். எம்.ஜி.ஆருக்கு உதவும் பணக்காரராக அசோகன். அவருடைய மகளாக லட்சுமி. சோவுக்கு ஜோடியாக சச்சு. எல்லாரும் வந்து போகிறார்கள் இந்த வலுவில்லாத கதையில்.


எம்.ஜி.ஆருடைய நண்பனாக சோ. பாலு என்ற கதாபாத்திரம். சில காட்சிகளில் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அவ்வளவு தான்.

Monday, August 14, 2017

எங்கள் தங்கம்

சில எம்.ஜி.ஆர். படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில எம்.ஜி.ஆர். படங்கள் அவருடைய ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்இப்படம் அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்திருக்காது என நினைத்தேன். ஆனால் இப்படம் ஒரு சூப்பர் ஹிட் படம் என்பதை அறிந்து அதிசயப்பட்டேன். ஒன்று இரண்டு பாடல்களைத் தவிர படத்தில் ரசிப்பதற்கு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க தி.மு.. அரசு கொள்கை பிரசார படம். அண்ணாவின் மேடைப் பேச்சு, கலைஞரின் காட்சிகள், போதாததற்கு எம்.ஜி.ஆர். நடிகர் எம்.ஜி.ஆராகவே இன்னொரு வேடத்தில் தோன்றி தி.மு.. கொள்கைகளைப் பரப்புகிறார்.

1970 அக்டோபரில் வெளிவந்த இப்படத்தை முரசொலி மாறன் எழுதியுள்ளார். தயாரிப்பும் அவரே. இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு. கலைஞர் ஆட்சிக் கொள்கையை விளக்க மாறன் தயாரித்த இப்படத்தில், பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோ ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். லாரி டிரைவர். ஆனால் பெரிய வீட்டில் நல்ல வசதியுடன் வாழ்கிறார். சென்னை சூட்டிலும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு அலைகிறார். என்ன லாஜிக்கோ?

எம்.ஜி.ஆருடைய கண் பார்வையற்ற தங்கையான புஷ்பலதாவை மானபங்க படுத்தும் .வி.எம்.ராஜன் மனம் திருந்தி அவரையே மணந்து கொள்கிறார். கொள்ளைக் கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு அவர் அவதிப்பட, திருட்டுப் பட்டத்தைத் தாம் சுமந்து கொண்டு உண்மையான குற்றவாளிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் கதையின் சுருக்கம்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். கதா காலட்சேபம் செய்வதாக வரும் காட்சி இந்தியர்களை எதற்கும் லாயக்கற்றவர்கள் என பறைசாற்றுகிறது. சென்சார் இதை எப்படி அனுமதித்தனர்?

லாறி என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரின் நண்பராகவும், லாரி க்ளீனராகவும் சோ வருகிறார். தேங்காய் சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, மனோரமாவை ஜோடியாக வைத்துக் கொண்டு நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.


அசோகன், மனோகர், வீ.எஸ். ராகவன் போன்ற நடிகர்களும் இப்படத்தில் உண்டு.  

தேடி வந்த மாப்பிள்ளை

1970 ஆகஸ்டில் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் முற்பகுதி நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. வழக்கமான மசாலாக்  கதை.

எம்.ஜி.ஆருடைய தந்தையை யாரோ கொலை செய்து விட, அதைச் செய்தவர் மேஜர் சுந்தரராஜன் என எம்.ஜி.ஆர். அம்மா எம்.வி.ராஜம்மா நம்புகிறார். அவரைத் தேடி பட்டணம் வரும் எம்.ஜி.ஆர். அவருடைய மகளான ஜெயலலிதாவைக் காதலிக்கிறார். அவர் குற்றவாளி இல்லை எனத் தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே ஜெயலலிதாவுக்குத் தொலைந்து போன ஜோதி லட்சுமி அக்காவும், அவருடைய காதலரான சோவும். நடுவிலே அசோகன் புகுந்து குட்டையைக் கிளப்ப வழக்கம் போல கடைசியில் அவர் சிறை செல்ல, முடிவு சுபம்.


சோவுக்கு வாய்ப்பு படத்தில் குறைவு. அவர் தோன்றும் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், ஹை லைட்டாக எதுவுமில்லை. அவருடைய கேரக்டர் பெயர் கர்ப்பதன். பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஜோதி லட்சுமி அவருக்கு ஜோடி. படத்தின் முடிவில் சோ ஒரு சி..டி. இன்ஸ்பெக்டர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

என் அண்ணன்

1970 மே-யில் வெளியான திரைப்படம். . நீலகண்டன் இயக்கம். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

பூச்சி என்ற முழு அசட்டு கேரக்டரில் சோ. நகைச்சுவையோ வசனங்களோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சோ நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.

