Sunday, September 22, 2019

இறைவன் கொடுத்த வரம்

ரஜினிகாந்துடன் சோ சேர்ந்து நடித்த முதல் படமிது. 1978, 22 செப்டம்பரில் வெளியான இப்படத்தை ஏ பீம்சிங் இயக்கியிருந்தார்.

விஜயகுமாரும் ரஜினியும் நாயகர்கள். படாபட் ஜெயலட்சுமியும் சுமித்ராவும் நாயகிகள். ஸ்ரீகாந்த், எம்.பானுமதி போன்றோரும் நடித்திருந்தனர்.

சோவின் கேரக்டர் பெயர் ராஜா.

ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார். பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் கேரக்டர். விஜயகுமாருடைய தங்கையான சுமித்ராவைத் திருமணம் செய்தவுடன் போலீஸ் அவரைக் கைது செய்துவிடுகிறார்கள். இதற்கிடையே வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் சுமித்ராவுடைய தோழி ஜெயலட்சுமி இச்சம்பவத்துக்குப் பிறகு கணவனுடன் ஒட்டுதலாக இருக்கிறார். ஸ்ரீகாந்த் சுமித்ராவை மறுமணம் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் இறந்துவிடுகிறார். இதற்கிடையே விஜயகுமாருக்குத் திருமணம் நடக்க, கணவன் இழந்த செய்தியை மறைக்கும் சுமித்ரா ஒரு கட்டத்துக்குப் பிறகு உண்மையை வெளிப்படுத்துகிறார். சோவின் உதவியால் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலைக்குப் போகிறார் சுமித்ரா. அங்கே மாணவராக ரஜினி சேர்கிறார். கடைசியில் உடல் நலமின்றி சுமித்ரா இறக்க, ரஜினி அவருக்குக் குங்குமமிட்டுச் சுமங்கலியாக அனுப்பி வைக்கிறார்.

பீம்சிங் இறந்த பிறகு வெளியான இப்படம், அவருடைய மோசமான படங்களில் ஒன்று. 

Sunday, March 10, 2019

யாரோ இவர் யாரோ?

1967யில் கல்கி இதழில் சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது.

ரவி கதாநாயகன். தன் முடைய முறைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதின் மூலம் தன் முடைய குடும்பத்துக்கும் தன்னுடைய மாமாவின் குடும்பத்துக்கும் உள்ள பகை மறையும் என நம்பி சென்னை வருகிறான். அவனுடன் முத்து என்ற அசட்டுக் கிராமத்தானும் வருகிறான். ரேஸ் பைத்தியமான மாமன் மனத்தை கபடம் செய்து மயக்கி, அவர் மகளைக் காதலிக்க வைக்கிறான் ரவி. முத்து தான் காதலிக்கும் பெண்ணுக்காக மிருக வைத்தியனாக வேஷம் போடுகிறான். அந்தப் பெண் வீட்டிலுள்ள நகையைத் திருட ஒரு கும்பல் முயன்று வருகிறது. அவர்கள் முத்துவைப் பயமுறுத்தி தங்கள் திட்டத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆள் மாறாட்டங்களுக்குப் பிறகு, எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து சுபமாகக் கதை முடிகிறது.


வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். தம்முடைய உடல் மொழியால் சிரிக்க வைப்பது என்பது வேறு. ஆனால் எழுத்தின் மூலமே மற்றவர்களைச் சிரிக்க வைக்க மிகுந்த நகைச்சுவை உணர்வும் திறனும் தேவை. அவை சோவிடம் நிரம்பி இருந்தன.

இதே கதை 1969யில் சில மாற்றங்களுடன் "ஆயிரம் பொய் " என்ற பெயரில், சோ  திரைக்கதை வசனம் எழுத, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளி வந்தது.  

Thursday, March 7, 2019

ஜனதா நகர் காலனி

நாடகமாக எழுதாமல் டி.விக்காகவே சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது. 80களின் கடைசியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

நகைச்சுவை, நையாண்டித்தனத்துக்குக் குறைவில்லாத கலகலப்பான தொடர். ஒவ்வொரு எபிஸோடிலும் ஏதாவது ஒரு பிரச்சினையில் காலனி மக்கள் மாட்டிக் கொண்டு தவிக்க, சோ பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க செய்யும் முயற்சிகளால் பிரச்சினை மென்மேலும் வளர, கடைசியில் அதிர்ஷ்டவசமாக நன்மையில் முடியும். தம்முடைய திட்டத்தால் தான் பிரச்சினைகள் தீர்ந்தது எனக் கூறி, "சுப்புணி இருக்க பயமேன் " என்ற வசனத்தைச் சோ சொல்வதுடன் எபிஸோடு முடியும்.

ஒன்றிரண்டு எபிசோடுகளில் அரசியலையும் சோ வம்புக்கிழுக்க மறக்கவில்லை.