Saturday, July 29, 2017

கண்ணன் என் காதலன்

1968 ஆண்டு, 25 ஏப்ரலில் வெளியான படம் 'கண்ணன் என் காதலன்'. ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படம். இதுதான் எம்.ஜி.ஆருடன் இணைந்து சோ நடித்த முதல் படம். 

ஒரு பணக்கார மேஜர் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் வளர்க்கிறார். தம்முடைய மகனான முத்துராமனுக்கு  ஜெயலலிதாவைத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவருக்கு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ எம்.ஜி.ஆர். மீது காதல்.

எம்.ஜி.ஆரும் வாணிஸ்ரீயும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். காந்திமதி பணக்காரப் பெண்மணி. அவருடைய பாதுகாப்பில் வாணிஸ்ரீ வளர்கிறார். அவர் பெயரில் தமது சொத்துக்களை காந்திமதி உயில் எழுதி வைத்து விடுகிறார்.

எம்.ஜி.ஆரும் வாணிஸ்ரீயும் திருமணம் செய்யவிருந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு விபத்து ஏற்பட்டு கால் ஊனம் ஆகி விடுகிறது. பின்பு, ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் இருப்பதை அறிந்து வாணிஸ்ரீ விட்டு கொடுக்கிறார். இறந்து போன வளர்ப்புத் தந்தைக்காக எம்.ஜி.ஆரும் திருமணத்துக்குச் சம்மதிக்கிறார்.

இத்தனை நாட்கள் சர்தார்ஜி டாக்டராக வலம் வந்த அசோகன் வேடம் போட்டு வந்த வில்லன் எனத் தெரிகிறது. சொத்துக்காக அவர் வாணிஸ்ரீயைக் கடத்த, எம்.ஜி.ஆர் மாறுவேடத்தில் போய் அவரைக் காப்பாற்றுகிறார். கடைசியில் ஜெயலலிதா அசோகன் தூண்டுதலால் ஊனமாக நடித்தார் என்பதும் அவர் அசோகன் தங்கை என்பதும் தெரிகிறது. வாணிஸ்ரீயை அசோகன் சுட, நடுவில் விழுந்து குண்டைத் தாங்கி உயிரை விடுகிறார் ஜெயலலிதா.

தனி காமெடி டிராக். மெயின் காமெடியன் சோ தான். தனி டிராக் மட்டுமின்றி எம்.ஜி.ஆருடன் சேர்ந்தும் சோ வருகிறார். சோ கேரக்டர் பெயர் பட்டாபி. ஒரு பெண் மீது கொண்ட காதலால், என்னத்த கண்ணையாவுடைய இறந்து போன பையனுடைய மறு பிறவியாக நடிக்கிறார். அதுதான் தனி காமெடி டிராக்கின் கதை. சோ தோன்றும் இடங்கள் எல்லாம் சூப்பர்.

இரு காட்சிகளில் சந்திரபாபு ரௌடியாகத் தோன்றுகிறார். சோவுடைய நகைச்சுவை அளவுக்கு ஏனோ சந்திரபாபுவை இப்படத்தில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. கண்ணையா காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.

முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் முத்துராமனும் தேங்காய் சீனிவாசனும் வருகிறார்கள்.

கதை மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் மட்டும் காதில் பூ சுற்றுகிறார்கள்.

எம்.எஸ். விஸ்வநாதன் இசை வழக்கம் போல காதுக்கு இனிமை. 'பாடுவோர் பாடினால் ' அருமையான பாடல்; மற்ற பாடல்களும் ஹிட்.

Friday, July 28, 2017

நீலகிரி எக்ஸ்பிரஸ்

ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் இந்தப் படம். இது 14 ஏப்ரல்1968யில் தமிழில் வெளியானது. சோ திரைக்கதை - வசனம் எழுதியுள்ளார். காமெடி கலாட்டாவுக்குக் கேட்கவா வேண்டும்? படம் முழுக்க சோ .கலக்கியுள்ளார். பெயருக்குத் தான் ஜெய்சங்கர் ஹீரோ; திருமலை மகாலிங்கம் டைரக்டர். மற்றபடி இது முழுக்க முழுக்க சோவுடைய சாம்ராஜ்யம்.

சோ பயணம் செய்யும் ரயிலில் சக பயணியான வி.எஸ். ராகவன் கொலை செய்யப்படுவார். அவரிடம் நிறைய நகைகள் இருக்கும். இன்னொரு சக பயணியான விஜயநிர்மலா சோவை மயக்கி ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கும் போது கேன்டீனில் கூட சாப்பிட அழைத்துக் கொண்டு போவார். வேண்டுமென சோ வண்டியைத் தவற விடச் செய்வார். அந்த நேரத்தில்தான் ராகவன் கொலையாவார்.