வழக்கமான மசாலாக் கதை. ஏழை எம்.ஜி.ஆர். தம்முடைய தங்கை விஜய நிர்மலாவைப் படிக்க வைக்கிறார். அவர் பணக்கார டாக்டர் முத்துராமனைக் காதலித்து மணந்து கொள்கிறார். அவர் மீது ஆசை வைத்திருந்த தேங்காய் சீனிவாசன் மூலம் எம்.ஜி.ஆர் தந்தை தான் தன்னுடைய கணவனைக் கொன்றவர் என்பதை அறிந்தவுடன், முத்துராமனுடைய தாயான எஸ்.என்.லட்சுமி மருமகளை விரட்டி விடுகிறார்.

தேங்காயைத் தாக்கி சிறை செல்லும் எம்.ஜி.ஆர். அங்கே தந்தையான டி.கே.பகவதியைச் சந்திக்கிறார். அவர் கொலை செய்யவில்லை என்பதை அறிகிறார்.

சிறையிலிருந்து வெளியே வரும் எம்.ஜி.ஆர். தம்முடைய காதலியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொலையாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து தந்தையை விடுதலையடைய வைக்கிறார். தங்கையும் அவர் கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளப் படுகிறார்.

நம்பியார் மற்றும் அசோகன் வில்லன்கள். சோ நம்பியாருடைய மகன். அவருக்கு ஜோடி கீதாஞ்சலி. பேபி ஸ்ரீதேவியும் படத்தில் உண்டு.


கே.வி.மகாதேவன் இசையில் பெரும்பாலான பாடல்கள் அருமை. அதிலும் "கடவுள் ஏன் கல்லானான் ", "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ", "நீல நிறம் " ஆகிய பாடல்கள் குறிப்பிட தக்கவை.

Sunday, August 13, 2017

எங்க மாமா

14 ஜனவரி 1970ல் வெளியான ''எங்க மாமா" படம், முழுக்க முழுக்க சிவாஜியுடைய படம். படம் முழுக்க அவர் அல்லது அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் சிவாஜிக்கு முன்பு யாரும் எடுபடவில்லை.

.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளி வந்த படம். எம்.எஸ்.வி.யின் இசையில் எல்லாப் பாடல்களும் படத்தில் சூப்பர்.

ஞானம் என்ற கதாபாத்திரத்தில் சோ. போக்கிரியாக வருகிறார். நகைச்சுவை இப்படத்தில் சுமார் தான். பெண் வேடத்திலும் சாமியார் வேடத்திலும் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க சோ செய்யும் முயற்சிகள் கை கூடவில்லை.

முறை மாமனான பாலாஜியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தாய் தந்தை இல்லாத ஜெயலலிதா பட்டணம் வருகிறார். ஆனால் மைனரான பாலாஜி அவரை நிராகரித்து விடுகிறார். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவை சிவாஜி தமது வீட்டுக்கு கூட்டி வருகிறார். அநாதை இல்லம் நடத்த தேவைப்படும் பணத்தை பாலாஜியிடமிருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயாவை நவநாகரீகப் பெண்ணாக மாற்றும் சிவாஜி, பாலாஜியை  அவர் மீது மையல் கொள்ள வைக்கிறார்ஜெயாவுக்கு பாலாஜி மீது வெறுப்பும் சிவாஜி மீது காதலும் ஏற்படுகிறது. இதற்கிடையே பாலாஜி செய்யும் சில சூழ்ச்சிகள், அவற்றிலிருந்து மீண்டு எப்படி சிவாஜி ஜெயாவை மணந்தார் என்பதே கதை.


வெண்ணிறாடை நிர்மலா, தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, எஸ்.என்.லட்சுமி, சி.கே.சரஸ்வதி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிஜா சோவுடைய காதலியாக வருகிறார்

மாட்டுக்கார வேலன்

1970 ஆண்டு, 14 ஜனவரியில் வெளியான எம்.ஜி.ஆரின். வெற்றிப் படமிது. .எல்.நாராயணன் எழுத்தில், .நீலகண்டன் இயக்கிய படம்.

எம்.ஜி.ஆர். இரு வேடத்தில் நடித்த இப்படத்தில் முழுக்க முழுக்க அவருடைய ஆதிக்கம் தான். ஜெயலலிதா, லட்சுமி, சோ, சச்சு எல்லாருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வி.கே.ஆருக்கும் அசோகனுக்கும்  ஓரளவு ஸ்கோப்.

