Showing posts with label Sivakumar. Show all posts
Showing posts with label Sivakumar. Show all posts

Monday, December 3, 2018

சின்னக் குயில் பாடுது

பி.மாதவன் இயக்கத்தில் 1 மே 1987யில் வெளியான படம். சுவாரசியமான கதை, தேர்ந்த திரைக்கதை, நடிகர்களின் சிறப்பான  நடிப்புடன் கூடிய நல்ல படம்.

இப்படத்தில் சோ, ராமசாமி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடி கிடையாது. சிறிய வேடம். சிவகுமார் அலுவலகத்தில் வேலை செய்பவராக வருகிறார். நகைச்சுவை நன்றாக இருந்தாலும், ஓரிரண்டு காட்சிகளில் அரசியல் பேசினாலும், இது சோவுடைய பெயர் சொல்லும் படமில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கக் கூடிய வேடம்தான்.

மனைவியை இழந்த நாயகன் மகனுக்காக மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு மணமான விஷயம் பிறகே அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட, இருவரையும் சேர்த்து வைக்க பிற கதாபாத்திரங்கள் செய்யும் முயற்சிகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதே மீதிக்  கதை.

பாக்யராஜ் தனி ட்ராக்கில் வருகிறார். தனிக் கதை - அவரே எழுதியுள்ளார்; மூலக் கதையுடன் சற்றும் தொடர்பில்லை. நல்ல கலகலப்பான காட்சிகள்.

சிவகுமார், அம்பிகா, இளவரசி, ஜீவிதா, சோ, மனோரமா, செந்தில், பாக்கியராஜ் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உண்டு. இளையராஜாவின் இசையில் சிறந்த பாடல்களும் உண்டு. 

Friday, November 30, 2018

கண்ணத் தொறக்கணும் சாமி

தாசரி நாராயணராவின் மூலக்கதைக்குத் திரைக்கதை-வசனம் எழுதியவர் பாக்யராஜ். இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து இசையமைத்த படம். ஆர்.கோவிந்தராஜ் இயக்கம். 14 ஏப்ரல் 1986யில் வெளியானது.

சோவுக்கு வேணு என்ற கதாபாத்திரம்; சிவகுமாருடைய நண்பராக வருகிறார். படம் முழுக்க தோன்றும் பாத்திரம். ரஜனி சோவுக்கு ஜோடி. நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. அரசியல் வசனங்களையும் அவ்வப்போது சோ அள்ளி வீசி நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

வேலை தேடி பட்டணம் வரும் சிவகுமார், வீடு வாடகைக்குக் கிடைக்க ஜீவிதாவுடைய போட்டோவை ஒரு கடையிலிருந்து வாங்கி, தம்முடைய மனைவி எனப் பொய் சொல்லி வீட்டை மனோரமாவிடமிருந்து வாடகைக்கு வாங்குகிறார். இதன் காரணமாக ஜீவிதாவுடைய  திருமணம் நின்று போகிறது. அவர் சிவகுமார் வீட்டுக்கே வந்து அவருடைய மனைவி என உரிமை கொண்டாடுகிறார். சிவகுமார் எதுவம் செய்ய முடியாமல் தவிப்பதே படத்தின் மிகப் பெரிய பகுதி. வில்லன்கள்-சண்டை-ஜீவிதா சிவகுமார் சேர்ந்து வாழ்தல் எனச் சுபமாகப் படம் முடிகிறது.

நல்ல கலகலப்பான படம்; சிறிது கூட அலுக்கவில்லை.

Saturday, September 8, 2018

சாட்டை இல்லாத பம்பரம்

தலைப்புக்களவு படம் அவ்வளவு நன்றாக இல்லை. கதை நன்றாக இருந்தாலும் இயக்கம் சுமார் ரகம். அதனால் படமும் சுமாராகத் தான் உள்ளது. பாக்யராஜ் கதையில் ஈரோடு முருகேஷ் இயக்கிய படம். 1983 மே மாதம் வெளிவந்தது.

அப்பாவியான சிவகுமார் தைரியமான சரிதாவைத் திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் அவர் எதிர் கொள்ளும் சவால்களும் சரிதா அதை எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை. க்ளைமாக்ஸ் மட்டும் பெரிய சொதப்பல். சரிதாவின் அருமையான நடிப்பு படத்துக்கு பலம்.

சோ சிவகுமாருடைய தந்தை தர்மலிங்கமாக வருகிறார். வில்லன் கேரக்டர்; க்ளைமாக்ஸில் மட்டும் நல்லவராக மாறி விடுகிறார். சொல்லும்படியான நடிப்போ, ரசிக்கும்படியான நகைச்சுவையோ இல்லை; இந்தப் படம் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

சாமிக்கண்ணு, சங்கிலி முருகன், காந்திமதி, செந்தில் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தாலும் பாடல்கள் சுமார். 

