Sunday, August 13, 2017

சிவாஜி நாயகன் - சோ வில்லன்

விளையாட்டுப் பிள்ளை - சிவாஜி நாயகனாக நடித்த படத்தில் சோ வில்லனாக நடித்த படம் இது. அடிதடி வில்லன் இல்லையென்றாலும் வில்லன்தான், நகைச்சுவை வில்லன்.

பிப்ரவரி 1970யில் வெளிவந்த இப்படம் கொத்தமங்கலம் சுப்பு எழுத்தில், எஸ்.எஸ்.வாசன் திரைக்கதையில், .பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான அருமையான படம். கே.வி.மஹாதேவன் இசையில் "ஏரு பெருசா" உட்பட சில நல்ல பாடல்கள் படத்தில் உண்டு. சிவாஜி, பத்மினி, சோ, வி.எஸ்.ராகவன், ராகவனுடைய மனைவியாக நடிப்பவர் (பெயர் தெரியவில்லை), டி.எஸ்.பாலையா, மனோரமா, காஞ்சனா, சிவகுமார் என எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து மிகையின்றி நடித்துள்ளனர்.

படிக்காத சிவாஜியும்அந்த கிராமத்து பண்ணையார் வி.எஸ்.ராகவனுடைய மகளான பத்மினியும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். சிவாஜியுடைய பெரியப்பாவான டி.எஸ்.பாலையா நடுவில் புகுந்து சில குழப்பங்கள் ஏற்படுத்த, சிவாஜியும் பத்மினியும் ராகவன் சம்மதமின்றி கல்யாணம் செய்து கொள்கின்றனர். பாலையா சூழ்ச்சியால் அவர்களை ஊரும் குடும்பமும் ஒதுக்கி வைக்கின்றனர். இருந்த வீடும் பறிபோகிறது.

சில வருடங்கள் கழித்து, பண்ணையார் மனம் மாறி பேரன் பெயரில் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போகிறார். இன்னும் சில வருடங்கள் கழித்து, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்தான அரசன் ராமதாஸ் உயிரை மதம் பிடித்த யானையிடம் இருந்து காப்பாற்றுகிறார் சிவாஜி. அதனால் இளவரசி காஞ்சனா நட்பு கிடைக்கிறது. அதை பாலையாவுடைய மகனான சோ தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கிறார். அதை பத்மினியும், அவருடைய மகனாக வரும் சிவகுமாரும் நம்புவதால், சிவாஜி குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. கடைசியில் சிவாஜி உயிரைப் பறிக்க சோ செய்யும் முயற்சியும் தோல்வியில் முடிய, படம் சுபமாக முடிகிறது.

கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை; அழுகை கிடையாது. அழகான பத்மினி; வீரமான சிவாஜி; இளமையான காஞ்சனா; சிரிப்புக்கு பாலையாவும் சோவும் - இப்படி எல்லா விஷயங்களும் ஒருங்கே அமைந்த சூப்பர் படம் இது.


வேலு என்பது சோவுடைய கதாபாத்திர பெயர். மனோரமா ஜோடி. நாடக நடிகராக வருகிறார். பிற்பாதியில் சிவாஜிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் வில்லனாக மாறுகிறார். கூர்மையான வசனங்கள் இல்லை என்றாலும், சிரிப்பைத் தூண்ட கூடிய வசனங்கள் மற்றும் நடிப்பு.

எங்க மாமா

14 ஜனவரி 1970ல் வெளியான ''எங்க மாமா" படம், முழுக்க முழுக்க சிவாஜியுடைய படம். படம் முழுக்க அவர் அல்லது அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் சிவாஜிக்கு முன்பு யாரும் எடுபடவில்லை.

.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளி வந்த படம். எம்.எஸ்.வி.யின் இசையில் எல்லாப் பாடல்களும் படத்தில் சூப்பர்.

ஞானம் என்ற கதாபாத்திரத்தில் சோ. போக்கிரியாக வருகிறார். நகைச்சுவை இப்படத்தில் சுமார் தான். பெண் வேடத்திலும் சாமியார் வேடத்திலும் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க சோ செய்யும் முயற்சிகள் கை கூடவில்லை.

முறை மாமனான பாலாஜியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தாய் தந்தை இல்லாத ஜெயலலிதா பட்டணம் வருகிறார். ஆனால் மைனரான பாலாஜி அவரை நிராகரித்து விடுகிறார். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவை சிவாஜி தமது வீட்டுக்கு கூட்டி வருகிறார். அநாதை இல்லம் நடத்த தேவைப்படும் பணத்தை பாலாஜியிடமிருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயாவை நவநாகரீகப் பெண்ணாக மாற்றும் சிவாஜி, பாலாஜியை  அவர் மீது மையல் கொள்ள வைக்கிறார்ஜெயாவுக்கு பாலாஜி மீது வெறுப்பும் சிவாஜி மீது காதலும் ஏற்படுகிறது. இதற்கிடையே பாலாஜி செய்யும் சில சூழ்ச்சிகள், அவற்றிலிருந்து மீண்டு எப்படி சிவாஜி ஜெயாவை மணந்தார் என்பதே கதை.


வெண்ணிறாடை நிர்மலா, தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, எஸ்.என்.லட்சுமி, சி.கே.சரஸ்வதி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிஜா சோவுடைய காதலியாக வருகிறார்

மாட்டுக்கார வேலன்

1970 ஆண்டு, 14 ஜனவரியில் வெளியான எம்.ஜி.ஆரின். வெற்றிப் படமிது. .எல்.நாராயணன் எழுத்தில், .நீலகண்டன் இயக்கிய படம்.

எம்.ஜி.ஆர். இரு வேடத்தில் நடித்த இப்படத்தில் முழுக்க முழுக்க அவருடைய ஆதிக்கம் தான். ஜெயலலிதா, லட்சுமி, சோ, சச்சு எல்லாருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வி.கே.ஆருக்கும் அசோகனுக்கும்  ஓரளவு ஸ்கோப்.

வழக்கமான மசாலா படம். லாஜிக் பார்க்காமலிருந்தால் படம் ரசிக்கும்படி உள்ளது. எம்.ஜி.ஆர் தந்தையை அசோகன் கொன்று விட, அந்த உண்மையை வி.கே.ஆர் மூலம் அறியும் எம்.ஜி.ஆர். அசோகனைப் பிடிக்க போகும் முயற்சியில் அவரிடம் அகப்பட்டு விடுகிறார். இன்னொரு எம்.ஜி.ஆர். - மாட்டுக்கார வேலன் - அவரை மீட்டெடுத்து வில்லனை போலீசில் ஒப்படைக்கிறார். இது தான் கதையின் ஒன் லைன்.


சோ லட்சுமியுடைய அண்ணனாகவும், அசோகனுடைய மகனாகவும் வருகிறார். இவருடைய பாத்திரப் பெயர் சுந்தரம். சச்சு ஜோடி. நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் ஹை லைட்டாக எதுவுமில்லை.