வழக்கமான மசாலா படம். லாஜிக் பார்க்காமலிருந்தால் படம் ரசிக்கும்படி உள்ளது. எம்.ஜி.ஆர் தந்தையை அசோகன் கொன்று விட, அந்த உண்மையை வி.கே.ஆர் மூலம் அறியும் எம்.ஜி.ஆர். அசோகனைப் பிடிக்க போகும் முயற்சியில் அவரிடம் அகப்பட்டு விடுகிறார். இன்னொரு எம்.ஜி.ஆர். - மாட்டுக்கார வேலன் - அவரை மீட்டெடுத்து வில்லனை போலீசில் ஒப்படைக்கிறார். இது தான் கதையின் ஒன் லைன்.


சோ லட்சுமியுடைய அண்ணனாகவும், அசோகனுடைய மகனாகவும் வருகிறார். இவருடைய பாத்திரப் பெயர் சுந்தரம். சச்சு ஜோடி. நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் ஹை லைட்டாக எதுவுமில்லை.

Saturday, August 12, 2017

1960களில் சோ

1950களில் சோவின் நாடகப் பிரவேசம் நடந்தது. ஆனால் 1960களில் தான் அவர் மிகப் பெரிய நாடக ஆசிரியராக அறியப்பட்டார்.

சோ நடித்த சில நாடகங்கள் 

பெற்றால் தான் பிள்ளையா? - 1961
சொல்லித் தெரிவதில்லை (1962)
அண்டர் செகரட்டரி (Under Secretary) - 1964
தி ஹோல் ட்ரூத் (The Whole Truth)
டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன் (Tea House of the August Moon) - 1969

 1960களில் சோவின் நாடகங்கள்

1) Wait and See - 1961
2) What for? - 1962
3) கோ வாடிஸ் (Quo Vadis?) - 1962
4) Mind is a Monkey - 1963
5) சாதல் இல்லையேல் காதல் - 1964 (சோ எழுதிய நாடகம்; மேடையேற்றவில்லை )
6) சம்பவாமி யுகே யுகே - 1965 (இது சோ இயக்கிய முதல் நாடகம்)
7) Madras by Night - 1966
8) Is God Dead? - 1967
9) சரஸ்வதியின் செல்வன் - 1967
10) முகமது பின் துக்ளக் - 1968

1960களில் சோவின் திரைப்படங்கள் 
1) பார் மகளே பார்
வெளியான தேதி - 12-July-1963
இயக்குனர்  - பீம்சிங்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - விஜயகுமாரி;புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - மாடசாமி
ஜோடி - மனோரமா 
மேல் விபரம் - முதல் படம் 


2) நடு இரவில்
வெளியான தேதி - 1970
இயக்குனர்  - வீணை எஸ். பாலசந்தர் 
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன் 
நாயகி - சௌகார் ஜானகி 
கதாபாத்திரம் பெயர் - மௌஸ்
ஜோடி -  பெயர் தெரியவில்லை 
மேல் விபரம் - தாமதமாக வெளிவந்தது; இரண்டாவது படம் 


3) தட்டுங்கள் திறக்கப்படும்
வெளியான தேதி - 17 ஜூன் 1966
இயக்குனர்  - சந்திரபாபு
நாயகன் - சந்திரபாபு
நாயகி - சாவித்திரி
கதாபாத்திரம் பெயர் - ராகவன் 
ஜோடி - கிடையாது 


4) மறக்க முடியுமா?
வெளியான தேதி - 12-Aug-1966
இயக்குனர்  - முரசொலி மாறன்
நாயகன் - எஸ்.எஸ்.ஆர்
நாயகி - தேவிகா
கதாபாத்திரம் பெயர் - ரத்னம்
ஜோடி - கிடையாது 
மேல் விபரம் - கலைஞர் வசனம்; சோவுக்கு சண்டைக்காட்சிசீரியஸ் கதாபாத்திரம் 


5) தேன் மழை 
வெளியான தேதி - 23 செப்டம்பர் 1966
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - கே.ஆர். விஜயா
கதாபாத்திரம் பெயர் - வாசுசிதம்பரம்
ஜோடி - சச்சு 
மேல் விபரம் - சோ கதை திரைக்கதையில் முதல் படம்; சோ இரட்டை வேடத்தில் முதல் படம் 