நம்பினால் நம்புங்கள்

எம். எஸ். கோபிநாத் இயக்கத்தில் 1982யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், சரிதா, சத்யராஜ் போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு வாய்க்கவில்லை. 

Friday, September 7, 2018

துணைவி

வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் ஏப்ரல் 1981யில் வெளியான இப்படம் below average category. சோவுக்கு ஒரு சிறிய வேடம். எம்.என்.ராஜம் ஜோடி. அவ்வப்போது சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. இது இவருக்குத் தேவையில்லாத படம்.

சிவகுமார் சுஜாதா தம்பதியினர்க்கு மூன்று குழந்தைகள். சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போது அவருக்கு தேங்காய் சீனிவாசன் மூலம் மிரட்டல் வருகிறது. அதனால் அவர் தாம் வேலை செய்யும் வங்கியில் கருப்புப் பணத்தைக் கலக்கிறார். சுஜாதா தம்முடைய கணவர் ஏதோ தவறு செய்வதாக எண்ணி நான்கு  குழந்தைகளுடன் வெளியேறி, கூலி வேலை செய்து பிழைக்கிறார். வறுமையில் அவர்கள் வாடுவதைப் பார்த்துப் பொறுக்காத சிவகுமார், கைக் குழந்தையாக உள்ள கடைசி குழந்தையை, குழந்தை பாக்கியம் இல்லாத பணக்கார சோ வீட்டு வாசலில் வைத்து விட்டு வருகிறார். பிறகொரு சமயத்தில், வில்லன்களுடன் நடக்கும் கைகலப்பில் ஒரு கொலை நடக்க, சிவகுமார் சிறை செல்கிறார்.

சுஜாதாவிடம் வளரும் பையன் திருடனாகிறான்; பெண் முறை கேடான வழிகளில் சந்தர்ப்பவசத்தால் சிக்குகிறாள். இன்னொரு பெண் கண் பார்வை இழக்கிறாள். சோவிடம் வளரும் பையன் (சுதாகர்) நல்லவனாகவும், வல்லவனாகவும் ஆகிறார். இதற்கிடையே சிவகுமார் சிறையில் சகஸ்ரநாமத்திடம் சைவ தத்துவங்களைக் கற்கிறார். விடுதலையானவுடன் ஓர் ஆசிரமத்தில் சேர்கிறார். மரணப் படுக்கையில் இருக்கும் அந்த மடாதிபதி இவரையே புதிய மடாதிபதி ஆக்குகிறார்.

சாமியாரான சிவகுமார் எப்படி சுஜாதாவுடைய கெட்டுப் போன பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார், சுதாகரை அவள் காதலியுடன் சேர்க்கிறார், சுஜாதாவின் சந்தேகங்களைப் போக்குகிறார், இன்னும் பல செய்கிறார் என்பது மீதி கதை. முடிவில் சிவகுமாரைக் குறி வைக்கும் தோட்டாவைத் தான் உள்வாங்கி தியாகியாகச் சாகிறார் அவர் துணைவி. மொத்தத்தில் இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன், விஜய பாஸ்கர், மௌலி, கண்ணன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

Wednesday, June 27, 2018

ஆண் பிள்ளை சிங்கம்

எஸ்.பி.முத்துராமனின் மோசமான படங்களில் இப்படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. 1975யில் வெளிவந்தது. இதில் சோவுக்கு வில்லன் வேடம். நகைச்சுவை வில்லன் இல்லை. பக்கா வில்லன்.

மிகவும் சுமாரான கதை; அதை விட சுமாரான திரைக்கதை. செந்தாமரை-எம்.என்.ராஜம் தம்பதி மற்றும் அவர்களுடைய பையன் சோ எல்லாரையும் ஏமாற்றி வட்டிக்குப் பணம் கொடுத்து, முதலையே ஏப்பம் விடுபவர்கள். இன்னொரு பையனான சிவகுமார் அப்பாவி; நல்லவர். அவர்களிடம் அகப்பட்டு அவதிப்படும் வேலைக்காரியாக சுஜாதா- அவருடைய கணவர் விஜயகுமார். வரதட்சிணை வாங்கி படாபட் ஜெயலட்சுமியைச் சோ மணந்து கொள்கிறார். சிவகுமாருடைய காதலியான ஸ்ரீப்ரியாவின் தூண்டுதல் பேரில் சிவகுமாரும் ஜெயலட்சுமியும் நாடகங்கள் ஆடி எப்படி குடும்பத்தைத் திருத்துகின்றனர் என்பதே மீதி கதை.

முத்துராமன், ஜுனியர் பாலையா, சுருளிராஜன், வெண்ணிறாடை மூர்த்தி போன்றோரும் படத்தில் உண்டு. 

Sunday, June 24, 2018

மேல் நாட்டு மருமகள்

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 10 மே 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். இதில் சோ கௌரவ வேடத்தில் சேட்டாக வருகிறார். அவருடைய மனைவியாக மனோரமா. அவரும் கௌரவ வேடம். தேவையற்ற படம். ஒரே காட்சி - அதுவும் மனத்தில் நிற்கவில்லை.

