Monday, August 14, 2017

சிநேகிதி

1970யில் வெளியான இப்படம் ஜி.ராமகிருஷ்ணன் இயக்கியது. சுமாரான படம். திரைக்கதை குளறுபடி. பல காட்சிகள் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டிய காட்சிகளை நடிகர்கள் கோட்டை விட்டு விடுகின்றனர். க்ளைமாக்ஸ் காதில் பெரிய பூ சுற்றல் வேலை. 

சோ சுருளிராஜனுக்கு மகனாகவும் மனோரமாவுடைய காதலனாகவும் வருகிறார். நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் படத்தில் நன்றாக உள்ளன. சோவுடைய டிரேட் மார்க் அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும்  அவருடைய நகைச்சுவை ரசிக்கும்படியாகவே உள்ளது. 

பணக்கார பாரதி ஏழை சரோஜாதேவியைத் தன்னுடன் சிறு வயதிலிருந்தே வைத்துக் கொள்கிறார். இருவருமே தாய் தந்தை அற்றவர்கள். எஸ்.வி.சகஸ்ரநாமம் மேனேஜர் மற்றும் கார்டியன். அவர் செய்த குளறுபடியால் அவருடைய மகன் ரவிசந்திரனுடைய நண்பர் ஜெமினி கணேசன் சரோஜாதேவி என நினைத்து பாரதியைத் திருமணம் செய்து கொள்கிறார். இல்லறத்தில் ஈடுபாடு இல்லாமல் குடிக்கிறர். அவரைத் திருத்த சரோஜா அவரை விரும்புவதைப் போல நடிக்கிறார். இதற்கிடையே பாரதியின் மரணம், ரவிசந்திரனின் ஒரு தலைக்காதல், கடைசி காட்சிகளில் அர்த்தமின்றி மர்மப் படம் போல சில காட்சிகள் எனப் படம் நீள்கிறது.


எங்கள் தங்கம்

சில எம்.ஜி.ஆர். படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில எம்.ஜி.ஆர். படங்கள் அவருடைய ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்இப்படம் அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்திருக்காது என நினைத்தேன். ஆனால் இப்படம் ஒரு சூப்பர் ஹிட் படம் என்பதை அறிந்து அதிசயப்பட்டேன். ஒன்று இரண்டு பாடல்களைத் தவிர படத்தில் ரசிப்பதற்கு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க தி.மு.. அரசு கொள்கை பிரசார படம். அண்ணாவின் மேடைப் பேச்சு, கலைஞரின் காட்சிகள், போதாததற்கு எம்.ஜி.ஆர். நடிகர் எம்.ஜி.ஆராகவே இன்னொரு வேடத்தில் தோன்றி தி.மு.. கொள்கைகளைப் பரப்புகிறார்.

1970 அக்டோபரில் வெளிவந்த இப்படத்தை முரசொலி மாறன் எழுதியுள்ளார். தயாரிப்பும் அவரே. இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு. கலைஞர் ஆட்சிக் கொள்கையை விளக்க மாறன் தயாரித்த இப்படத்தில், பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோ ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். லாரி டிரைவர். ஆனால் பெரிய வீட்டில் நல்ல வசதியுடன் வாழ்கிறார். சென்னை சூட்டிலும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு அலைகிறார். என்ன லாஜிக்கோ?

எம்.ஜி.ஆருடைய கண் பார்வையற்ற தங்கையான புஷ்பலதாவை மானபங்க படுத்தும் .வி.எம்.ராஜன் மனம் திருந்தி அவரையே மணந்து கொள்கிறார். கொள்ளைக் கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு அவர் அவதிப்பட, திருட்டுப் பட்டத்தைத் தாம் சுமந்து கொண்டு உண்மையான குற்றவாளிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் கதையின் சுருக்கம்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். கதா காலட்சேபம் செய்வதாக வரும் காட்சி இந்தியர்களை எதற்கும் லாயக்கற்றவர்கள் என பறைசாற்றுகிறது. சென்சார் இதை எப்படி அனுமதித்தனர்?

லாறி என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரின் நண்பராகவும், லாரி க்ளீனராகவும் சோ வருகிறார். தேங்காய் சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, மனோரமாவை ஜோடியாக வைத்துக் கொண்டு நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.


அசோகன், மனோகர், வீ.எஸ். ராகவன் போன்ற நடிகர்களும் இப்படத்தில் உண்டு.  

தேடி வந்த மாப்பிள்ளை

1970 ஆகஸ்டில் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் முற்பகுதி நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. வழக்கமான மசாலாக்  கதை.

எம்.ஜி.ஆருடைய தந்தையை யாரோ கொலை செய்து விட, அதைச் செய்தவர் மேஜர் சுந்தரராஜன் என எம்.ஜி.ஆர். அம்மா எம்.வி.ராஜம்மா நம்புகிறார். அவரைத் தேடி பட்டணம் வரும் எம்.ஜி.ஆர். அவருடைய மகளான ஜெயலலிதாவைக் காதலிக்கிறார். அவர் குற்றவாளி இல்லை எனத் தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே ஜெயலலிதாவுக்குத் தொலைந்து போன ஜோதி லட்சுமி அக்காவும், அவருடைய காதலரான சோவும். நடுவிலே அசோகன் புகுந்து குட்டையைக் கிளப்ப வழக்கம் போல கடைசியில் அவர் சிறை செல்ல, முடிவு சுபம்.


சோவுக்கு வாய்ப்பு படத்தில் குறைவு. அவர் தோன்றும் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், ஹை லைட்டாக எதுவுமில்லை. அவருடைய கேரக்டர் பெயர் கர்ப்பதன். பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஜோதி லட்சுமி அவருக்கு ஜோடி. படத்தின் முடிவில் சோ ஒரு சி..டி. இன்ஸ்பெக்டர் என்பதை வெளிப்படுத்துகிறார்.