ராகவனை யார் கொலை செய்தார்கள் என்பதை சி.ஐ.டி. சங்கர் கேரக்டரில் வரும் ஜெய்சங்கர் சோவுடன் சேர்ந்து கண்டுபிடிப்பது தான் மீதி கதை. சஸ்பென்ஸ் படம் என்றாலும் இது கிட்டத்தட்ட முழு நீள நகைச்சுவைப் படம்தான். போர் அடிக்காமல் கதை நகரும். மொட்டைத் தலை அசோகன் தான் கொலை செய்திருப்பார் என ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. அதனால் படத்தில் சஸ்பென்ஸ் இல்லை. கடைசியில் விடுதி மேனேஜர் தான் அனைத்துக்கும் பாஸ் எனப் படம் முடிகிறது. அதுவும் முன்பே யூகிக்க முடிந்து விடுகிறது.

ஜெய்யின் காதலி விஜயலலிதா ஜெய் மற்றும் சோ தங்கும் ஓட்டலில் வேலை செய்கிறார். அவர்தான் முகமூடி அணிந்து கொண்டு விஜய நிர்மலாவாக மாறி கொள்ளைக்கு உடந்தை என்பது சரியான காதில் பூ சுற்றும் வேலை. கதை லாஜிக் நிறைய இடங்களில் தடுமாறுகிறது. ஆனால் ராவணன் என்ற கேரக்டரில் அப்பாவித்தனமாக நடித்து மற்றவர்களை மடக்கும்படி சோ பேசும் வசனங்களுக்காக இப்படத்தைப் பார்க்கலாம்.


ஓர் உபரி தகவல் - எல்லா வார்த்தைகளும் 'சோ சோ' என முடியும்படி சோவைக் கிண்டல் செய்து ஒரு பாடல் வருகிறது.

கலாட்டா கல்யாணம்

முழு நீள ஜாலியான நகைச்சுவைப் படம். 'காதலிக்க நேரமில்லை ' படத்தைப் போல கொஞ்சம் கூட சென்டிமென்ட், சோகம் இல்லாமல் ஜாலியாக படம் போகிறது. சண்டைக்காட்சிகள் கூட சீரியஸ் கிடையாது.

சிவாஜி வித்தியாசமான முழு நேர நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். நாகேஷும் அவரும் தோன்றும் காட்சிகள் செம ரகளை. சித்ராலயா கோபுவின் நாடகத்தை சிவாஜியே விரும்பி தயாரித்த திரைப்படம். சி.வி.ராஜேந்திரன் இயக்கம். 1968, 12 ஏப்ரலில் வெளியான படம்.

சிவாஜி ஜெயலலிதா காதலர்கள். பெண் கேட்க ஜெயலலிதா தந்தையிடம் சிவாஜி போவார். தம்முடைய நான்கு பெண்களுக்கும் ஒன்றாகத் திருமணம் செய்வதாக தங்கவேலுவுக்கு வேண்டுதல். எல்லாப் பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடும் பொறுப்பை சிவாஜி ஏற்றுக் கொள்வார். அவர் எப்படி எல்லாருக்கும் மாப்பிள்ளை தேடுகிறார் என்பதே கதை.

முதல் பெண் மனோரமா ஆண்களை வெறுப்பவர். அவரை மயக்க தம்முடைய நண்பரான நாகேஷைத் தயார் செய்கிறார் சிவாஜி. அதற்காக இருவரும் படாத பாடு படுகிறார்கள் - பயில்வானிடம் அடி வாங்குகிறார்கள்; குழந்தையைக் கடத்துகிறார்கள்; போலீசிடம் மாட்டுகிறார்கள். கடைசியில் மனோரமாவுக்கு நாகேஷைப் பிடிக்கிறது.

மூன்றாவது பெண் ஏ.வி.எம்.ராஜனைக் காதலிக்கிறார். அவர் வேறு ஒரு பெண்ணிடம் மயக்கத்தில் இருக்க, அந்த மயக்கத்தைக் கலைக்கிறார் சிவாஜி.

கடைசிப் பெண் சச்சுவுக்கு ஏற்ற வரனாக அவருடைய அசட்டுத்தனமான கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்ளும் சினிமா பைத்தியமான வி.கோபாலகிருஷ்ணன் கிடைக்கிறார்.

சிவாஜியுடைய தந்தையாக வி.எஸ்.ராகவன்.

சோவுக்கு  விட்டல் என்ற கதாபாத்திரம். தங்கவேலுவுடைய மனைவி தம்பி. சச்சுவை மயக்க பல முயற்சிகள் செய்தும் பலிக்காததால் வேறு பெண்ணைத் திருமணத்துக்குப் பிடிக்கிறார். சோவுக்கு இது ஜெயலலிதாவுடன் முதல் படம். 


முக்கிய நகைச்சுவை வேடம் சிவாஜிக்கும் நாகேஷுக்கும் தான். இருந்தாலும் சோ வரும் இடங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை.