Monday, August 28, 2017

அருணோதயம்

முகத்தை மறைத்தபடி துக்ளக் பத்திரிகை. உடனே ஒரு வசனம் - "இதுலே எல்லாரையும் திட்டி எழுதியிருக்காங்களே. நாம இதைப் படிச்சா நம்மளையும் எல்லாரும் திட்டுவாங்க. " பத்திரிகை தூக்கி எறியப்படுகிறது. இப்படித் தான் சோவின் கேரக்டர் படத்தில் அறிமுகமாகிறது. 5 மார்ச் 1971யில் வெளியான இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். டாக்டர் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார்.

சிவாஜி படத்தின் நாயகன். அவருடைய அம்மா அஞ்சலி தேவி; தங்கை லட்சுமி. சிவாஜியுடைய மேலதிகாரிகளாக வி.எஸ்.ராகவனும் அவருடைய மகன் முத்துராமனும். முத்துராமனை லட்சுமி காதலிக்க, முத்துராமன் தங்கை சரோஜாதேவியை சிவாஜி காதலிக்கிறார். முத்துராமனுக்குத் தங்கையை மணமுடிக்க சம்மதிக்கிறார் சிவாஜி. அப்போது முத்துராமனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறார். அது அவர் குடிகாரர் என்பதாகும். நண்பன் சோவின் யோசனையால் தாம் பெரிய குடிகாரராகவும், குடியால் தமக்குப் பெரிய வியாதி இருப்பதாகவும் நடிக்கிறார். அதை உண்மையென நம்பி முத்துராமன் குடியை விடுகிறார். ஆனால் இந்தப் பொய் படிப்படியாக சிவாஜிக்குக் கொலைகாரன் பட்டத்தையும், திருடன் பட்டத்தையும் வாங்கிக் கொடுக்கிறது. எல்லாரும் இவரை வெறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர் முதலாளியின் வாரிசாகிறார். பல சம்பவங்களுக்குப் பிறகு எப்படி உண்மையை நிலை நாட்டுகிறார் என்பதே மீதி கதை.

சிவாஜி ஓவர் ஆக்டிங். சரோஜா தேவி குண்டாக ஆடாமல் அசையாமல் வருகிறார். அவர் சிவாஜிக்கு ஜோடி; நாயகி இல்லை. சோ மனோரமா மற்றும் நீலுவுடன் தனி டிராக்கில் காமெடி செய்கிறார். ரசிக்கும்படியாக இருந்தாலும் ஓஹோவென இல்லை. நீலு ரௌடியாக நல்ல நடிப்பு. சோவுக்கு முக்கிய வேடம்; ஆனால் அவர் எழுதிய கதை இல்லை; அவருடைய பலம் வசனங்கள். அது இதில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


இதைத் தவிர வி.கோபாலகிருஷ்ணன், குல தெய்வம் ராஜகோபால், வெண்ணிறாடை மூர்த்தி, கண்ணன், தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில்.

Thursday, August 24, 2017

குமரிக் கோட்டம்

26 ஜனவரி 1971யில் வெளியான எம்.ஜி.ஆரின் வெற்றிப் படம். . நீலகண்டன் இயக்கம். சோவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரம். தவிர்த்திருக்க வேண்டிய படங்களில் ஒன்று.

கதை வழக்கமான மசாலா கதை. எம்.ஜி.ஆருடைய தந்தையும் வி.கே.ராமசாமியும் நண்பர்கள். பணம் வந்தவுடன் நட்பை மறந்து நண்பனை அவமானப்படுத்துகிறார் வி.கே.ஆர். எம்.ஜி.ஆர் அவரை மீண்டும் ஏழையாக்கி புத்தி புகட்டுவது தான் கதை.

வி.கே.ஆருடைய மகளாகவும், ஆட்டக்காரியாகவும் இரு வேடங்களில் ஜெயலலிதா. வில்லனாக மனோகர். எம்.ஜி.ஆருக்கு உதவும் பணக்காரராக அசோகன். அவருடைய மகளாக லட்சுமி. சோவுக்கு ஜோடியாக சச்சு. எல்லாரும் வந்து போகிறார்கள் இந்த வலுவில்லாத கதையில்.


எம்.ஜி.ஆருடைய நண்பனாக சோ. பாலு என்ற கதாபாத்திரம். சில காட்சிகளில் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அவ்வளவு தான்.

Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1970யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.