வெளிநாட்டுக்குப் படிக்க போகும் சிவகுமார் பிரென்ச் நாட்டு லாரன்சை மணந்து கொண்டு வருகிறார். அவரையே மணம் செய்து கொள்ள காத்திருக்கும் ஜெயசுதா அவருடைய தம்பி கமல்ஹாசனை மணந்து கொள்கிறார். வெளிநாட்டுப் பெண்மணி இந்திய கலாச்சாரப்படி வாழ, கமலும் ஜெயசுதாவும் மேல்நாட்டு நாகரீகத்தில் திளைக்கின்றனர். கடைசியில் அவர்கள் மனம் திருந்தி இந்திய கலாசாரத்தை அனுசரிப்பதாக கதை.

ஜுனியர் பாலையா, பூர்ணம் விஸ்வநாதன், வாணி கணபதி, உஷா உதூப், காந்திமதி, ராமதாஸ்  ஆகியோரும் நடித்துள்ளனர். 

Tuesday, June 12, 2018

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

ரா. சங்கரன் இயக்கத்தில் 1974யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த் போன்றோருடன் சோவும் நடித்துள்ளார். பரந்தாமன் என்ற கேரக்டர். படமும் நகைச்சுவையும் சுமார் ரகம். அவ்வப்போது அண்ணா அண்ணா எனக் கூப்பிட்டு தி.மு.க.வைத் தாக்குகிறார். டெல்லி குமார் அறிமுகம் இப்படத்தில். அவர் சோவுடைய அண்ணன். மனோரமா ஜோடி. சுருளி ராஜன் மகன்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே சுமார் ரகம் இப்படத்தில். பணக்கார டெல்லி குமாருடைய இறந்து போன தம்பி மகள் ஜெயசித்ரா. அவருடைய செல்ல மகள். அவருக்கு இன்னொரு தம்பியான சோ குடும்பத்தையும், தங்கையான பண்டரி பாயையும் பிடிக்காது. பண்டரிபாயுடைய மகன் சிவகுமார் ஜெயசித்ராவைக் காதலிக்கிறார். ஒரு விபத்தில் அவர் கண் பார்வை பறி போக, அவரை குமாரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயசித்ரா. அதனால் குமாருடன் அவருக்குப் பேச்சு வார்த்தை நின்று விடுகிறது.

கடன் தொல்லையால் சோ தலை மறைவாகிவிட, அவருடைய குடும்பம் குமார் வீட்டில் தஞ்சம் புகுகிறது. ஒரு கட்டத்தில் சில காரணங்களால் தாம் இறந்து விட்டதாகவும் முதலில் யாருக்குக் குழந்தை பிறக்கிறதோ அவர்களுக்கே தமது சொத்து என அவர் உயில் எழுத, சுருளியும், வயதான மனோரமாவும் முதலில் குழந்தை பெற போட்டி போடுகின்றனர். கடைசியில் சிவகுமார் கண் பார்வை கிடைக்க, அவர்களே உத்தமர்கள் என குமார் உணர, படம் முடிகிறது.

Sunday, April 22, 2018

தாய்ப் பாசம்

1974 நவம்பரில் வெளியான இப்படத்தை பி.வி.ஸ்ரீனிவாசன்  இயக்கியுள்ளார். மிகவும் சுமாரான படம்.

சோ சோமு என்ற  கேரக்டரில்  வருகிறார். இவரும் தேங்காய் சீனிவாசனும் படம் முழுக்கவே வருகிறார்கள், சிவகுமாருடைய நண்பர்களாக. ஆனால் இவர்களுடைய நகைச்சுவை இம்மியளவு கூட நன்றாக இல்லை. சோவுடைய பலம் வசனங்கள்; அவர் இப்படத்தில் தம்முடைய உடல் மொழியில் நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்; சகிக்கவில்லை.

பிரம்மச்சாரியாக இருக்க விரும்பும் சிவகுமார் அடாவடிப் பெண்ணான பிரமிளாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுடைய குழந்தை விபத்தில் இறந்து விடுகிறது. அதை மனைவியிடமிருந்து மறைத்து அக்குழந்தையைப் போலவே இருக்கும் இன்னொரு குழந்தையைத் தம்முடைய குழந்தை எனப் பொய் சொல்லி வளர்க்கிறார். கடைசியில் இறந்து போனது இவர்கள் குழந்தை இல்லை எனத் தெரிந்து படம் சுபமாக முடிகிறது.

சுமார் கதை; அழுத்தமில்லாத நடிப்பு; மனத்தில் பதியாத பாடல்கள்; காதில் பூ சுற்றும் திரைக்கதை; சோ எதற்காக இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும்?

வாசு, தங்கவேலு, உசிலை மணி ஆகியோரும் படத்தில் தோன்றுகின்றனர்.