6) மனம் ஒரு குரங்கு
வெளியான தேதி - 14 ஜனவரி 1967
இயக்குனர்  - .டி.கிருஷ்ணஸ்வாமி
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - செல்லப்பா
ஜோடி - பெயர் தெரியவில்லை 
மேல் விபரம் - சோ கதை திரைக்கதைசோவுடைய நாடகம் படமாக்கப்பட்டது


7) ஆலயம்
வெளியான தேதி - 11 ஆகஸ்ட் 1967
இயக்குனர்  - திருமலை-மஹாலிங்கம்
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - ரவி
ஜோடி - கிடையாது
மேல் விபரம் - கௌரவ வேடத்தில் நடித்த முதல் படமிது 


8) நினைவில் நின்றவள்
வெளியான தேதி - 1-Sep-1967
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ரவிசந்திரன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - மனோதத்துவ டாக்டர் சம்பந்தம்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம் ;


9) பெண் என்றால் பெண்  
வெளியான தேதி - 7 டிசம்பர் 1967
இயக்குனர்  - ஆரூர்தாஸ்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - விஜயகுமாரி, சரோஜா தேவி 
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை



10) நான் யார் தெரியுமா?
வெளியான தேதி - 8 டிசம்பர் 1967
இயக்குனர்  - வி.வி.ரமணன் 
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - தெரியவில்லை
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை 

11) கற்பூரம்
வெளியான தேதி - 9 டிசம்பர் 1967
இயக்குனர்  - சி.என்.ஷண்முகம்
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - புஷ்பலதா
தெரியவில்லைஜோடி - மனோரமா  



12) கலாட்டா கல்யாணம் 
வெளியான தேதி - 12 ஏப்ரல் 1968
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் - விட்டல்
ஜோடி - சச்சு 
மேல் விபரம் - ஜெயலலிதாவுடன் முதல் படம் 







13) நீலகிரி எக்ஸ்பிரஸ்
வெளியான தேதி - 14-ஏப்ரல் -1968
இயக்குனர்  - திருமலை மகாலிங்கம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - விஜயலலிதா
கதாபாத்திரம் பெயர் - ராவணன்
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம் 


14) கண்ணன் என் காதலன்
வெளியான தேதி - 25-Apr-1968
இயக்குனர்  - .நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - வாணிஸ்ரீ;
ஜெயலலிதா கதாபாத்திரம் பெயர் - பட்டாபி
ஜோடி - பெயர் தெரியவில்லை  
மேல் விபரம் - எம்.ஜி.ஆருடன் இணைந்து சோ நடித்த முதல் படம்



15) பொம்மலாட்டம்
வெளியான தேதி - 31-May-1968
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் - ஜாம் பஜார் ஜக்கு
ஜோடி - மனோரமா   
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம்


16) குழந்தைக்காக
வெளியான தேதி - Jun 1968
இயக்குனர்  - பி.மாதவன்
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ், மனோகர்
நாயகி - கிடையாது 
கதாபாத்திரம் பெயர் - குடுகுடுப்பைக்காரன்
ஜோடி - கிடையாது   
மேல் விபரம் - சோ கௌரவ வேடம் 


17) கணவன்
வெளியான தேதி - Aug 1968
இயக்குனர்  - .நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - பரதன்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - எம்.ஜி.ஆர். எழுதிய கதை 


18) டெல்லி மாப்பிள்ளை
வெளியான தேதி - 13 Sep 1968
இயக்குனர்  - தேவன்
நாயகன் - ரவிசந்திரன் 
நாயகி - ராஜஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - சின்னதம்பி
ஜோடி - சச்சு   




19) ஒளி விளக்கு 
வெளியான தேதி - 20 Sep 1968
இயக்குனர்  - சாணக்யா
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - சௌகார் ஜானகிஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - கத்திரி
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ நடித்த முதல் வண்ணப்படம்


20) லட்சுமி கல்யாணம்
வெளியான தேதி - Nov 1968
இயக்குனர்  - ஜீ.ஆர். நாதன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - சீனு
ஜோடி - கிடையாது  


21) மகிழம்பூ
வெளியான தேதி - 31 ஜனவரி 1969
இயக்குனர்  - வி.டி.அரசு 
நாயகன் - .வி.எம்ராஜன்
நாயகி - புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - பூங்காவனம்
ஜோடி - மனோரமா  



22) உலகம் இவ்வளவு தான்
வெளியான தேதி - 13 ஏப்ரல் 1969
இயக்குனர்  - வேதாந்தம் ராகவையா
நாயகன் - நாகேஷ்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - வரதன்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சுப்பு ஆறுமுகம் கதை - வசனம் ; நாகேஷ் கதாநாயகன்


