Tuesday, June 12, 2018

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

ரா. சங்கரன் இயக்கத்தில் 1974யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த் போன்றோருடன் சோவும் நடித்துள்ளார். பரந்தாமன் என்ற கேரக்டர். படமும் நகைச்சுவையும் சுமார் ரகம். அவ்வப்போது அண்ணா அண்ணா எனக் கூப்பிட்டு தி.மு.க.வைத் தாக்குகிறார். டெல்லி குமார் அறிமுகம் இப்படத்தில். அவர் சோவுடைய அண்ணன். மனோரமா ஜோடி. சுருளி ராஜன் மகன்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே சுமார் ரகம் இப்படத்தில். பணக்கார டெல்லி குமாருடைய இறந்து போன தம்பி மகள் ஜெயசித்ரா. அவருடைய செல்ல மகள். அவருக்கு இன்னொரு தம்பியான சோ குடும்பத்தையும், தங்கையான பண்டரி பாயையும் பிடிக்காது. பண்டரிபாயுடைய மகன் சிவகுமார் ஜெயசித்ராவைக் காதலிக்கிறார். ஒரு விபத்தில் அவர் கண் பார்வை பறி போக, அவரை குமாரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயசித்ரா. அதனால் குமாருடன் அவருக்குப் பேச்சு வார்த்தை நின்று விடுகிறது.

கடன் தொல்லையால் சோ தலை மறைவாகிவிட, அவருடைய குடும்பம் குமார் வீட்டில் தஞ்சம் புகுகிறது. ஒரு கட்டத்தில் சில காரணங்களால் தாம் இறந்து விட்டதாகவும் முதலில் யாருக்குக் குழந்தை பிறக்கிறதோ அவர்களுக்கே தமது சொத்து என அவர் உயில் எழுத, சுருளியும், வயதான மனோரமாவும் முதலில் குழந்தை பெற போட்டி போடுகின்றனர். கடைசியில் சிவகுமார் கண் பார்வை கிடைக்க, அவர்களே உத்தமர்கள் என குமார் உணர, படம் முடிகிறது.

Sunday, June 10, 2018

கல்யாணமாம் கல்யாணம்

12 ஜனவரி 1974யில் கே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சுமார்ரகம். முழு நீள நகைச்சுவைப் படம்.

ஜெய்சங்கர் ஹீரோ. ஜெயசித்ரா இரு வேடங்களில் - அவசியமின்றி. சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுகுமாரி, ஸ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன் போன்றோர் நடித்துள்ளனர். நாயகனைத் திருமணம் செய்ய மறுக்கிறாள் நாயகி. அதனால் படிக்காத கிராமத்தானாக நடித்து நாயகியின் மனத்தை மயக்கும் கதை. பொதுவாக கிராமத்தனை வெறுக்கும் நாயகியை ஏமாற்ற பணக்காரனாக நாயகன் நடிப்பதே வழக்கம். இப்படத்தில் அது மட்டும் தான் வித்தியாசம். கடைசியில் நாயகி திருந்துவார். அதுதான் க்ளைமாக்ஸ்.

சோவுக்கு டாக்டர் வேடம். நாயகியுடைய தந்தை தேங்காய் சீனிவாசனுடைய நண்பர். படம் முழுதும் அவருடன் வருகிறார். பல யோசனைகள் சொல்வார். நாயகனையும் நாயகியையும் அவ்வப்போது வாருவார். இவருடைய பங்கு நன்றாக இருந்தாலும் படம் சுமார் என்பதால் பெரிதாக எடுபடவில்லை.

Thursday, May 17, 2018

ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் 1974, 13 நவம்பரில் வெளிவந்த இப்படம் கே.ஆர்.விஜயா நடித்த அம்மன் படம். இக்காலக்கட்டத்தில் வந்த சாமி படங்களைப் போல இதிலும் பல கிளைக் கதைகள்; பல நட்சத்திரங்கள். சுமாரான கதை-திரைக்கதை-காட்சி அமைப்பு.

ஜெமினி கணேசன், பேபி ஸ்ரீதேவி, வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், வரலட்சுமி எனப் பலரும் நடித்துள்ளனர்.

தங்கவேலு, சுருளி ராஜன், மனோரமா நடித்துள்ள ஒரு பகுதியில் சிறு வேடத்தில் சோ. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இங்கும் அரசியல் பேசுகிறார். இவருக்கு இது தேவையில்லாத படம்.