Friday, November 10, 2017

தரிசனம்

1 பிப்ரவரி 1970யில் வெளியான இப்படத்தை  இயக்கியவர் வி.டி.அரசு. பில்டிங் காண்ட்ராக்டர் நல்லதம்பி என்ற பாத்திரத்தில் சோ தனி காமெடி டிராக்கில் கலக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக மனோரமா. தம்முடைய தங்கைக்குச் சங்கீதம் கற்றுத் தர வரும் மனோரமாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார் சோ. அதன்பின் எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் மனோரமாவைப் பாடாமல் நிறுத்தி வைக்க அவர் படாத பாடு படுவது சூப்பர் காமெடி. மனோரமாவும் போட்டி போட்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தனி டிராக்கில் காமெடி செய்வதே படத்தின் மிகப் பெரிய பலம்.

ஏ.வி.எம்.ராஜன் இரட்டை வேடத்தில் வருகிறார். பெரும்  பணக்காரரான அவர், தம்முடைய கவனமின்மையாலும் நடத்தையாலும் பணம் நஷ்டப்பட்டு அவதிப்படுகிறார். இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருடைய நண்பனான இன்னொரு  ராஜன் அவர் இடத்தில் வந்து, நொடிந்து போன வணிகத்தை நிலை நிறுத்தி, ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் குடும்பத்தினரைத் திருத்தி, தங்கைக்குத் திருமணமும் செய்து வைக்கிறார். ஓடிப் போன ராஜன் திரும்பி வருகிறார் - மனம் திருந்துகிறார்.

புஷ்பலதா ராஜனுக்கு ஜோடியாகவம், ஸ்ரீகாந்த் அவருக்குத் தம்பியாகவும் நடித்துள்ளனர். 

Sunday, November 5, 2017

டெல்லி மாப்பிள்ளை

13 செப்டம்பர் 1968யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் தேவன்; தயாரித்தவர் வி.கே.ராமசாமி. சோவுக்கு சின்னத்தம்பி என்ற கதாபாத்திரம். நாயகனுக்கு இணையான பாத்திரம். அசடாக நடித்து மற்றவர்களை வசனங்களால் மடக்கும் சுவாரசியமான கதாபாத்திரம். சோ தோன்றும் காட்சிகளில் கலகலப்புக்குக் குறைவில்லை. சோவுடைய அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும், அவருடைய நகைச்சுவை சிறப்பாக அமைந்துள்ளது. இது அவருடைய சிறந்த படங்களில் ஒன்று.

பெரும் பணக்காரரான வி.கே.ராமசாமி எதிலும் அந்தஸ்து பார்ப்பவர். அவரைத் திருத்த அவருடைய மகன்களான ரவிச்சந்திரனும் சோவும் முயல்கிறார்கள். வி.கே.ராமசாமியுடைய தங்கை  முத்துலட்சுமி. அவருடைய மகளுடன் ரவிச்சந்திரனுக்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் வி.கே. ஆனால் ரவியும் சோவும் சேர்ந்து பல திட்டங்கள் தீட்டி ஆள் மாறாட்டம் செய்து, கடைசியில் முத்துலட்சுமி மகளான சச்சுவை சோவும், முத்துலட்சுமியின் ஏழை தோழியான வரலட்சுமியுடைய மகளான ராஜஸ்ரீயை ரவியும் மனக்கின்றனர். என்ன திட்டங்கள், அதற்குரிய காட்சிகள், ஆள் மாறாட்டம் எல்லாம் நகைச்சுவையாக நகர்கின்றன. சுருளி ராஜனும் அவருக்கு ஜோடியாக மனோரமாவுக்கு சிறு வேடத்தில் நடித்துள்ளனர்.

Saturday, November 4, 2017

கன்னிப் பெண்

செப்டம்பர் 1969யில் வெளியான இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்துள்ளனர். . காசிலிங்கம்  இயக்குனர். ஜெய்சங்கர் நாயகன். வாணிஸ்ரீயும் லட்சுமியும் நாயகிகள். சோ துரைசாமி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். வில்லன் வி.கே.ராமசாமியுடைய டிரைவர் சோ. வி.கே.ஆருடன் மனோகர், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் எனப் பலரும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சீரியஸாக பேசும் போது நடுவில் புகுந்து எதிர் வசனம் பேசி அவர்கள் காலை வருவதே படம் முழுக்க சோவின் வேலை. கடைசியில் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும் சிவகுமாரைக் காப்பாற்ற ஜெய்க்கு சோ உதவுகிறார்.


படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. மேஜர் சுந்தரராஜன் நேர்மையான  போலீசுக்காரர். அவர் சுடப்பட்டு இறக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில் தம்முடைய மகனான ஜெய் போலீசில் சேர வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறார். அவர் போலீசில் சேர்ந்ததால் அவருடைய தாய் மாமனான செந்தாமரை அவரைக் காதலிக்கும் தம்முடைய மகளான லட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். வில்லன் மனோகரிடமிருந்து வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவதற்காக ஜெய் அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மருமகளை மாமியாரான வரலட்சுமி கொடுமைப்படுத்துகிறார். ஜெய்யின் தங்கை நிர்மலா சிவகுமாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். கோவில் நகைகளைத் திருடும் வி.கே.ஆர். கூட்டத்தாரின் சூழ்ச்சியால் சிவகுமார் கைது செய்யப்படுகிறார். கடைசியில் எல்லா உண்மைகைகளும் வெளியாகி, வில்லன்கள் கம்பியெண்ண, நாயகனும் அவரைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கும்படி சுபமாக முடிகிறது படம்.