23) அடிமைப் பெண்
வெளியான தேதி - May 1969
இயக்குனர்  - கே. சங்கர்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - மந்திரவாதி
ஜோடி - கிடையாது  



24) ஆயிரம் பொய்
வெளியான தேதி - Jul 1969
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - முத்து
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சோ கதை-வசனம்


25) நிறை குடம்
வெளியான தேதி - Aug 1969
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - கிரி
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - திரைக்கதை-வசனம் சோசோ எழுதிய சீரியஸ் கதையிது 



26) கன்னிப் பெண்
வெளியான தேதி - 11 Sep 1969
இயக்குனர்  - ஏ. காசிலிங்கம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வாணிஸ்ரீ, லட்சுமி
கதாபாத்திரம் பெயர் - துரைசாமி
ஜோடி - கிடையாது  


27) அன்னையும் பிதாவும்
வெளியான தேதி - 19 Sep 1969
இயக்குனர்  - கிருஷ்ணன் பஞ்சு
நாயகன் - .வி.எம்ராஜன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - மார்க்கண்டேயன்
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ வில்லனாக நடித்த முதல் படமிது


28) ஐந்து லட்சம்
வெளியான தேதி - Nov 1969
இயக்குனர்  - ஜிராமகிருஷ்ணன்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - சரோஜா தேவி
கதாபாத்திரம் பெயர் - ரங்கு
ஜோடி - மனோரமா 

1960களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 10
நடித்த நாடகங்கள் - 15க்கு மேல்; எண்ணிக்கை தெரியவில்லை
இயக்கிய நாடகங்கள் - 5
நடித்த திரைப்படங்கள் - 28
சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 1
சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 2
வில்லனாக நடித்த படங்கள் - 1
கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 2
சோ எழுதிய படங்கள் - 7
சோ நாடகம் படமாக்கப்பட்டது - 1
சோ இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் - 1

சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ஜெய்சங்கர் - 5 படங்கள்
எம்.ஜி.ஆர் - 4 படங்கள்
சிவாஜி - 4 படங்கள்
ஏ.வி.எம்.ராஜன் - 4 படங்கள்
ஜெமினி - 3 படங்கள்
ரவிசந்திரன் - 2 படங்கள்
எஸ்.எஸ்.ஆர். - 1 படம்
நாகேஷ் - 1 படம்
மேஜர் சுந்தர்ராஜன் - 3 படங்கள்
சந்திரபாபு - 1 படம்
ராமதாஸ் - 1 படம்
மனோகர் - 1 படம்


சோ நடித்த படங்களின் நாயகியர் 

ஜெயலலிதா - 5 படங்கள்
வாணிஸ்ரீ - 5 படங்கள்
கே.ஆர். விஜயா - 3 படங்கள்
புஷ்பலதா - 3 படங்கள்
சௌகார் ஜானகி - 1 படம்
தேவிகா - 1 படம்
சாவித்திரி - 1 படம்
விஜயலலிதா - 1 படம்
சரோஜா தேவி - 2 படங்கள்
விஜயகுமாரி - 2 படங்கள்
லட்சுமி - 1 படம்
ராஜஸ்ரீ - 1 படம்

சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்

முக்தா சீனிவாசன் - 5 படங்கள்
ப.நீலகண்டன் - 2 படங்கள்
திருமலை மகாலிங்கம் - 2 படங்கள்
பீம்சிங் - 1 படம்
வீணை எஸ். பாலசந்தர் - 1 படம்
முரசொலி மாறன் - 1 படம்
சந்திரபாபு - 1 படம்
ஏ.டி.கிருஷ்ணஸ்வாமி - 1 படம்
சி.வி.ராஜேந்திரன் - 1 படம்
பி.மாதவன் - 1 படம்
சாணக்யா - 1 படம்
ஜீ.ஆர். நாதன் - 1 படம்
வேதாந்தம் ராகவையா - 1 படம்
கே. சங்கர் - 1 படம்
கிருஷ்ணன் பஞ்சு - 1 படம்
ஜி. ராமகிருஷ்ணன் - 1 படம்
வி.டி.அரசு - 1 படம்
சி.என்.ஷண்முகம் - 1 படம்
ஏ. காசிலிங்கம் - 1 படம்
வி.வி.ரமணன்  - 1 படம்
தேவன்  - 1 படம்
ஆரூர்தாஸ் - 1 படம்

சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 

மனோரமா - 10 படங்கள்
சச்சு - 3 படங்கள்

சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1963 - 1
1966 - 4
1967 - 6
1968 - 9
1969 - 8